பாலகோட் விமானப் படை தாக்குதல் நாட்டின் பாதுகாப்புக்காக நடத்தப்பட்டது என்றால் என் ஆதரவு மத்திய அரசுக்கு உண்டு , அரசியல் ஆதாயத்துக்கு என்றால் என் ஆதரவு இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

பாலகோட் விமானப் படை தாக்குதல் தொடர்பான விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளர்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை  பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தி ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது.

இதையடுத்து இந்திய எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. இந்தப் பதில் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்தது. இதனிடையே நேற்றிரவு அவர் பத்திரமாக நாடு திரும்பினார். தேசமே அபிநந்தனின் வருகையை கொண்டாடியது.

இந்நிலையில் பாலகோட் விமானப் படை தாக்குதல் தொடர்பான விவரங்களை அரசு பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “ இந்திய விமானப் படையினரின் தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள இந்தியர்களான நமக்கு உரிமை இருக்கிறது. அத்துடன் உயிரிழந்தவர்கள் யார் யார்..? என்ற விவரமும் தெரியப்படுத்தப்பட வேண்டும். உண்மையான சம்பவம் என்னவென்று தெரிய வேண்டும். 

ஆனால் இதுவரை அதுகுறித்த எந்தத் தகவலும் இல்லை. நாங்களும் இந்தப் பாரத தேசத்தை நேசிக்கிறோம். அதேசமயம் ராணுவ வீரர்களின் உயிரை அரசியலுக்காக வைத்து விளையாடுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். உரி, பதான்கோட் ஆகிய இடங்களிலும் தீவிரவாத தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. ஆனாலும் கடந்த 5 ஆண்டுகளில் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தாக்குதல் சம்பவம் தொடர்பாக அரசாங்கத்திற்கு முன்னதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here