இஸ்ரேலின் விவசாய தொழில் நுட்பம் தமிழகத்துக்கு கைகொடுக்குமா?

0
551


இரண்டாம் உலகப்போருக்கு பின் 1948-ம் ஆண்டு மீண்டும் உருவாக்கப்பட்டது இந்த நாடு. அதன் பிறகு சிதறுண்ட யூதர்கள் தங்கள் சொந்த தாயகத்துக்கு வரத்தொடங்கினர். முற்றிலும் பாலைவனத்தையும், சுற்றிலும் பகை நாடுகளையும் வைத்துக் கொண்டுள்ள அந்நாட்டின் வளர்ச்சி, வியப்பை ஏற்படுத்துகிறது. 

குறிப்பாக, விவசாயத்தில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறது என்றால் அது அவர்களின் நீர் மேலாண்மை தான்.

இஸ்ரேல் மலைகளும், பாலைவனமும் கொண்ட ஒரு வறண்ட நாடு. இஸ்ரேலின் வடக்கு பக்கத்தில் மலைகளும், தெற்கு பக்கத்தில் பாலைவனமும் அமைந்து உள்ளன. இஸ்ரேல் நாட்டின் மொத்த நிலப்பரப்பு 27,800 சதுர மைல். அதில் 4,360 சதுர மைல் மட்டுமே பயிர் செய்யத் தகுதி வாய்ந்தது. ஆனால் தண்ணீர்ப் பற்றாக்குறையால் சுமார் இரண்டாயிரம் சதுர மைல் மட்டும்தான் விவசாயம் செய்கிறார்கள். இன்று உலகில் ஆரஞ்சு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இஸ்ரேல் நாட்டுக்கு ஒரு தனி இடம் உள்ளது.

விவசாயத்தில் புதுப்புது யுக்திகளைப் புகுத்தி சாதித்து வரும் நாடு இஸ்ரேல்.  தான் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி விவசாயம் செய்து உலக நாடுகளை வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது, இஸ்ரேல். உலகிலேயே இந்த நாட்டில்தான் அதிக அளவிலான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இஸ்ரேலில் மழையின் அளவு மிகக் குறைவு. வெயில் அதிக அளவு சுட்டெரிக்கும். நாட்டின் வடக்குப் பகுதியில் மழை சிறிதளவில் பெய்தாலும், தெற்குப் பகுதி எப்போதும் காய்ந்த பூமிதான். ஜோர்டான் நதியின் நீரை ‘கலிலோ’ என்னும் ஏரியில் சேமித்தனர். இந்த ஏரி பூமியின் மட்டத்திலிருந்து 700 அடிக்கும் கீழே இருக்கிறது. இந்த நீரை 800 அடிக்கு மேலே பம்ப் மூலம் எடுத்து இஸ்ரேலின் மத்திய மற்றும் தெற்குப் பகுதியில் விவசாயம் பார்க்கிறார்கள். நாட்டில் கொஞ்சம் பெய்யும் மழையைக்கூட வீணாக்காமல் சேமித்து சொட்டுநீர் பாசனம் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் பயிர்களை வளர்க்கிறார்கள். கழிவு நீரை முழுமையாகச் சுத்திகரித்து விவசாயத்திற்கு ஏற்ப பயன்படுத்தி வருகிறார்கள். 

இஸ்ரேல் விவசாயத்தில் உபயோகப்படுத்தப்படும் தண்ணீரில் 75 சதவிகிதம் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்தான் என்கிறது புள்ளிவிவரம். நீரைக் குறைந்த அளவில் உபயோகித்துப் பல யுக்திகளைக் கையாண்டு விவசாயத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது, இஸ்ரேல். தாவரத்திற்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அந்த அளவிற்கு மட்டுமே கொடுக்கிறார்கள். அதிக அளவில் தண்ணீரைப் பாய்ச்சி நீரை வீணாக்குவது இல்லை. அதேபோல பயிர்களின்மீது மல்ஷிங் சீட் எனப்படும் பிளாஸ்டிக் உறையைப் போர்த்தி, தேவையான அளவு மட்டுமே சூரிய வெப்பத்தைப் படும்படி செய்கிறார்கள். அதிகமான வெயில் பட்டால் தாவரத்தின் நீர்ச் சத்து ஆவியாகிவிடும் என்பதால்தான் இந்தப் பாதுகாப்பு முறை. 

