உன்னாவ் பாஜக எம்எல்ஏவால் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் சென்ற கார் மீது லாரி மோதி விபத்து; பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

0
370

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கால்  பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்  சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய  அந்தப் பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் மற்றும் உறவினர்கள் சென்ற கார் மீது லாரி மோதியதால் அந்தப் பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் சென்ற அவரது உறவினர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். 

பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் அவரது உறவினர்கள் 2 பேர், மற்றும் இந்த வழக்கின் வழக்கறிஞர் ஆகியோர் ரேபரேலி மாநில சிறையில் இருக்கும் அவரது உறவினர் ஒருவரை சந்திக்கச் செல்லும் வழியில் இந்த விபத்து நட்ந்துள்ளது. 

இந்த விபத்தில் சிக்கிய காரின் முன்பகுதி மிகவும் சிதைந்து போயுள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை விபத்து நடந்த பகுதியில் இருந்த மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  

பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணின் சகோதரி  இந்த விபத்துப் பற்றி கூறுகையில் இது விபத்து அல்ல; கொலை முயற்சி;  சாட்சிகளையும், அவரது குடும்பத்தினரையும் ஒழித்துக் கட்ட நடந்த முயற்சி என்றார். மேலும் இந்த விபத்துக் குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றூம் கேட்டுக் கொண்டார். 

இந்த விபத்து சதி. எம் எல் ஏ குல்தீப் சிங் (குற்றவாளி) சிறையில் இருந்துக் கொண்டு இத்தைய செயல்களை ஏவி விட்டுக் கொண்டிருக்கிறார். அரசும் இது குறித்து கண்டு கொள்ளவில்லை என்றும், சாட்சியங்களை ஒழித்துக் கட்டினால் இந்த வழக்கு முடிந்துவிடும் அதனால் இவ்வாறு முயற்சிக்கிறார் குற்றவாளி  என்றும் தி இந்து (ஆங்கிலம்) நாளிதளிடம் ஃபோனில் தெரிவித்திருக்கிறார் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணின் சகோதரி. 

பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் மற்றும் அவரது வழக்கறிஞர் அபாயக்கட்டத்தை தாண்டி விட்டனர் என்றும் இது கொலை முயற்சி அல்ல இருந்தாலும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம் என்றும் உத்தரபிரதேச டிஜிபி ஓ.பி.சிங் கூறியுள்ளார். 

வழக்கின் பின்னணி

2017, ஜூன் 4 ஆம் தேதி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அன்று பாஜக எம் எல் ஏ குல்தீப் சிங் செங்கரின் உதவியாளர் ஷாஷி சிங் சிறுமிக்கு வேலை வாங்கித் தருவதாக எம் எல் ஏ வீட்டிற்கு கூட்டி வந்திருக்கிறார். எம் எல் ஏவின் மிரட்டலுக்கு பயந்து ஜூன் 4 முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை சிறுமி தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி யாருக்கும் சொல்லாமல் இருந்திருக்கிறார். ஜூன் 11 ஆம் தேதி மீண்டும் எம் எல் ஏவின் ஆட்களால் கடத்தப்பட்டு ஜூன் 19 வரை கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்படுத்தபட்டார் 

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்சிங் என்பவரும், அவரது சகோதரரும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பகுதியைச் சேர்ந்த சுரேந்திரா சிங்
என்பவரின் மகள், காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.


இந்நிலையில், புகார் அளித்த அந்த பெண்ணின் தந்தையை பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கின் அடியாட்கள் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆயுதம் வைத்திருந்ததாக சுரேந்திரா சிங்கைப் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட சுரேந்திரா சிங்கின் உடல்நிலை திடீரென்று மோசம் அடைந்தது. இதனையடுத்து உன்னாவ் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆறு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கின் சகோதரர் உட்பட நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் இந்த வழக்கை, அம்மாநில அரசு, சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இதனைத்தொடர்ந்து, பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

பாஜக எம் எல் ஏ குல்தீப் சிங் செங்கர் தற்போது சிறையில் இருக்கிறார். இந்நிலையில் பாஜக தலைவர் மற்றும் சிபிஐ அதிகாரி என்றும் கூறிக் கொண்டு இரண்டு பேர் மே 10, வியாழகிழமை குல்தீப் சிங் செங்கருக்கு எதிராக இருக்கும் வழக்கை தள்ளுபடி செய்து தருவோம் என்று குல்தீப் சிங் செங்கரின் மனைவி சங்கீதா சிங்கிடம் 1 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்கள் . எம் எல் ஏ குல்தீப் சிங் செங்கரை பாதுகாப்பாக சிறையிலிருந்து வெளியேக் கொண்டு வருவோம் என்று அவர்கள இருவரும் வாக்குறுதி கொடுத்துள்ளனர். அவர்களை கைது செய்திருக்கிறது காவல்துறை .

உத்தரப் பிரதேசத்தில் உன்னாவ் சிறுமியை பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளதாகவும், உத்திரப் பிரதேச போலீசார் குல்தீப் சிங் செங்கரை காப்பாற்ற முயற்சித்தனர் என்பதும் சிபிஐ விசாரணை தெரிவித்திருந்தது 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here