ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த ஒருவரைக் கொலை செய்த குற்றவாளிகளை, கருணை இன்றி சுட்டுக் கொல்லுங்கள் என்று கர்நாடக முதல்வர் கூறிய வீடியோ வைரலாகியுள்ளது.

மாண்டியா பகுதி ஐக்கிய ஜனதா தளக் கட்சி நிர்வாகி பிரகாஷ் நேற்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கர்நாடகாவில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாண்டியா பகுதியில் நிர்வாகியாக இருந்தவர் பிரகாஷ். இவர் நேற்று மாலை தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்தவர்கள் அவரை இடை மறித்து, வலுக்கட்டாயமாக வெளியே வரச்சொல்லி அவரை அடித்துக் கொன்றனர்.

பின்னர் காரிலேயே அவரது சடலத்தை போட்டு விட்டு அந்த கும்பல் அப்படியே சென்று விட்டது. இந்த விவகாரம் முதல்வர் குமாரசாமிக்கு கிடைத்தபோது, அவர் ஏதோ ஆய்வுப் பணியில் இருந்ததாக தெரிகிறது.

அப்போது அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், செல்போனை எடுத்து ஒருவரிடம் பேசிய குமாரசாமி, பிரகாஷ் மிகவும் நல்ல மனிதர், அவரை ஏன் கொன்றார்கள் என்று தெரியவில்லை?, குற்றவாளிகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லுங்கள், எந்த பிரச்னையானாலும் பரவாயில்லை என்று கூறினார்.

இதனை அங்கிருந்த பொதுமக்களும், ஊடகங்களும் வீடியோவாகப் பதிவு செய்ய, அந்த வீடியோதான் இன்று வைரலாகியுள்ளது.

ஒரு முதல்வரே இப்படி உணர்ச்சிவசப்பட்டு குற்றவாளிகளை சுட்டுக் கொல்லுங்கள் என்று சொல்லலாமா என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இது குறித்து செய்தியாளர்கள் குமாரசாமியிடம் கேட்டபோது, அப்போது உணர்ச்சிவசப்பட்டுப் பேசியது அது. அந்த கொலைக்காரர்கள் ஏற்கனவே 2 கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள். சிறையில் இருந்து பெயிலில் வந்து எங்கள் கட்சி நிர்வாகியை கொலை செய்துள்ளனர் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்