இஸ்ரேல் என்னதான் செய்தது? 
இஸ்ரேல் ஒன்றும் தமிழ்நாட்டைபோல பசுமையான வளங்கள் மிகுந்த பகுதி கிடையாது. நாட்டில் 60 சதவீதம் பாலைவனம் மட்டும்தான், சுட்டெரிக்கும் வெயில், வடக்கு பகுதிக்கு மட்டுமே பொழியும் மழை… இன்று தமிழகம் சந்திக்கும் தண்ணீர் பஞ்சத்தைவிட 1000 மடங்கு அதிகமான பஞ்சம்.. அப்படிப்பட்ட நாடு இன்று தண்ணீரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளக்கு வளர்ந்திருக்கிறது? இது எப்படி சாத்தியமானது? 

1959 ஆம் ஆண்டிலேயே, நீர் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றி நீர்வளங்களை பொதுச் சொத்தாக மாற்றியது இஸ்ரேல்.  விவசாயத்திற்கு போதுமான நீர் விநியோகம் செய்வது, குடிப்பதற்கு மற்றும் மக்கள் உபயோகப்படுத்த தேவையான தண்ணீரை தங்கு தடையில்லாமல் விநியோகிப்பது, இவைதான் இந்த சட்டத்தின் முக்கியமான நோக்கம். இந்தச் சட்டம் மூலமாக நீர்வளங்கள் சுரண்டப்படுவது தடுக்கப்பட்டதோடு, தண்ணீர் ஒதுக்கீடும் ஒழுங்குபடுத்தப்பட்டது.

2010 ம் ஆண்டு இஸ்ரேலின் ஒட்டுமொத்த தண்ணீர் தேவை, 24 லட்சத்து 80ஆயிரம் கோடி லிட்டர். ஆனால்,  2020ம் ஆண்டில் 26  லட்சத்து 80 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்பதை முன்னரே கணித்து பல திட்டங்களை வகுத்து நீர் தேவை பூர்த்திசெய்யவிருக்கிறது.

இஸ்ரேல் கொண்டுவந்த சிறந்த திட்டங்களில் முதன்மையானது கடல் நீரை குடிநீராக்கும் திட்டம். உலகிற்கே இந்த திட்டத்தில் இஸ்ரேல் முன்னோடியாக திகழ்கிறது.  மொத்த குடிநீர் விநியோகத்தில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களின் மூலம் 50 சதவீதமும், நிலத்தடி நீர் ஆதாரங்கள் மூலம் 40 சதவீதமும், நீர்நிலைகளில் இருந்து 10 சதவீதமும் பெறப்படுகிறது. இதன்மூலமாக நாட்டில் உள்ள கிட்டத்தட்ட 97 சதவீத மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது இஸ்ரேல்.

வேளாண்மையில் சொட்டு நீர் பாசன முறையை உருவாக்கி, அதை வெற்றிகரமாக பயன்படுத்திய நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது இஸ்ரேல். குடிநீர் குழாய்களில் ஏற்படும் சிறு துளைகள் மற்றும் உடைப்புகளை உடனடியாக கண்டறிந்து, அதை ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட ரோபாக்களின் உதவியுடன் உடனுக்குடன் சரி செய்யப்பட்டுகிறது. இதன்மூலம் தண்ணீர்  வீணாவது 25%-75%  தடுக்கப்படுகிறது. 

