உத்தரப்பிரதேசம் 1 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்யும் – அமித் ஷா

0
217

இந்தியா 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உத்தரப்பிரதேசம் வழி ஏற்படுத்திக் கொடுக்கும்  என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா கூறியுள்ளார். 

உத்தரப்பிரதேசம்  மட்டும், ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்யும் என நம்புகிறேன் என்று அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

லக்னோவில் ரூ, 65,000 கோடி மதிப்புள்ள திட்டத்தை தொடங்கி வைக்க  பூமி பூஜைவிழாவில் கலந்து கொள்ள வந்த அமித்ஷா பேசியதாவது –  

5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா மாறுவதற்கு உத்தரப்பிரதேசம்தான் வழி ஏற்படுத்திக் கொடுக்கும். உத்தரப்பிரதேசத்தில் இருந்து ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்துக்கு வழங்கும் என நம்புகிறேன்.

உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சிக்கு மாநில அரசுடன், மத்திய அரசும் சேர்ந்து உறுதிபூண்டுள்ளது என்பதை முதலீட்டாளர்களுக்கு உறுதிதெரிவிக்கிறேன். கண்களை திறந்து வைத்து கனவு காண்பவர்கள், கனவு நனவாகும்வரை தூங்கமாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறுவார். 

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். கடந்த இரு ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கில் பல்வேறு மாறுதல்களையும், அதிரடியான நடவடிக்கைகளையும் எடுத்து முதலீட்டாளர்களுக்கு இருந்த தடையை நீக்கியுள்ளார் என்றார். 

உத்திர பிரதேசத்தில் கோயிலுக்கு தலைமை பூசாரியாக இருந்த ஒருவரை ஏன் முதலமைச்சராக தேர்ந்தெடுத்தோம் என்பது குறித்து பலருக்கும் குழப்பமாக இருக்கும். யோகி முதலமைச்சராக இருப்பார் என்று யாரும் நினைத்ததில்லை. ஒரு நகராட்சியின் தலைவராக கூட இல்லாதவரை ஏன் முதலமைச்சராக பரிந்துரைத்தோம் என்று பலர் கேட்கின்றனர். 

யோகி ஆதித்யநாத்துக்கு அனுபவம் குறைவு என்றாலும் வேலைக்கான நெறிமுறைகள் தெரிந்தவர் என்று கூறினார். பாஜகவின் நோக்கம் அர்ப்பணிப்பு, விஸ்வாசம், கடின உழைப்புதான். இதற்காகவே பாஜக ஆதித்யநாத்தை முதல்வராக அமரவைக்கும் சரியான முடிவை எடுத்தது. அவரும் சரியென நிரூபித்துள்ளார் என்று அமித் ஷா பேசினார்.