உனக்கு ஏன் இத்தனை முஸ்லிம் நண்பர்கள்; குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலரை சித்ரவதை செய்த உத்தர பிரதேச போலீஸ்

0
545

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடி சிறைக்கு சென்ற சமூக ஆர்வலரிடம் நீங்கள் இந்துவாக இருந்து கொண்டு ஏன் முஸ்லீம்களை நண்பர்களாக  கொண்டுள்ளீர்கள் என்று  உத்தர பிரதேச  காவல்துறை கேள்வி எழுப்பியுள்ளது . 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இதில், லக்னோவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும் ஆசிரியருமான ராபின் வர்மாவும் அடங்குவார். சி.ஏ.ஏ-க்கு எதிராக லக்னோவில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட இவரை கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

லக்னோவில், ஹஸ்ரத்கஞ்ச் எனும் பகுதியிலுள்ள உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருக்கும்போது தி ஹிந்து ஆங்கிலம் பத்திரிகையாளர் ஒமர் ரஷீதுடன் ராபின் வர்மா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். முதலில் ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்துக்கும் பின்னர் சுல்தான்கஞ்ச் காவல் நிலையத்துக்கும் அழைத்துச் செல்லப்பட்டு பெல்ட்டால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஹஸ்ரத்கஞ்ச் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவானவர்களின் பெயர் பட்டியலில் முதலில் ராபினின் பெயர் இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன. பின்னர்தான், அவர்மீது கலவரம், கொலை முயற்சி, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்திருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

சிறைக்குள் அனுபவித்த துன்பத்தைப் பற்றி ராபின் சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், “இஸ்லாமிய மாணவன் ஒருவன் என்னுடைய பிறந்தநாளன்று எனக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தான். இதைப் பார்த்த காவலர்கள், `நீங்கள் ஒரு இந்து. உங்களுக்கு ஏன் அதிகமாக இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள்? என்று கேட்டு உடல்ரீதியாக அதிகமாகத் துன்பப்படுத்தினர். `உனக்கு நடப்பதைப் போலவே உன்னுடைய மனைவிக்கும் குழந்தைக்கும் நடக்கும்’ என்று மிரட்டினர்.

மீண்டும், `உன்னுடைய இஸ்லாமிய நண்பர்களுடன் சேர்ந்து எங்கு செல்வாய்? உனக்கு ஏன் இவ்வளவு இஸ்லாமிய நண்பர்கள்’ என்று கேட்டு அடித்தனர். அடித்தவர்கள் காவலர் உடையில் இல்லாமல் சாதாரண உடையில் இருந்தனர். என்னுடைய விரல்களை அடித்துக் காயப்படுத்தினர்” என்றார். சிறையில் இருந்தபோது போர்வை, உணவு, தண்ணீர் ஆகிய அடிப்படைத் தேவைகளை தர மறுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

தொடர்ந்துபேசிய அவர், “நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இந்தச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் நாட்டின் சிறுபான்மை மக்களை ஒடுக்குகிறது என்பதால் நான் எதிர்த்தேன். தற்போது எனக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. நீதித்துறையின் மீது நம்பிக்கை உள்ளது” என்றும் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here