இதோடு மட்டுமில்லாமல், இஸ்ரேல் முழுவதிலும் மொத்தம் 120 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு சுமார் 90 சதவீத கழிவுநீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது. பாலைவனத்தில் செயற்கை ஏரியை உருவாக்கி, அதில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை சேமித்து வேளாண் பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர். இந்த திட்டங்களால் தண்ணீர் பிரச்னைகள் தீர்ந்ததோடு மட்டுமில்லாமல் நாட்டின் பொருளாதாரத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது…  நீர் மேலாண்மைக்கான உபகரணங்கள் தயாரித்து ஏற்றுமதி செய்வதில் மட்டும் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடப்பதாக தெரிவிக்கின்றன புள்ளிவிபரங்கள்.

1948-ம் ஆண்டு 74 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்த இஸ்ரேல், தற்போது 4 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறது. நம் நாட்டில் விவசாயம் செய்வதுபோலவே அங்கும் நிலத்தைத் தனியாக பிரித்து விவசாயம் செய்து வருகிறார்கள். அதேபோல அரசுக்குச் சொந்தமான இடத்தில் குழுக்களாக விவசாயம் செய்து பங்கு போட்டுக் கொள்ளும் வழக்கமும் இஸ்ரேலில் உள்ளது. கோதுமை, சோளம், காய்கறிகள், பழங்கள் என அதிக அளவில் விளைவித்து சாதித்துக் கொண்டிருக்கிறது. தக்காளி, வெள்ளரி, சுரைக்காய், வாழை, பேரிச்சை, ஆப்பிள், செர்ரி, பேரிக்காய் உள்ளிட்டவை அதிக அளவில் விளைகிறது. எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை ஏற்றுமதி செய்வதில் முதலிடம் இஸ்ரேலுக்குத்தான். அதேபோல ஒயின் உற்பத்தி, பருத்தி உற்பத்தி எனப் பலவற்றில் முன்னணியில் இருக்கிறது. லில்லி மலர்களைப் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டு உலக சாதனை படைத்திருக்கிறது இஸ்ரேல்.

அதிக அளவில் மாடுகளை வைத்து பால் உற்பத்தியிலும் முன்னணி இஸ்ரேல்தான். மரங்களால் கிடைக்கும் அத்தனை பயன்களையும் முறையாக பயன்படுத்திக் கொள்ளும் உலகின் ஒரே நாடு இஸ்ரேல். புதிய தொழில்நுட்ப நீர்ப் பாசனம், வறண்டப் பாலைவனத்தில் பயிர் செய்யும் முறை, நல்ல விளைச்சலைத் தரும் புதுப்புது தாவரங்கள் என அவ்வப்போது ஆச்சர்யத்தைக் கொடுத்து வருகிறது, இஸ்ரேல். மற்ற நாடுகள் இஸ்ரேலின் தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் அதிகமான அளவில் பயன்படுத்தி வருகின்றன. அதேபோல இயற்கை விவசாயத்தையும் மீட்டெடுக்கும் பணியில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறது, இஸ்ரேல். வறண்ட நிலப்பகுதி கொண்ட இஸ்ரேல்… விவசாய தொழில்நுட்ப வளர்ச்சியின் முதன்மையான நாடாகத் திகழ்கிறது.  அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகமான பழ ஏற்றுமதி செய்யும் நாடும் இஸ்ரேல்தான். இதற்குக் காரணம், விவசாயிகளின் கூட்டுப் பண்ணைத் திட்டமும், இயற்கை விவசாயம்தான்.  

