உத்தர பிரதேச மாநிலம் மேற்குப் பகுதியில் உள்ள புலந்த்சாகரில் உள்ள கிராமம் ஒன்றில் வெட்டிக் கொல்லப்பட்ட பசு மாடுகளின் சடலங்கள் இருந்ததையொட்டி திங்கள்கிழமை கலவரம் நடந்தது. இந்த கலவரத்தில் 400 பேர் கொண்ட கும்பலுக்கும் போலீசுக்கும் நடந்த மோதலின்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஒருவர் கொல்லப்பட்டார், மேலும் ஒரு வாலிபர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார் .

புலந்த்சாகரில் உள்ள மஹாவ் கிராமத்தின் வனப்பகுதியில் திங்கள்கிழமை காலை பசுவின் உடல் பாகங்கள் சிலவற்றை அப்பகுதி மக்கள் கண்டெடுத்தனர். தகவலறிந்து அப்பகுதியில் திரண்ட அப்பகுதி மக்கள் , குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே பசு வதையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினர்.

அதைத் தொடர்ந்து அந்த கிராமத்து மக்களும், பல்வேறு ஹிந்து அமைப்புகளின் உறுப்பினர்களும் அந்த பசுவின் உடல் பாகங்களை ஒரு வாகனத்தில் கொண்டு வந்து சிங்கார்வதி காவல் நிலையம் முன்பாக திரண்டனர். பசு வதை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், அருகில் உள்ள புலந்த்சாகர்-கார்ஹ் மாநில நெடுஞ்சாலையையும் மறித்து கோஷமெழுப்பினர். சம்பவ இடத்துக்கு வந்த புலந்த்சாஹர் மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் ஜா, கோட்டாட்சியர் அவினாஷ் குமார் மெளரியா மற்றும் இதர உயரதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எனினும், அதற்கு உடன்படாத ஆர்ப்பாட்டக்காரர்கள், ஒரு கட்டத்தில் காவலர்களை நோக்கி கல்வீசித் தாக்கத் தொடங்கினர். அத்துடன் காவல் நிலையம் மீதும், அதற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு வாகனங்களுக்கும் தீ வைத்தனர். காவலர்களும் தாக்கப்பட்டனர். இதையடுத்து காவலர்கள் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

வன்முறையின்போது சியானா காவல் நிலைய ஆய்வாளர் சுபோத் குமார் தன் காரில் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால் கலவரக்காரர்கள் காரை துரத்தி பிடித்துள்ளனர். காரை ஓட்டிய ஓட்டுநர் உயிருக்கு பயந்து ஓடிய நிலையில் இன்ஸ்பெக்டரை கல்லால் அடித்து விரட்டியுள்ளனர். தலையில் காயமுற்ற சுபோத் குமாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். அந்த நிகழ்வை மொபைல் வீடியோவாக எடுத்துள்ளனர். அதில் காவல்துறை அதிகாரியை சுற்றி வளைத்து நின்ற கலவரக்காரர்கள் ‘கோலி மாரோ’ (அவனை சுட்டுத்தள்ளு) என்று கத்திய படி அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

காவல்துறை அதிகாரியை சுட்டு கொன்று அவரது உடலை எஸ்யூவி வாகனத்தில் தொங்கவிட்டு சென்றனர்.
உடற்கூறாய்வு நடந்து முடிந்த நிலையில் சுபோத் குமார் சிங்கின் இடது புருவத்தில் உள்ள புல்லட் காயத்தினால்தான் இறந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. கலவரக்காரர்கள் இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியையும் அவரது மொபைல் போனையும் திருடிச் சென்றுள்ளனர்.

இன்ஸ்பெக்டரின் டிரைவர் ஆஸ்ரே கூறுகையில், “இரண்டாவது முறையாக சுபோத் குமார் மீது கலவர கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளர். தற்போது அவர் மீதும் கும்பல் தாக்குதல் நடத்தியது. உயிர் பிழைக்க நான் தப்பித்து ஓடிவிட்டேன். நான் சென்ற பிறகு அங்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

இதில் காவல்துறை அதிகாரியை கொன்ற யோகேஷ் ராஜ் என்ற நபர் முதல் குற்றவாளியை கைது செய்துள்ளனர். யோகேஷ் தான் மாடுகளின் சடலத்தைக் கண்டறிந்து புகார் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இருவர் மட்டும் சம்பவ இடத்திற்கு ஏன் சென்றனர் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் கலவரத்தில் இறந்த காவல்துறை அதிகாரியின் குடும்பத்திற்கு ரூ. 40 லட்சத்தையும் அவரின் பெற்றோருக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடாக அறிவித்துள்ளார். மேலும் அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையையும் கொடுத்துள்ளார்.

காவல்துறையினர் 60 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

2015, செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று, உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரி மாவட்டம் பிஷாடா என்னும் கிராமத்தில், முகமது அக்லாக் என்ற 50 வயது பெரியவரையும் அவரது மகனாக டானிஷையும், மாட்டுக்கறி சாப்பிட்டதாகக் கூறி, ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கியது. இத்தாக்குதலில் முகம்மது அக்லாக் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சியானா காவல் நிலைய ஆய்வாளர் சுபோத் குமார் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி ஆவார். விசாரணையின் நடுவே இவரை வாரணாசிக்கு பணி இடமாற்றம் செய்துள்ளனர்.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது)