ஆர் எஸ் எஸ் நாட்டின் சுதந்திரமான அமைப்புகளைக் கைப்பற்றியுள்ளது ; இந்தியா குறித்து பாஜகவின் சிந்தனைகளை என்னுள் இருக்கும் ஒவ்வொரு அணுவும் எதிர்க்கும்

0
195

மக்களவை தேர்தலில் கட்சியை வழிநடத்திய ராகுல் கடும் தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, கடந்த மே.25ஆம் தேதி ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் வழங்கினார்.

இனியும் தாமதிக்காமல் உடனடியாக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மேலும், புதிய கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் தான் ஈடுபடபோவதில்லை என்றும் தான் ஏற்கனவே ராஜினாமா செய்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி இனியும் தாமதிக்காமல் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நான் ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டதால் நான் கட்சி தலைவர் கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை ராகுல் காந்தி இன்று (புதன்கிழமை) வெளியிட்டார்.   அந்த அறிக்கையில், 

“காங்கிரஸ் கட்சியின் தலைவராக 2019 தேர்தலின் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். கட்சியின் எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டு காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன்.  

கட்சியை மறுகட்டமைப்பு செய்ய சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும். 2019 தோல்விக்கு பலரும் பொறுப்பேற்க வேண்டும். தோல்விக்கான பொறுப்பை தலைவராக நான் ஏற்காமல், மற்றவர்களை மட்டும் கூறுவது சரியாகாது. காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை நான் பரிந்துரைக்க வேண்டும் என்று சக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர். கட்சியை வழிநடத்துவதற்கான புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அவரை நான் தேர்வு செய்வது சரியாக இருக்காது. 

தலைவர் பதவியை ராஜிநாமா செய்தவுடன், கட்சிக்கான புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணியை தொடங்குமாறு காரியக் கமிட்டி உறுப்பினர்களிடம் தெரிவித்துவிட்டேன். அவர்களுக்கு அதற்கான முழு அதிகாரத்தை வழங்கியுள்ளேன். இந்த நடைமுறைக்கு எனது முழு ஆதரவையும் நான் அவர்களிடத்து தெரிவித்துள்ளேன்.    

எனது போர் என்பது வெறும் அரசியல் அதிகாரத்துக்கான எளிமையான போர் அல்ல. பாஜக மீது எனக்கு எந்த வெறுப்புணர்வோ கோபமோ கிடையாது. ஆனால், இந்தியா குறித்து அவர்கள் கொண்டுள்ள சிந்தனைகளை என்னுள் இருக்கும் ஒவ்வொரு அணுவும் எதிர்க்கும். 

இந்த போர் ஆனது புதியது ஒன்றும் அல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாகவே நம் மண்ணில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் வேற்றுமையை பார்க்கும் இடத்தில் நான் ஒற்றுமையை பார்கிறேன். அவர்கள் வெறுப்புணர்வை பார்க்கும் இடத்தில் நான் அன்பை பார்கிறேன். அவர்கள் எதை கண்டு அஞ்சுகிறார்களோ, அதை நான் அரவணைக்கிறேன். 

தேசத்துக்கான அடையாளத்தையே சிதைக்கும் நோக்கத்துடன் தான், இந்தியா மற்றும் நமது அரசமைப்புச் சட்டத்தின் மீது தற்போது தாக்குதல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

2019 தேர்தலில் ஒரு அரசியல் கட்சியை எதிர்த்து போட்டியிடவில்லை. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த அமைப்புகளுக்கும் எதிராக போரிட்டோம். மொத்த அமைப்புகளும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக திரட்டப்பட்டன. இந்தியாவின் அமைப்புகளுக்கென்றே இருக்கும் நடுநிலைத்தன்மை என்பது தற்போது அறவே இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

ஆர்எஸ்எஸ் அடையவேண்டிய இலக்குகளில், அமைப்புகளை கைப்பற்ற வேண்டும் என்பதும் ஒன்றாகும். அது தற்போது அரங்கேறிவிட்டது. நமது ஜனநாயகம் அடிப்படையில் வலுவிழந்துவிட்டது. இந்தியாவுக்கான உண்மையான அபாயம் இனிமேல் தான் உள்ளது. தேர்தல்கள், இந்தியாவுக்கான எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் இருந்து வெறும் மதச் சடங்குகளை நோக்கி நகரக்கூடும். 

இப்படி அதிகாரத்தை கைப்பற்றுவது, கற்பனை செய்யமுடியாத அளவிலான வன்முறைகளில் சென்று முடியும். அது இந்தியாவுக்கு மிகப் பெரிய வேதனையை அளிக்கும். விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள், பெண்கள், பழங்குடியினர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.

நமது அமைப்புகளை மீட்டெடுத்து, அதை உயிர்ப்பிப்பதற்கு இந்திய தேசம் ஒன்றிணைய வேண்டும். அதை உயிர்ப்பிப்பதற்கான கருவியாக காங்கிரஸ் கட்சி இருக்கும். 

இந்த இலக்கை அடைவதற்கு, காங்கிரஸ் அடிப்படையில் மாற்றம் செய்ய வேண்டும். இந்திய மக்களின் குரல்களை பாஜக நசுக்குகிறது. அந்த குரல்களை பாதுகாக்கும் கடமை காங்கிரஸ் கட்சியுடையது. இந்தியா ஒருபோதும் ஒற்றை குரலாக இருந்ததில்லை, இருக்கவும் முடியாது.  

இந்தப் போரில் இருந்து நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். நான் காங்கிரஸ் கட்சியின் விஸ்வாசமான தொண்டன். இந்தியாவுக்காக தொடர்ந்து பணியாற்றி, எனது கடைசி மூச்சு வரை அதை பாதுகாப்பேன். 

எனக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து கடிதம் மற்றும் செய்திகள் அனுப்பிய ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கும் எனது நன்றி. 

காங்கிரஸ் கட்சிக்கு அவசியமான சமயங்களிலும், அறிவுரை தேவைப்படும் நேரத்திலும் நான் எப்போதும் உடனிருப்பேன். சிந்தாந்த ரீதியில் ஆழமாக எதிர்கொள்ளாமல், அதிகாரத்துக்கான ஆசையை துறக்காமல் எதிரிகளை நம்மால் வீழ்த்த முடியாது. 

நான் காங்கிரஸ்காரனாக பிறந்தேன். இந்த கட்சி அனைத்து தருணங்களிலும் என்னுடன் இருந்துள்ளது. காங்கிரஸ் எனது ரத்தத்திலேயே ஊறிப்போய் உள்ளது. இது என்றைக்கும் நிலைத்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here