வெப்பம் நிறைந்த பாலை, குடிக்க உதவாத உப்பு நீர், சீரற்ற பருவநிலை என அனைத்து சாபக்கேடுகளையும் தன்னகத்தே கொண்டது இஸ்ரேல். இவற்றை வைத்துக் கொண்டே வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறது. இதனால் இந்தியா இஸ்ரேலிய வேளாண் தொழில்நுட்பங்களை பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. இது நிச்சயம் இந்திய விவசாயத்தில் மாற்றம் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலில் வளமான மண் இல்லை, தண்ணீர் இல்லை, வேளாண்மை செய்ய ஆட்கள் இல்லை, சீரான பருவநிலை இல்லை. ஆனால், இந்தியாவைப் போல, 10 மடங்கு அதிகமாக விவசாய பொருட்களை விளைவிக்கிறது. இந்த வளர்ச்சிதான், இன்று நவீன விவசாய முறைக்கு உதாரணமாக உலகமே சுட்டிக்காட்டுகிறது.

நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திக் காய்கறி மற்றும் பழங்கள் சாகுபடியில் உயர் மகசூல் எடுத்து வருகிறது இஸ்ரேல். அங்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை இந்திய விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில், இந்திய அரசு இஸ்ரேல் நாட்டோடு இணைந்து இந்தியாவில் ஏழு பயிற்சி மையங்களை அமைத்துள்ளது. அவற்றில் மூன்று பயிற்சி மையங்கள் தமிழகத்தில் உள்ளன. மலர் சாகுபடிக்காக ஓசூரிலும், மா சாகுபடிக்காகக் கிருஷ்ணகிரியிலும், காய்கறிச் சாகுபடிக்காகத் திண்டுக்கல்லிலும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

1 ஏக்கரில் 50 டன் தக்காளி வேளாண்மையில் வியத்தகு மாற்றங்கள் சாத்தியமா என நாம் நினைக்கலாம். ஆனால் 1 ஏக்கரில் நாம், 5 டன் தக்காளி விளைவிக்க முடிகிறது என்றால் அவர்களால், 50 டன் தக்காளி விளைவிக்க முடிகிறது என்கிறார்கள் விவசாய வல்லுநர்கள். சொந்தமாக யாருக்கும் நிலம் இல்லை இஸ்ரேலில் விவசாயம் செய்யும் யாருக்கும், சொந்தமாக நிலம் கிடையாது. அரசின் நிலத்தை தான் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கின்றனர். விவசாயத்திற்கு முதல் மூலப்பொருள் நீர். இஸ்ரேலில் மூன்று மாதங்கள் மட்டுமே மழை பெய்யும். தண்ணீர் ஆதாரத்திற்கு இஸ்ரேல் மக்கள் நம்புவது கலிலியோ ஏரியை மட்டுமே. சக்கைப்போடு போடும் சொட்டுநீர் பாசனம் இஸ்ரேலிய விவசாயத் தொழில்நுட்பங்களில் முக்கியமானது சொட்டு நீர் பாசனமும், பாதுகாப்பான பண்ணை விவசாயமும்தான். ஒவ்வொரு நிலத்திலும் இரண்டு தண்ணீர் இணைப்புகள் இருக்கின்றன. எதற்குமே பயன்படாத பாலைவன மண்ணில்தான் விவசாயம் செய்யப்படுகிறது. இயற்கை உரங்கள் மிக மிக எளிமையான தேங்காய் நார் போன்ற அங்குள்ள கழிவுகளே உரமாக பயன்படுத்தப்படுகின்றன. கணினியின் மூலம் அறுவடை கண்காணிக்கப்படுகிறது. வெற்றியை அதிகரிக்கும் கூட்டுப்பண்னை திட்டம் ஒரே மாதிரி திட்டமிடல், இயற்கையான உரங்கள், கூட்டுப் பண்ணை திட்டம் போன்றவற்றால் இந்தியாவை விட பல மடங்கு விளைச்சலை தர முடிகிறது. அதனால் நேர்த்தியான விலையில் விளைபொருட்களை அங்குள்ள விவசாயிகளால் விற்க முடிகிறது. 

