உதயநிதி ஸ்டாலினின் ட்வீட் சரியா, தவறா?

0
235
Udhayanidhi Stalin

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை ஐபிஎல் போட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது போல், காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை தமிழ் சினிமா வெளியீட்டையும் தள்ளி வைக்கலாமே என்று ட்வீட் செய்துள்ளார் உதயநிதி. அவரது ட்வீட் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

“ஐபில் போட்டிகள் போல் தமிழ்நாட்டில் தமிழ்த் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை ஒத்திவைக்கப்படுமா? செயல்படாத மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே” – இதுதான் உதயநிதியின் ட்வீட். இதே கருத்தை சமூக வலைத்தளங்களில் பலரும், உதயநிதிக்கு முன்பே பதிவிட்டு வந்தனர். ஆனால், உதயநிதியின் இந்த அறிவுரை சரியா? இது நன்மை பயக்குமா? மேலும், உதயநிதியின் இந்த ட்வீட் ஏன் அதிக சர்ச்சைக்குள்ளானது?

உதயநிதி ஸ்டாலின் தனது இடம் சினிமா மட்டுமே என்று ஆரம்பத்தில் கூறிவந்தார். சினிமா தவிர அரசியலில் நாட்டமில்லை என்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது. ஆனால், சமீபமாக அவரது நிலையில் மாற்றம் தெரியத் தொடங்கியது. திமுகவின் போராட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். மூன்றாம் கலைஞரே என்று அவரது கட்சியினர் போஸ்டர் அடித்தனர். அதனை திமுகவினரே கடுமையாக கண்டிக்கவும் செய்தனர். உதயநிதியை அரசியலில் முன்னிறுத்துவதான தோற்றம் உருவாகியுள்ள நிலையில், உதயநிதியின் ட்வீட் ஒரு சினிமாக்காரரின் கருத்தாக அல்லாமல் ஒரு அரசியல்வாதியின் கருத்தாகவே பார்க்கப்படுகிறது. ஆகவேதான் உதயநிதியின் ட்வீட் அதிக சர்ச்சைக்குள்ளானது.

உதயநிதியின் ட்வீட் சரியா? தவறா?

ஒரு சாமானியனாக, தமிழ்நாட்டின் நலனில் அக்கறை கொண்ட உணர்ச்சிவசப்பட்ட நபராக உதயநிதியின் ட்வீட்டில் எந்தப் பிரச்சனையும் இல்லை. சினிமாவில் தயாரிப்பாளராக, நடிகராக, பெரும் அரசியல் கட்சியின் செயல் தலைவரின் மகனாக உதயநிதியின் ட்வீட்டை அணுகினால் நாம் பலவிஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. முக்கியமாக தமிழ்ப் படங்களின் வெளியீட்டை நிறுத்தினால் பலன் ஏற்படுமா? மத்திய, மாநில அரசுகளுக்கு அது நெருக்கடி தருமா?

ஐபிஎல் போட்டிகள் தமிழர்களையும், தமிழ்நாட்டையும் மட்டும் உள்ளடக்கியது அல்ல. அது இந்தியா முழுமைக்குமானது. அதன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் உள்ளனர். தமிழர்கள் அல்லாத ஏராளமான தொழிலதிபர்கள், வீரர்கள், விளம்பரதாரர்கள் முக்கியமாக கார்ப்பரேட்கள் அதில் இடம்பெற்றுள்ளனர். ஐபிஎல் போட்டியை தமிழகத்தில் நடைபெறவிடாமல் தடுத்ததன் வழியாக இந்தியா முழுமைக்கும் நமது பிரச்சனையை கொண்டு சேர்க்க முடிந்தது. மத்திய அரசுக்கு அதன் மூலம் ஒரு சின்ன நெருக்கடியை தர முடிந்தது. ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்களும் விளையாடுவதால் இந்தப் பிரச்சனை இந்தியா தாண்டியும் கவனத்தை ஈர்த்தது. கவன ஈர்ப்பு என்ற அளவில் ஐபிஎல் போட்டிகளை நடைபெறாமல் தடுத்ததில் தமிழர்கள் வெற்றி பெற்றனர் எனலாம்.

ஆனால், தமிழ் சினிமா வெளியீட்டை தடுத்தால் மேலே சொன்ன எதுவும் நடைபெறப்போவதில்லை. தமிழ் சினிமாவில் புழங்குகிறவர்களை – முக்கியமாக அடிமட்ட தொழிலாளர்களை மட்டுமே இது பாதிக்கும். தமிழகத்துக்கு வெளியே சின்ன சலனத்தைக்கூட இது ஏற்படுத்தாது. தமிழகத்திலும், “எதுக்கு காவிரி மேலாண்மை அமையுறவரை படத்தை நிறுத்துறீங்க, மொத்தமா தடை பண்ணுங்க, அப்பவாவது தமிழ்நாடு முன்னேறுதா பார்ப்போம்” என்று ஸ்டேட்டஸ் போட்டு கலாய்ப்பார்கள்.

ஐபிஎல்லை தடை செய்ததன் மூலம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்து மத்திய, மாநில அரசுக்கு சின்ன அளவில் நெருக்கடி கொடுக்க முடிந்தது. இந்த கவன ஈர்ப்பு மட்டுமே ஐபிஎல் தடையால் கிடைத்த நன்மை. தமிழ்ப்பட வெளியீட்டை நிறுத்தினால் இந்த சின்ன அளவிலான நன்மைகூட ஏற்படாது. மாறாக தமிழக சினிமா தொழிலாளிகள் பட்டினியில் விழுவார்கள். (திரைத்துறையின் சீர்த்திருத்தத்திற்காக நடக்கும் வேலைநிறுத்தத்தை இந்தப் பின்னணியில் வைத்து பார்க்கக்கூடாது).

பொழுதுப்போக்குகளை தடை செய்வதன் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்று யாராவது நம்பினால் அது மாய மானை நம்பியதற்கு சமம். உதயநிதியை ஒரு சாமானியனாக நீங்கள் கருதினால், அவரது ட்வீட்டில் எந்தப் பிரச்சனையுமில்லை, பொருட்படுத்தாமல் கடந்து செல்லலாம். அரசியல்வாதியாக கருதினால், போராட்டத்தின் விளைவை ஆராயாத அவசரத்தில் போடப்பட்டது அந்த ட்வீட். நிச்சயம் தவறுதான்.

இதையும் படியுங்கள்: பெண்களுக்கு எதிரான வழக்குகள்; முதலிடத்தில் பாஜக; 2வது இடத்தில் சிவசேனா

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

இதையும் படியுங்கள்: கவர்னரைக் காப்பாற்றும் எச்.ராஜா

இதையும் படியுங்கள்: #StopSterlite: “சுத்தமான காற்றுக்கும் நீருக்குமான மக்கள் போராட்டம் இது”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்