ஈரானுடன் உள்ள உறவு சிறப்பாகவே இருக்கிறது என்றும் 3ஆவது நாட்டின் தலையீட்டை ஏற்க மாட்டோம் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் மாதம் 4ஆம் தேதிக்குப் பிறகு, நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டது .

நிறுத்தாத நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது . ஈரானில் இருந்து இந்தியா அதிக அளவு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. ஈரானிலுள்ள சபஹார் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியையும் இந்தியா மேற்கொண்டுள்ளது.

எனவே, அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி, ஈரானுடன் இந்தியா தொடர்ந்து நல்லுறவு வைத்து கொள்ளுமா? என்ற கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் புதன்கிழமை பதிலளித்துப் பேசினார்.

ஈரானுடனான உறவை, சுதந்திரமாக இந்தியா முடிவு செய்யும். இதில் 3ஆவது நாட்டின் தலையீட்டுக்கு இடம் கொடுக்க மாட்டோம். இந்த விவகாரத்தில் நமது நாட்டின் நலன்களைக் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் நேரிடும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது’ என்றார்.

அமெரிக்காவைச் சேர்ந்த உயரதிகாரிகள் குழு, இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்து, டெல்லியில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலேயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்கடுத்த நாளே, ஈரானுடனான உறவில் 3ஆவது நாட்டின் தலையீட்டை ஏற்க மாட்டோம் என இந்தியா அறிவித்துள்ளது .

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நவம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியா, சீனா உட்பட அனைத்து நாடுகளிடமும் அமெரிக்கா கேட்டது . மீறி வாங்கினால் தடைகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பேச்சைக்கேட்டு எங்களிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் நாங்கள் அளிக்கும் சிறப்புச் சலுகைகள், முன்னுரிமைகளை இழக்க வேண்டி வரும் என்று ஈரான் இந்தியாவை எச்சரித்தது .

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்