இஸ்ரேலில் பால்பண்ணைத் தொழில்
பால் பண்ணைத் தொழில் அங்கு முழுமையாக கணினி மயம் ஆக்கப்பட்டு உள்ளது.­ சுமார் எண்ணூறு வகையான பால்பொருட்களைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

தொடக்கத்தில் இருந்த பலாடி இன பசுக்கள் குறைந்த அளவே பால் கொடுத்ததால் சிரியா. லெபனான் ஆகிய நாடுகளில் இருந்து அதிக பால் தரும் டமாஸ்கஸ் ரெட் என்ற இனப் பசுக்களை இறக்குமதி செய்தார்கள். இவற்றின் பால் அளவும் போதுமானதாக இல்லாததால் ஐரோப்பாவில் இருந்தும் அதிக பால் தரும் இனங்களை இறக்குமதி செய்தார்கள். இந்த பசுக்கள் உண்ணி காய்ச்சல் வந்து இறந்து விட்டன. ஆனால் டமாஸ்கஸ் ரெட் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து ஹாலந்து, அமெரிக்கா, கனடா நாடுகளில் இருந்து ஹால்ஸ்டீன், ஃப்ரீசியன் காளைகளை இறக்குமதி செய்து, டமாஸ்கஸ் ரெட் பசுக்களுடன் கலந்து ஆண்டுக்கு பத்தாயிரம் லிட்டருக்கு மேல் பால் தரும் இஸ்ரேலி ஹால்ஸ்டின் என்ற இனத்தை உருவாக்கினார்கள். இஸ்ரேலின் வறண்ட பகுதிகளில் வாழும் ஆற்றலும், அதிக பால் தரும் தன்மையும் உள்ளதாக இந்த இனம் அமைந்தது.

ஃப், ரிசியன் போன்ற கால்நடைகளுக்கு குளம்புப் பகுதிகள் மிகவும் மென்மையாக இருக்கும். இவ்வகைக் கால்நடைகளுக்கு மென்மையான தரைதான் உகந்தது. இதனால் அங்குள்ள பால் பண்ணைகளில் கடினமான சிமென்ட் தளம் போடுவது இல்லை. தரை மென்மையாக இருக்க, ஆற்றுமணலைப் பரப்பி விடுகிறார்கள். ஆனால் நம் நாட்டில் சில பண்ணைகளில் விவரம் தெரியாமல் கான்கிரீட் தரை போட்டு விடுகிறார்கள். இது ஒரு தேவையற்ற செலவு ஆகும். பசுக்கள் உணவு உண்டபின் படுத்து ஓய்வு எடுக்க நல்ல மிருதுவான மெத்தை போன்ற தரையுள்ள கொட்டகைதான் உகந்தது. அவ்வாறு இல்லாமல் கடினமான கான்கிரீட் தரையிலோ, கருங்கல் பதித்த தரையிலோ படுக்க விட்டால், அவற்றுக்கு உடல்வலி ஏற்படும். அவ்வாறு வலி ஏற்படும்போது பசுக்களின் அசைபோடும் நிகழ்வுகள் தடைப்பட்டு செரிமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

அது மட்டுமின்றி அதிக எடை உள்ள பசுக்கள் கருங்கல் அல்லது கான்கிரீட் தரை மீது நிற்க நேர்வதால் பலவிதமான குளம்பு நோய்கள் வந்து விடுகின்றன. மேலை நாடுகளில் ஒரு பழமொழி உண்டு. ”குளம்பில் வலி ஏற்பட்டால், இருபது குடம் பால் கொடுக்கும் பசு கூட இரண்டு குவளை பால் கொடுக்கும் பசுவாக ஓர் இரவுக்குள் மாறிவிடும்”. இந்த பழமொழியை அறிந்த மேலை நாட்டினர், அவர்கள் பசுக்களுக்கான கொட்டகைகள் அமைக்கும் முன், இது பற்றி நன்கு தேர்ச்சி பெற்ற ஆர்க்கிடெக்ட்களின் ஆலோசனை பெற்றே இடம் தேர்வு செய்து கொட்டகைகள் அமைக்கிறார்கள்.

