வாழைப்பழத்தில், `விட்டமின் இ’ சத்து நிறைந்தது. கருவளையங்கள், தழும்புகள் நீக்கவல்லது என்பதோடு, பாதங்களுக்கும் நலம்புரியும். இந்தப் பழத்தில் கொட்டிக்கிடக்கும் அழகு சார்ந்த நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்..

கருவளையங்கள் காணாமல்போக..

இரண்டு துண்டுகள் வாழைப் பழத்துடன் இரண்டு டீஸ்பூன் பால் சேர்த்து அரைக்கவும். இதை கண்களைச் சுற்றி அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு மசாஜ் கொடுத்து, பின்னர் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர… நாளடைவில் கருவளையங்கள் நீங்கும்.

கண் எரிச்சல் நீங்க..

வெள்ளரி, தக்காளி, வாழைப் பழம், உருளைக்கிழங்கு… இவை அனைத்தையும் ஸ்லைஸ் செய்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். குளிர்ந்ததும் அவற்றை எடுத்து, மூடிய கண்களின் மேல் ஒவ்வொன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு நிமிடங்களுக்கு வைத்து எடுக்கவும்.

கணினி திரை யில் வேலைசெய்வதால் ஏற்படும் கண் எரிச்சல் நீங்கவும், கண்கள் வறட்சியடையாமல் தவிர்க்கவும் இந்த `ஸ்லைஸ் ட்ரீட்மென்ட்’ கைகொடுக்கும்.

தழும்புகள்… இனி இல்லை

உடல் இளைப்பவர்கள், பிரசவம் ஆன பெண்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் இவர்களுக்கு எல்லாம் உடலில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் ஏற்படும். நான்கு துண்டுகள் வாழைப்பழத்துடன் இரண்டு டீஸ்பூன் ஓட்ஸ் சேர்த்துக் கலந்து தினமும் அந்தத் தழும்புகள் மேல் தடவி வந்தால், நாளடைவில் மறையும்.

கன்னங்கள் பளபளக்க..

ஜிம் செல்பவர்கள் பலர் கன்னங்கள் சுருங்கி பொலிவிழந்து காணப்படுவார்கள். அதற்கு, இரண்டு துண்டுகள் வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் தேங்காய்த் துருவல், ஒரு டீஸ்பூன் வெள்ளரிச் சாறு.. இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து, `ஜிம்’மில் இருந்து வந்த பின்னர் கன்னங்களில் `பேக்’ போட்டுக்கொள்ள, ஈரப்பதம் தக்கவைக்கப்படுவதோடு கன்னங்கள் பளபளக்கும்.

பட்டுப்போன்ற பாதங்களுக்கு..

ஒரு வாழைப்பழத்துடன் கால் கப் உருளைக்கிழங்கு சாறு கலந்து முழு பாதத்துக்கும் `பேக்’ போடவும். ஒரு மணி நேரம் கழித்து வெந் நீரில் கழுவினால்… வெடிப்பு, சொர சொரப்பு, `டேன்’ நீங்கிய மிருதுவான பாதங்கள் உங்களுக்கு சொந்தம்.

உடலை உறுதி செய்ய..

ஒரு வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் பால், கால் டீஸ்பூன் பயத்த மாவு, கால் டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் சந்தனம்… இவை அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும். உடலில் முதலில் நல்லெண்ணெய் மசாஜ் கொடுத்து, பின்னர் இந்தக் கலவையை அப்ளை செய்து, மசாஜ் கொடுத்து குளிக்கவும். இவ்வாறு செய்தால் சரும நிறம் சீராக இருக்கும்; ஆங்காங்கே கறுப்பாக மாறுவதைத் தவிர்க்கலாம். இதை வாரம் ஒரு முறை செய்யலாம்.

அலர்ஜி பிரச்னை நீங்க..

இரண்டு துண்டுகள் வாழைப் பழம் மற்றும் இரண்டு துண்டுகள் சப் போட்டா பழத்தை இரண்டு டீஸ்பூன் பாலுடன் நன்கு கலந்து, அலர்ஜி வந்த இடங்களில் தடவி காயவிட்டு அலச, சருமப் பிரச்னைகள் மறையும்.

கறுப்பு கழுத்து `பளிச்’ ஆக..

நான்கு துண்டுகள் வாழைப்பழம், நான்கு துண்டுகள் பப்பாளி, இரண்டு டீஸ்பூன் பாதாம் பொடி, கால் கப் தேங்காய்ப்பால், சிறிது குங்குமப்பூ… இவை அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும். முழு கழுத்துக்கும் அதை `பேக்’ போட்டு அலசவும். தைராய்டு பிரச்னையால் கழுத்து கறுப்பு அடைந்தால், இது நீக்கும். மேலும், இடுப்புப் பகுதியில் உள்ளாடை காரணமாக ஏற்படும் கறுப்படைதலையும் இது போக்கும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்