உத்தரப் பிரதேசம், உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சிபிஐ தரப்பு முக்கிய சாட்சி ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படாமல் புதைக்கப்பட்டது .

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை இப்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில் சிபிஐ தரப்பில் முக்கிய சாட்சியான யூசுப், திடீரென இறந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படாமல் புதைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக யூசுப் வசித்து வந்த கிராம மக்கள் கூறுகையில், “எம்எல்ஏ மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டபோது, அப்பெண்ணின் தந்தையை மட்டுமல்லாது , யூசுப்பையும் போலீஸார் அழைத்துச் சென்று அடித்து உதைத்தனர். அப்போது, அவருக்கு கடுமையான உள்காயங்கள் ஏற்பட்டன. இந்நிலையில் அவரது உடல்நிலை கடந்த சனிக்கிழமை ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே திடீரென மோசமடைந்தது . மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே அவர் இறந்துவிட்டார். சிபிஐ மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உறவினர்கள் உடலைப் புதைத்துவிட்டனர்’ என்றனர்.

இப்போது சிறையில் உள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங், சதி செய்து யூசுப்பை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்பியுள்ளனர். எம் எல் ஏவின் அடியாட்கள யூசுப்புக்கு விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். எம் எல் ஏவின் அடியாட்கள் சாட்சியங்களை மிரட்டி வருவதாகவும், சிபிஐக்கு எந்த ஒரு கிராம மக்களும் தகவல் தரக்கூடாது என்று அவர்கள் மிரட்டி வருவதாகவும் எம் எல் ஏ குல்தீப் சிங்கால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் கூறியுள்ளது. எம் எல் ஏக்கு எதிரான சாட்சியங்களை அழிப்பதில் அவரின் அடியாட்கள் மிகுந்த முனைப்போடு செயல்படுகிறார்கள் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் . எனவே, யூசுப்பின் உடலை எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்
சிங் என்பவரும், அவரது சகோதரரும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அந்தப் புகாரை காவல் துறையினர் வாங்க மறுத்ததை அடுத்து, லக்னெüவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டு முன்பு, அப்பெண் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தீக்குளிக்க முயன்றார்.

இந்நிலையில், புகார் அளித்த அந்த பெண்ணின் தந்தையை பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கின் அடியாட்கள்
கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆயுதம் வைத்திருந்ததாக சுரேந்திரா சிங்கைப் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட சுரேந்திரா சிங்கின் உடல்நிலை திடீரென்று மோசம் அடைந்தது. இதனையடுத்து உன்னாவ் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருடைய உடலில் அடித்து துன்புறுத்திய காயங்கள் இருந்ததாக, அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆறு போலீசார்
பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கின் சகோதரர் உட்பட நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் இந்த வழக்கை, அம்மாநில அரசு, சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இதனைத்தொடர்ந்து, பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here