உத்தர பிரதேசத்தில் ‘பிரியாணி’ பரிமாறியதற்காக முஸ்லிம்கள் 23 பேர் மீது வழக்கு

0
353

உத்தர பிரதேச மாநிலத்தின் மகோபா மாவட்டத்தில் நடந்த முஸ்லிம்களின் ஊர்ஸ் திருவிழாவின்போது இந்துக்களுக்கு அசைவ பிரியாணி பரிமாறப்பட்டதற்காக 23 முஸ்லிம்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது . 

‘மதத்தின் அடிப்படையில் இரு குழுக்களிடையே பகைமை ஊக்குவித்தல் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்துதல்’ என்ற பிரிவின் கீழ்  முஸ்லிம்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பாஜக எம்.எல்.ஏ. பிரிஜ்பூஷன் ராஜ்புத்தின் கட்டாயப்படுத்தலின் பேரில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31 அன்று மஹோபா மாவட்டத்தில் சர்காரி பகுதியில் சலாட் கிராமத்தில் ஷேக் பீர் பாபாவின் உர்ஸ் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. சூஃபியிஸ கவிஞரின் நினைவாக நடத்தப்படும் இத்திருவிழாவில் இந்துக்கள், முஸ்லிகள் உள்ளிட்ட பல்வேறு மதத்தினரும் திரளாகக் கலந்துகொள்வது வழக்கம்.

விழாவின்போது பெரிய பந்திகளில் உணவு பரிமாறுவதும் நடக்கும். அசைவம் உண்பவர்களுக்குத் தனியாகவும் சைவம் உண்பவர்களுக்குத் தனியாகவும் பந்திகளில் உணவு பரிமாறப்படுவதுண்டு. 

இது குறித்து பாஜக எம்.எல்.ஏ. பிரிஜ்பூஷன் ராஜ்புத்தின் குற்றச்சாட்டு இதுதான் –  சலாத் கிராமத்தில் சனிக்கிழமை ஊர்ஸ் திருவிழா நடைபெற்றது. இந்துக்கள் அதிக அளவில் உள்ள இந்தப் பகுதியில் நடத்தப்படும் இந்த விழாவுக்கு இந்துக்களும்  நன்கொடை கொடுப்பார்கள்.  ஒவ்வொரு ஆண்டும் 13 கிராமங்களைச் சேர்ந்த பத்தாயிரம் பேர் விழாவுக்கு வருவார்கள். இந்த ஆண்டு பாபாவின் பிரசாதமாக சாதம் பரிமாறப்பட்டது.

அதை உண்ணத் தொடங்கியபோது அதிலிருந்து எலும்பும் கறித்துண்டுகளும் கிடந்திருக்கின்றன. இந்தப் பிரச்சினை வெளிவந்தபோது, எருமை மாட்டுக்கறியை தெரியாமல் பரிமாறிய பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் அழைக்கப்பட்டார். உடனடியாக அவர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு 50,000 ரூபாய் அபராதம் கட்டுவதாக சொன்னார். ஆனால் சிலர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. என்னிடம் வந்தார்கள். நான் அந்த கிராமத்துக்குச் சென்று தெரிந்தே எங்களுடைய மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக சிலர் மீது வழக்குப் பதியப்போவதாகச் சொன்னேன். 

சலாத் கிராமத்துக்கு உட்பட்ட சர்காரி காவல் நிலையத்தில் நிலைய அதிகாரி அனூப் குமார் பாண்டே கூறுகையில் 

“பூரி சப்ஜி உண்பவர்களுக்கு தனி பந்தியும், பிரியாணி மற்றொரு பந்தியிலும் பரிமாறப்பட்டது. அசைவ உணவு உண்பவர்கள் பிரியாணி உண்டார்கள். அதற்கு பிரியாணியில் எருமை மாட்டிறைச்சி போடப்பட்டதாக வதந்தி கிளம்பியது. நான் அங்கே சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தேன்.

எம். எல். ஏ. வந்த பிறகு, மீண்டும் பிரச்சினை கிளம்பியது. ஏதேனும் தவறு நடந்திருந்தால் புகார் அளியுங்கள் என்றேன். இப்போது அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளோம்” என்கிறார்.

இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 153ஏ, 295ஏ, 420, 506 ஆகியவற்றின் கீழ் 23 முஸ்லிம்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேண்டுதல் நிறைவேற்றிய காரணத்துக்காக பிரியாணி பரிமாறிய பப்பு அன்சாரி மீதும், மற்ற 22 பேரின் மீது அவருக்கு உதவியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக எம்.எல்.ஏ-வின் தூண்டுதலால் இவர்கள் மீது வழக்கு போட்டதாக உள்ளூர்காரர் ராஜ்குமார் ரெய்க்வார் தெரிவித்துள்ளார். என்னவென்றே தெரியாமல் எங்களை இந்த வழக்கில் எம்.எல்.ஏ. கையெழுத்திட வைத்துவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here