இஸ்ரேலில் நடப்பது போல் இந்தியாவிலும் பிரதமரை மக்கள் பதவி விலகச் சொல்வார்கள் -மோடியை விளாசும் சிவசேனா

Shiv Sena MP Sanjay Raut on Sunday said people may seek Prime Minister Narendra Modi's resignation if problems like job losses are not resolved.

0
386

வேலையின்மை, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை மோடி அரசு சரி செய்யவில்லையென்றால் இஸ்ரேலில் நடப்பதுபோல் இந்தியாவிலும் பிரமரை மக்கள் பதவி விலகச் சொல்வார்கள் என்று சிவசேனா கூறியுள்ளது. 

உலகளவில் கொரோனா கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளிலும் பாதிப்பு எண்ணிக்கை ஒரு புறம் அதிகரிக்க மறுபுறம் பொருளாதார பாதிப்பு, வேலையின்மை அதிகரிப்பு என மக்கள் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவித்து வருகின்றனர். இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் மக்கள் பலரும் வேலைகளை இழந்து அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வேலை இழந்த மக்களுக்கான வாழ்வாதாரத்துக்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்வியும் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வேலையிழப்பு உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக சிவசேனா  பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை சாமனாவில் அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். கட்டுரையில், “கொரோனா வைரஸ் தொடர்பான நெருக்கடியால் சுமார் 10 கோடி மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 40 கோடி குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக, மாத சம்பளத்தை நம்பியிருக்கும் நடுத்தர வர்க்க மக்கள் வேலை இழந்துள்ளனர். தொழில்துறையில் சுமார் ரூபாய் நான்கு லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. வெறும் நம்பிக்கையுடனும் வாக்குறுதிகளுடனும் அவர்களால் வாழ முடியாது. ராமரின் வனவாசம் கூட முடிந்துவிட்டது. ஆனால், தற்போதைய நிலைமை கடினமாக உள்ளது என்பதை பிரதமர் ஒப்புக்கொள்வார். யாரும் தங்களது வாழ்க்கையை இவ்வளவு பாதுகாப்பற்றதாக உணர்ந்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் நடக்கும் போராட்டத்தை குறிப்பிட்ட சஞ்சய் ராவத், “இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிகளைச் சரியாக கையாளாதது தொடர்பாக அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை மக்கள் வைத்துள்ளனர்.  இந்தியாவிலும் இதேமாதிரியான போராட்டங்கள் நடக்கக்கூடும். ரஃபேல் விமானங்கள் அம்பாலாவுக்கு வரும்போது 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. முன்னதாக, சுகோய் மற்றும் மிக் ரக விமானங்கள் வரும்போது இதுபோன்ற கொண்டாட்டம் ஒருபோதும் இல்லை. வெடிகுண்டு மற்றும் ஏவுகணை ஆகியவற்றை சுமக்கும் திறன் கொண்ட ரஃபேல் விமானங்களால் வேலையின்மை மற்றும் பொருளாதார நெருக்கடியை அழிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது சிவசேனா. 

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அம்மாநிலத்தில் ஜனதிபதி ஆட்சியைக் கொண்டுவர வாய்ப்பு உள்ளதாகவும் அவர் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். தங்கத்தின் விலை உயர்ந்து வருவதையும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க எம்பி பிரக்யா தாக்கூர் அனுமன் மந்திரம் கூறினால் கொரோனா பாதிப்பு நீங்கும் என்கிறார். பா.ஜ.க-வின் தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டா மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என்கிறார். ஆனால் பொருளாதார நெருக்கடி , வேலைவாய்ப்பின்மை பற்றி யாரும் பேசவில்லை. நெருக்கடியான சூழல், வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று கூறுவது எளிதான ஒன்று. ஆனால், மக்கள் இந்த நெருக்கடியான சூழலை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது” என்றும் சிவசேனா குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here