ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொன்றது ஏன்? :டிரம்ப்

0
157

ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின் பேரில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்தபடியாக உச்ச அதிகாரம் படைத்த தலைவராக காசிம் சுலைமானி ஈரானின் இருந்து வந்தார். இதனால் அவரது கொலை ஈரானில் பெரும் பதட்டத்தைஏற்படுத்தியது. காசிம் சுலைமானியின் கொலைக்கு பழி தீர்ப்போம் என அயத்துல்லா அலி காமெனி கடும் எச்சரிக்கை விடுத்தார்.

அதன்படியே காசிம் சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியது.

ஆனால் ஈரான் கூறியதை முற்றிலுமாக நிராகரித்த அமெரிக்கா, ஏவுகணை தாக்குதலில் லேசான சேதங்களே ஏற்பட்டதாகவும் தங்கள் நாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தது.

இந்நிலையில் ஈராக் உள்பட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 4 அமெரிக்க தூதரகங்களை தாக்குவதற்கு காசிம் சுலைமானி சதி திட்டம் தீட்டியதாகவும், அதனாலேயே அவரை கொல்ல உத்தரவிட்டதாகவும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப், காசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரம் குறித்து முதல் முறையாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சுலைமானி கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த தாக்குதலை ஈரான்தான் நடத்தியது.

அந்த தாக்குதலுக்கான ஏற்பாடுகளை செய்தது யார் என்பது உங்களுக்கு தெரியும். அவர் தற்போது உயிரோடு இல்லை. அவர் பாக்தாத் தூதரகத்தை மட்டும் குறிவைக்கவில்லை.

இது தவிர மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் 3 அமெரிக்க தூதரகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்துவதற்கு அவர் சதி திட்டம் தீட்டியிருந்தார். இதுபற்றிய உளவு தகவல்கள் கிடைத்த பிறகு அவரை கொலை செய்வதற்கான உத்தரவை பிறப்பித்தேன். என அவர் கூறினார்.

இதற்கிடையே, ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்காக ஈரான் மீது அமெரிக்க புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஈரானிய ஆட்சியின் உலகளாவிய பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்த இந்த பொருளாதார தடைகள் அறிவிக்கப்படுவதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவ் முனுச்சின் கூறினார்.

இந்த தடைகள் ஈரானின் கட்டுமானம், உற்பத்தி மற்றும் சுரங்க தொழில்களை பாதிக் கும் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here