கடந்த வாரம் தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் 15 வயது சிறுவன் ஒருவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான். தற்கொலைக்கு முன் செல்போனில் அவன் பதிவு செய்து வைத்திருந்த வீடியோவில் பள்ளிக் கட்டணம் கட்ட முடியாததால் தற்கொலை செய்துகொள்வதாக சொல்லியிருந்தான். வகுப்பு ஆசிரியர் கட்டணத்தைக் கேட்பதும், அதற்காக அவர் வகுப்பை விட்டு வெளியே நிற்கச் செய்வதும் தனக்கு அவமானமாக இருந்ததாக அவன் அந்தப் பதிவில் சொல்லியிருந்தான். ஐந்தாயிரம் ரூபாய் கட்டணம் கட்டியிருந்தான். அதற்கு மேல் அவன் குடும்பத்தால் கட்டமுடியவில்லை. அவனது தந்தை ஒரு விவசாயி.

இந்தச் சம்பவம் நடந்த அதே நேரத்தில் பக்கத்து மாநிலமான ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். ஒருவர் பருத்தி விவசாயி. அவர் அப்போதுதான் தனது மகளைப் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வந்திருந்தார். வீட்டிற்கு வந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து நான்கு வருடங்களாக விவசாயம் பொய்த்துப் போனதால் கடுமையான கடன் சுமையில் சிக்கியிருந்த அவர் இந்த சோகமான முடிவுக்குத் தள்ளப்பட்டார். இரண்டாவது நபர் புகையிலை விவசாயி. பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இவர் ஒரு பொதுத்துறை வங்கியில் ஆறு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அது மட்டுமில்லாமல் மோசமான சந்தை நிலவரம் காரணமாக சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டிருந்தது.

தெலங்கானாவிலும் ஆந்திராவிலும் மழை பொய்த்துப் போனதாலும் வறட்சி காரணமாகவும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கர்நாடகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவியது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இங்கு 180 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருந்தனர். கடந்த பத்து ஆண்டுகளில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையில் இதுதான் உச்சம். தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இத்தனைக்கும் இங்கு நல்ல மழை பெய்திருந்தது. விவசாயமும் பொய்த்துப் போகவில்லை.

தென்னிந்தியா விவசாயத் துறையில் கடுமையான துன்பத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் மற்ற பல பகுதிகளிலும் இதே கதைதான்; குறிப்பாக மகாராஷ்டிராவிலும் உத்தரப் பிரதேசத்திலும் இந்த நிலைதான். ஆனால் அரசியல்வாதிகள் இதில் மிகக்குறைந்த கவனத்தையே செலுத்துகின்றனர். விவசாயிகள் ஏன் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ள வேண்டும்? இந்தக் கேள்வி புதிதல்ல. பல பத்தாண்டுகளாக விவசாயிகளின் தற்கொலைகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அரசும் சமூகமும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாமல் இருப்பதுதான் அபாயகரமானது.

பஞ்சாபில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தார் போராடும் காட்சி.
பஞ்சாபில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தார் போராடும் காட்சி.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau –NCRB) தரும் புள்ளி விவரப்படி 2014இல் தெலங்கானாவில் 898 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் 23.2 சதவீதம் பேர் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அந்த ஆவணங்கள் வகை பிரிக்கின்றன. விவசாய சீர்திருத்தச் சிந்தனையாளர்களும் பொருளாதார நிபுணர்களும் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் அனைவருமே விவசாயம் பொய்த்துப் போனதால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை மறைக்க முயற்சிக்கின்றனர்.

விவசாயிகளின் துன்பம் குறித்து தொடர்ந்து பேசிவரும் பத்திரிகையாளர் பி.சாய்நாத், விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையை அரசு குறைத்தே காட்டி வருவதாக கூறியிருக்கிறார். உதாரணமாக ஒரு செய்திப் பத்திரிகையில் 2014இல் 48 மரணங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளதாக அரசு தரும் புள்ளிவிவரம் வெளிவந்துள்ளது. அதே காலகட்டத்தில் 321 விவசாயிகளும் 447 விவசாயத் தொழிலாளர்களும் இறந்துள்ளதாக என்சிஆர்பி புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையான புள்ளிவிவரம் அதிர்ச்சிகரமானது. 2014ஆம் ஆண்டில் இறந்த விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 360. கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் தொடர்பான தற்கொலைகள் குறைந்து வருவதாக என்சிஆர்பி தரும் புள்ளிவிவரங்களை பெரும்பாலான கல்வியாளர்கள் ஒப்புக்கொள்வதில்லை.

ஒரு வேளை ஒருவர் என்சிஆர்பியின் புள்ளிவிவரங்களை ஏற்றுக் கொண்டாலும், அதிலும் பெரும்பாலும் தற்கொலைகளுக்கான காரணம் கடன் சுமையும் திவாலானதும்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. விவசாயத் தொழில் தோற்றுப் போவதற்கு நிறைய காரணங்களைப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். போதிய (பொது மற்றும் தனியார்) முதலீடு இல்லாமை, விவசாயக் கொள்கையில் தோல்வி, விதைகள், சந்தைப்படுத்துதல், பாசனம், இருப்பு வைத்தல், போக்குவரத்து, உரம், மண் அரிப்பு போன்றவை அதில் சில. இந்த விஷயத்தில் அரசியல்வாதிகளின் எதிர்வினையானது நாம் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்.

