சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதன்கிழமை மீண்டும் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.568 உயர்ந்து, ரூ.28,352-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 7 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,872 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் ஜூன் மாதம் முதலே தங்கம் விலை உயர்ந்து வந்தநிலையில், சென்னையில் கடந்த 2-ஆம் தேதி ஆபரணத் தங்கம் ரூ.27 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது.  பவுனுக்கு ரூ.584 உயர்ந்து, ரூ.27,064-க்கு விற்பனை செய்யப்பட்டது.  

அதன்பிறகு, தினசரி உயர்ந்து வந்த நிலையில், சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.104 உயர்ந்து, ரூ.27,784-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.13 உயர்ந்து, ரூ.3,473-க்கு விற்பனையானது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை மொத்தம் 6 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,304 வரை உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து ரூ.45.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு 100 குறைந்து ரூ.45,700 ஆகவும் இருந்தது. 

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதன்கிழமை மீண்டும் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பவுனுக்கு ரூ.568 உயர்ந்து, ரூ.28,352-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 7 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,872 உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.71 உயர்ந்து ஒரு கிராம் ரூ.3,544க்கும், பவுனுக்கு ரூ.568 உயர்ந்து ரூ.28,352-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சீனப் பொருள்களுக்கு மேலும் 10 சதவீதம் வரியை அமெரிக்க விதித்தது, அமெரிக்காவில் ஃபெடரல் கூட்டமைப்பு வைப்பு நிதி வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்தது போன்ற காரணங்களால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தக் காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. நிகழாண்டின் இறுதிக்குள் ரூ.30 ஆயிரத்தை தொட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here