இந்தியா, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீது நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் போல நடவடிக்கை எடுக்கப்போவதாக ஈரான் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புல்வாமாவில் கடந்த மாதம் (பிப்ரவரி 14) நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த (சிஆர்பிஎப்) 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத் தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும், ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியது. இந்த கொடூர தாக்குதலையடுத்து இந்தியாவில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 26 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை சரமாரியாகக் குண்டுகளை வீசியது. இந்தத் தாக்குதலில் பயங்கவாத முகாமில் இருந்த சுமார் 300-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இதே போன்ற நடவடிக்கையை எடுக்கப் போவதாக ஈரானும் பாகிஸ்தானுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

ஈரானில் கடந்த மாதம் 13ஆம் தேதி பாதுகாப்பு படையினர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 27 வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பே இந்த தாக்குதலை நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்தே இந்த எச்சரிக்கையை ஈரான் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, ஈரானின் பாதுகாப்புப் படை தளபதி, ஜெனரல் காசிம் சுலைமானி (QASSEM SOLEIMANI), பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்தார்.

இதுகுறித்து ஈரானின் பாதுகாப்புப் படை தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி கூறியிருப்பதாவது:, ‘’நீங்கள் (பாகிஸ்தான்) எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள்? அனைத்து அண்டை நாடுகளுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கி றீர்கள். எந்த அண்டை நாட்டையாவது விட்டு வைத்திருக்கிறீர்களா? பலம் வாய்ந்த அணுகுண்டு வைத்திருக்கிற உங்களால், உங்கள் மண்ணில் செயல்படும் சில நூறு பேர்களை கொண்ட பயங்கரவாத அமைப்புகளை அழிக்க முடியவில் லையா?’’ என்று கேட்டார்.

ஈரானைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர். விரைவில் இது தொடர்பாக இந்தியாவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here