கடந்த வாரம் தெலங்கானா சட்டமன்றத்தில் விவசாயிகளின் தற்கொலை பற்றிய விவாதத்திற்குப் பதிலளித்த அம்மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகரராவ், கடந்த வருடம்தான், தாம் ஆட்சிக்கு வந்ததாகவும், கடந்த கால ஆட்சியாளர்களின் தவறான நிர்வாகத்தால் ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்ய தனக்கு மேலும் அவசாகம் வேண்டும் என்றும் கூறினார். இந்தப் பிரச்சனை அவையில் அமளியை ஏற்படுத்த, தெலங்கானா தலைநகரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் விவசாயி ஒருவர் மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அந்த விவசாயி முதலமைச்சரின் சொந்தத் தொகுதியான மேடக் தொகுதியைச் சேர்ந்தவர்.

ஆந்திராவில், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்குக் கடிதம் எழுதியிருந்த விவசாயி ஒருவர், முதலமைச்சர் எந்தப் பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுக்கிறார் என்று கேள்வி எழுப்பியிருந்தார். பொருளாதாரப் பிரச்சனையில் விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கும்போது முதலமைச்சரால் எப்படி தனது பேருந்துக்கு ஐந்து கோடியே 50 லட்சம் செலவு செய்ய முடிகிறது என ஆச்சரியம் தெரிவித்திருந்தார் அவர். “இந்தக் கடிதம் விவசாயிகளின் சார்பாக எழுதப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனையை நீங்கள் கவனிக்காவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன்” என்று அவர் எழுதியிருந்தார். தனது நடவடிக்கைக்கு நியாயம் கற்பித்த முதலமைச்சர் நாயுடு, நான் விவசாயிகளுக்கு ஏராளமாகச் செய்திருக்கிறேன். எனக்குப் பாதுகாப்பு முக்கியம் என்று கூறினார். கடந்த காலத்தில் கிராமப்புற வாக்குகள் குறைந்ததால் அவர் முதலமைச்சர் பதவியை இழக்க நேரிட்டதை மறந்து போயிருந்தார்.

கர்நாடக நிலைமை சற்றே வித்தியாசமானது. நல்ல மழை பெய்தபோதும் விவசாயிகளுக்குப் பொருளாதார நெருக்கடி தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. தற்கொலை செய்து கொள்பவர்களில் கரும்பு விவசாயிகள்தான் முதலிடத்தில் இருந்தனர். அவர்களது வருமானம் சுத்தமாக சீர்குலைந்திருந்தது. விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு இரண்டாயிரத்து 500 தரப்பட வேண்டும் என்று அரசு கூறினாலும், சர்க்கரை ஆலைகள் 700 ரூபாயில் இருந்து 800 ரூபாய் வரையில்தான் தந்தன. மாநிலத்தில் உள்ள மொத்தம் 58 சர்க்கரை ஆலைகளில் 16 சர்க்கரை ஆலைகள் காங்கிரஸ் அல்லது பாஜக தலைவர்களுக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடக மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருக்கின்றன. ஆனால் அந்த இழப்பீட்டுப் பணம் விவசாயிகளின் இறப்பின்போது கூட வந்து சேர்வதில்லை. இழப்பீடு உரியவருக்குப் போய் சேர்வதில்லை. பெரும்பாலான விவசாயிகளுக்கு சொந்தமாக நிலம் இருப்பதில்லை. அவர்கள் குத்தகை நிலத்தில் வேலை செய்கின்றனர். விவசாயச் சமூகத்தில் ஓர் அங்கமான பெண்கள், இந்தப் பட்டியலில் வருவதே இல்லை. ஏனெனில் அவர்களுக்கு நிலம் சொந்தமாக இருப்பதில்லை. இதில் விவசாயத் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோசம்.

தனிப்பட்ட மரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இந்த மாநில அரசுகள் வாக்குறுதி கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றன. விவசாயிகள் பிரச்சனைக்கு இடைக்கால மற்றும் நீண்டகாலத் தீர்வு காண்பதற்காக பல்வேறு குழுக்களையும் அமைக்கின்றன. கந்து வட்டிக்காரர்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வரப்போவதாக தெலங்கானா அரசு வாக்குறுதி அளிக்கிறது. கர்நாடகத்தைப் பொறுத்தவரையில் ஏற்கனவே அங்கு அதற்கான சட்டம் இருக்கிறது. ஆனாலும் அநியாய வட்டி வசூலிப்பவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். கந்துவட்டிக் கொடுமையை ஒழிப்போம் என்ற வண்ணமயமான அறிவிப்புடன் தமிழ்நாட்டிலும் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. இங்குள்ள வட்டிக்காரர்கள் மாத வட்டியோ அல்லது வருட வட்டியோ வசூலிப்பதில்லை. நாள் வட்டி, மணி நேர வட்டி, ஏன் அதற்கும் குறைவான நேரத்திற்கும்கூட வட்டி வசூலித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வட்டிகள் மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டி என்று அழைக்கப்படுகின்றன. சட்டம் போட்டாலும், இந்தச் சட்டவிரோத வட்டிக்காரர்களைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடும் தோல்வியைத்தான் தழுவியுள்ளது.

தமிழ்நாட்டு விவசாயக் கூலிகளுடன் ஆய்வாளர்கள்.
தமிழ்நாட்டு விவசாயக் கூலிகளுடன் ஆய்வாளர்கள்.

நிதி நிவாரணம் என்பது வெற்றுக் கோஷமாக இருக்கக் கூடாது. விவசாயப் பொருள் மதிப்பீடு மற்றும் விலை ஆணைய முன்னாள் தலைவர் அசோக் குலாட்டி இந்தப் பிரச்சனைக்கு ஒரு யோசனை சொன்னார். விவசாயிகளுக்கு வருமானக் காப்பீடு அல்லது வருமான உத்தரவாதம் குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்றார் அவர். ஏனெனில் கடந்த 100 ஆண்டுகளில் முதல் முறையாக அடுத்தடுத்து தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக பஞ்சத்தைச் சந்திக்கிறது இந்தியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here