கச்சா எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. தொடர்ந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அனுப்பும் 3வது பெரிய நாடு ஈரான் .

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நவம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியா, சீனா உட்பட அனைத்து நாடுகளிடமும் அமெரிக்கா கேட்டுள்ளது. மீறி வாங்கினால் தடைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா அறிவித்துள்ளது .

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா அதன் பிறகு உலக அளவில் ஈரானை தனிமைபடுத்த பல நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறது . ஈரான் ஒரு நாளைக்கு 24 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது. ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை இருந்த 2013- 2015 ஆண்டுகளில் ஈரான் 15 லட்சம் பேரல்களை மட்டுமே ஏற்றுமதி செய்தது

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும் என்று டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை பிற நாடுகள் வாங்குவது தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் டிரம்ப் எடுத்து வருகிறார்.

ஈரானிடமிருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் வாங்கும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா நேரடியாகவே மிரட்டல் விடுத்துள்ளது.

“சீனா, இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று ஏற்கெனவே அறிவித்து விட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி, நவம்பர் மாதத்திற்குள் முழுமையாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும்.

பெரும்பாலான நாடுகள் எங்களது முயற்சிக்கு ஆதரவளித்துள்ளன. எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காத நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கவும் தயங்க மாட்டோம். வரத்தக ரீதியாக அந்த நாடுகளை முடக்குவதை தவிர வேறு வழியில்லை. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் ஏன் என்ற கேள்வி கேட்காமல் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்கு கூறியுள்ளோம் என்று அமெரிக்க அரசுத்துறை அதிகாரி கூறினார்.

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் விரைவில் அமெரிக்கா செல்கின்றனர். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சவார்த்தை நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி வகித்தபோது, வியன்னாவில் ஈரானுடன் அணுசக்தி தொடர்பாக அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், சீனா, பிரிட்டன் ஆகிய 5 வல்லரசு நாடுகளும், ஜெர்மனி, ஐரோப்பிய யூனியன் ஆகியவையும் 2015ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டன.

(இச்செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here