உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு பொறுப்பேற்றது முதல் 16 மாதங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டு 78 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற பிறகு தொடர்ந்து என்கவுன்ட்டர் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் சுட்டுக்கொல்வதாக கூறப்படுகிறது. இதுவரை 78 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

என்கவுன்ட்டர் விவகாரம் அம்மாநிலத்தில் அரசியல் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அரசியல் எதிரிகள், வேண்டாதவர்களை பாஜக அரசு சுட்டுக்கொல்வதாக எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு உத்தர பிரதேச அரசு தயாரித்துள்ள சாதனை பட்டியலில் என்கவுன்ட்டரையும் இணைத்துள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு உத்தர பிரதேச அரசின் சாதனைகள் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு துறை வாரியாக சாதனைகள் இடம் பெற்றுள்ளன. இதில் அம்மாநில காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அதிர வைக்கும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற முதல் 16 மாதங்களில் 3000க்கும் அதிகமான என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 78 கிரிமினல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 43 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

838 கிரிமினல்கள் காயமடைந்துள்ளனர். 11 ஆயிரத்து 981 கிரிமினல்களின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். சிறப்பு காவல் படையினரால் 9 கிரிமினல்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சராசரியாக ஒரு நாளைக்கு 6 என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டு, 14 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் சுமார் 4 கிரிமினல்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர்.

Courtesy : Indian Express

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here