அதிக எடை மற்றும் உடல் பருமனான நபர்களின் நுரையீரலில் கொழுப்பு திசுக்களை ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக கண்டறிந்துள்ளனர்.

52 பேரின் நுரையீரல் மாதிரிகளை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தபோது, பிஎம்ஐ எனப்படும்​உயரத்துக்கு ஏற்ற எடை கணக்கின்படி, நுரையீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்திருப்பதை கண்டறிந்தனர். 

உடல் எடை கூடி இருப்பவர்கள் அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஏன் ஆஸ்துமா அபாயம் அதிகரிக்கிறது என்பதையும், இந்த கண்டுபிடிப்பு மூலம் விளக்க முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உடல் எடையை குறைப்பதன் மூலம் இவர்களின் உடல் நிலையை சீராக மாற்றியமைக்க முடியுமா என்பதையும் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

அதிகரிக்கும் ஆபத்து...

ஐரோப்பாவில் உடலின் சுவாச அமைப்பு குறித்து வெளியிடப்பட்ட ஆய்வில், தானமாக வழங்கப்பட்ட நுரையீரலின் பிரேத பரிசோதனை மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்ததில் பதினைந்து பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு இல்லை என்றும், 21 பேருக்கு ஆஸ்துமா இருந்தது என்றும் கண்டறிந்தனர். மேலும், அவர்கள் பிற காரணங்களால் இறந்ததும் கண்டறிப்பட்டது. சுமார் 16 பேர் ஆஸ்துமா பாதிப்பாலேயே இறந்துள்ளனர்.

நுண்ணோக்கி மற்றும் சாயங்களை பயன்படுத்தி நுரையீரல் மாதிரிகளிலிருந்து கிட்டத்தட்ட 1,400 சுவாசவழிப் பாதைகள் குறித்து விரிவான பகுப்பாய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

பிஎம்ஐ அளவு அதிகமாக இருந்த பலருக்கு சுவாசப்பாதைகளின் சுற்றுப்புறத்தில் கொழுப்பு திசுக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். 

கொழுப்பு அதிகரித்தால் சுவாசவழிப்பாதைகள் இயல்பான நிலையிலிருந்து மாறி   நுரையிரலை வீக்கமடைய செய்யும். இதுவே அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஆஸ்துமா அபாயம் இருப்பதை விளக்குகிறது. 

நேரடி அழுத்தத்துக்கு உள்ளாகும் நுரையீரல்

அதிக எடை மற்றும் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு நிச்சயம் ஆஸ்துமா பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது அல்லது மோசமான ஆஸ்துமா அறிகுறிகள் இருக்கும் என  இந்த ஆய்வில் பணிபுரிந்த பெர்த்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் உள்ள இணை பேராசிரியர் டாக்டர் பீட்டர் நோபல் கூறுகிறார். 

அதிக எடை காரணமாக நுரையீரலில் ஏற்படும் நேரடி அழுத்தம் அல்லது அதிக எடையால் பொதுவாகவே நுரையீரல் வீக்கம் அடைந்துருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் விவரிக்கின்றனர்.

ஆனால், இவர்களின் ஆராய்ச்சி மற்றொரு செயல்முறையையும் விளக்குகிறது என்று கூறுகிறார் டாக்டர் பீட்டர் நோபல்.

நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் காற்றுப்பாதைகள் வீக்கமாக இருப்பதே ஆஸ்துமா ஏற்படுவதற்கான அறிகுறிகளின் அதிகரிப்புக்கு விளக்கம் தருகிறது என நம்புவதாக தெரிவிக்கிறார் டாக்டர் பீட்டர் நோபல்.

அதிக முக்கியத்துவம்...

உடல் எடைக்கும், சுவாச நோய்க்கும் இடையே உள்ள தொடர்பில் இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பது ஆஸ்துமா நோயாளிகளுக்கு எவ்வளவு மோசமான அறிகுறி என்பதை இது காட்டுகிறது என்று ஐரோப்பிய ரெஸ்பிரேட்டரி சொசைட்டியின் தலைவர் தியரி ட்ரூஸ்ட்டர்ஸ் கூறுகிறார்.

உடல் பருமன் உள்ள நோயாளிகள் மூச்சுப்பயிற்சி மற்றும் ஏதேனும் ஒரு செயல்பாட்டின் மூலம்தான் சுவாசிக்க முடியும் என்ற எளிய கவனிப்புக்கு அப்பாற்பட்டு இந்த ஆராய்ச்சி செல்கிறது.  உடல் பருமனுடன் தொடர்புடைய உண்மையான காற்றுப்பாதை மாற்றங்களையும் இந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

உடல் பருமன்

உடல் எடையை குறைப்பதன் மூலம் கொழுப்பு திசுக்களின் இந்த கட்டமைப்பை மாற்றியமைக்க முடியுமா என்பதை அறிய கூடுதலாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

பிரிட்டிஷ் தொராசிக் சொசைட்டி என்ற அறிவியல் குழுமதத்தின் தலைவர் டாக்டர் எலிசபெத் சாபே, உடல் எடை நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகளின் கட்டமைப்பை பாதிக்கும் என்று சுட்டி காட்டப்படுவது இதுவே முதல் முறை என்கிறார்.

தேசிய மற்றும் உலகளவில் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்துவரும் சூழலில், ஆஸ்துமா ஏன் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சனையாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும் ஆஸ்துமா சிகிச்சையை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளை அடையாளம் காண்பதற்கும் இந்த ஆய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்கிறார் டாக்டர் எலிசபெத் சாபே.

மேலும், இது ஒரு சிறிய ஆய்வு என்றும், பெரியளவில் நோயாளிகளிடமும் பிற நுரையீரல் நோய்களிலும் இந்த மதிப்பீட்டை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும் டாக்டர் சபே கூறுகிறார்.

நன்றி : bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here