உன்னாவ் பாலியல் வன்முறை வழக்கு: “பாதிக்கப்பட்ட பெண் இன்னும் சுயநினைவில்லாமல்தான் இருக்கிறார்”

0
185

சில தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே லாரி மோதியதில் படுகாயமடைந்த உன்னாவ் பாலியல் வல்லுறவு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் இன்னும் சுயநினைவில்லாமல்தான் இருக்கிறார் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கால்  பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்  சென்ற கார் மீது பதிவெண் அழிக்கப்பட்ட  லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய  அந்தப் பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், இதுகுறித்த வழக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு ஆஜராகி பேசிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, பாதிக்கப்பட்ட பெண் இன்னும் மயக்க நிலையிலிருந்து எழவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தாலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்று தெரிவித்தார்.

அதையடுத்து பேசிய பாதிக்கப்பட்ட பெண் தரப்பை சேர்ந்த வழக்கறிஞர், அவரது உடல்நிலை தேறும் வரை லக்னோ மருத்துவமனையில் வைத்தே சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் விரும்புவதாக தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று தெரிவித்தார்.

அதே போன்று, வேறொரு வழக்கின் கீழ் உத்தரப் பிரதேச சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் மகேஷ் சிங்கை டெல்லியுள்ள திகார் சிறைக்கு மாற்றம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு மாநில அரசு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்னும் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றிவிட்டதாக இன்று அம்மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, நேற்று முதல் முறையாக இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றுவது, வாகனம் மோதிய சம்பவத்தை சிபிஐ ஒரே வாரத்தில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வது, இழப்பீடு கொடுப்பது, டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் 45 நாட்களில் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கை விசாரித்து முடிப்பது உள்ளிட்ட அதிரடி உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

வழக்கின் பின்னணி

2017, ஜூன் 4 ஆம் தேதி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அன்று பாஜக எம் எல் ஏ குல்தீப் சிங் செங்கரின் உதவியாளர் ஷாஷி சிங் சிறுமிக்கு வேலை வாங்கித் தருவதாக எம் எல் ஏ வீட்டிற்கு கூட்டி வந்திருக்கிறார். எம் எல் ஏவின் மிரட்டலுக்கு பயந்து ஜூன் 4 முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை சிறுமி தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி யாருக்கும் சொல்லாமல் இருந்திருக்கிறார். ஜூன் 11 ஆம் தேதி மீண்டும் எம் எல் ஏவின் ஆட்களால் கடத்தப்பட்டு ஜூன் 19 வரை கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்படுத்தபட்டார் 

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்சிங் என்பவரும், அவரது சகோதரரும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பகுதியைச் சேர்ந்த சுரேந்திரா சிங்
என்பவரின் மகள், காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.


இந்நிலையில், புகார் அளித்த அந்த பெண்ணின் தந்தையை பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கின் அடியாட்கள் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆயுதம் வைத்திருந்ததாக சுரேந்திரா சிங்கைப் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட சுரேந்திரா சிங்கின் உடல்நிலை திடீரென்று மோசம் அடைந்தது. இதனையடுத்து உன்னாவ் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆறு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கின் சகோதரர் உட்பட நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் இந்த வழக்கை, அம்மாநில அரசு, சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இதனைத்தொடர்ந்து, பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

பாஜக எம் எல் ஏ குல்தீப் சிங் செங்கர் தற்போது சிறையில் இருக்கிறார். இந்நிலையில் பாஜக தலைவர் மற்றும் சிபிஐ அதிகாரி என்றும் கூறிக் கொண்டு இரண்டு பேர் மே 10, வியாழகிழமை குல்தீப் சிங் செங்கருக்கு எதிராக இருக்கும் வழக்கை தள்ளுபடி செய்து தருவோம் என்று குல்தீப் சிங் செங்கரின் மனைவி சங்கீதா சிங்கிடம் 1 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்கள் . எம் எல் ஏ குல்தீப் சிங் செங்கரை பாதுகாப்பாக சிறையிலிருந்து வெளியேக் கொண்டு வருவோம் என்று அவர்கள இருவரும் வாக்குறுதி கொடுத்துள்ளனர். அவர்களை கைது செய்திருக்கிறது காவல்துறை .

உத்தரப் பிரதேசத்தில் உன்னாவ் சிறுமியை பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளதாகவும், உத்திரப் பிரதேச போலீசார் குல்தீப் சிங் செங்கரை காப்பாற்ற முயற்சித்தனர் என்பதும் சிபிஐ விசாரணை தெரிவித்திருந்தது .


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here