பால் பண்ணைகள் அமைக்கும்போது, புவியியல் ரீதியாக நம் நாட்டுக்கு, நம் மாநிலங்களுக்கு ஏற்றபடி திட்டமிடாமல், மேலை நாட்டின் ஏதாவது ஒரு பால்பண்ணையின் மாதிரி வரைபடத்தைத் தேர்வு செய்து இமயம் முதல் குமரி வரை இது போன்றே இருக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது. அதனால்தான் அரசு அமைத்த பால்பண்ணைகளின் முதலீடு அதிகமானதோடு, வெற்றிகரமாகவும் இயங்க முடியாமல் போனது.

இஸ்ரேலில் பால்பண்ணை அமைக்கும்போது தரத்தோடும், குறைந்த செலவோடும் அமைப்பதற்கென்றே சிறப்பு பயிற்சி பெற்ற கட்டடக் கலைஞர்களைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் பால்பண்ணை அமையும் இடத்தை அறிவியல் சார்ந்து ஆய்வு செய்து தேர்ந்து எடுக்கிறார்கள். அந்த பகுதியில் அடிக்கும் காற்றின் வேகம், ஈரப்பதம், சுற்றுப் புறத்தில் எழும் ஒலியின் அளவு போன்ற அனைத்தையும் கணக்கில் கொண்டு கட்டட வரைபடத்தைத் தயாரிக்கிறார்கள். கட்டடம் கட்டுவதற்கான பொருட்களைத் தீர்மானிக்கிறார்கள். பசுக்களின் வாழ்வு முறையை அறிந்தவர்களாக இருப்பதால், அவர்களால் மாடுகளுக்கான வீடுகளை சிறப்பாக அமைக்க முடிகிறது. அவர்கள் மாட்டுக் கொட்டகை என்று அழைப்பதில்லை. கால்நடைகளின் வீடு என்றே குறிப்பிடுகிறார்கள்.

தகடுகளால் ஆன கூரைகள், இரும்புத் தூண்கள் கொண்டே பெரும்பாலும் மாட்டு வீடுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் விலை மலிவான பொருட்களைக் கொண்டே கட்டி உள்ளனர். தண்ணீர் தொட்டிககளைக் கூட கான்கிரீட்டால் கட்டவில்லை. பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகளையே பயன்படுத்துகின்றனர்.

எல்லாப் பசுக்களையும் கட்டுப்பாடு இல்லாமல் திரிய அனுமதித்து உள்ளனர். பசுக்கள் வெளியே செல்லாமல் இருக்க சுற்றிலும் கழிகளைக் கொண்டு தடுப்பு அமைத்து உள்ளனர். தீவனம் இருக்கும் பகுதிக்கு பசுக்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லும் வசதியோடு அமைத்து உள்ளனர். சில பகுதிகளில் மட்டுமே மேல் கூரை அமைத்து உள்ளனர். சில பகுதிகளில் கூரை கிடையாது. ஆங்காங்கே பல தண்ணீர்த் தொட்டிகள் வைத்து இருக்கிறார்கள். தீவனம் உண்டபின் பசுக்கள் தங்கள் விருப்பம்போல் கூரைக்கு அடியிலோ அல்லது திறந்த வெளியிலோ எங்கு வேண்டுமானாலும் சென்று படுத்து அசை போடலாம்.

மாடுகளின் உடல் வெப்பத்தைக் குறைக்க தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளித்தல் (ஸ்ப்ரிங்ளர், தண்ணீரைப் பனித்துளிகள் போலாக்கி சாரல் பரப்புதல் (மிஸ்டர்ஸ்) என்ற இரண்டு முறைகள் உள்ளன. இரண்டு முறைகளையும் தேவைக்கேற்ப பயன்படுத்துகிறார்கள்.

இஸ்ரேல் நாட்டில் நம் ஊர்களில் செய்வது போல், பசுக்களை அவை கட்டி இருக்கும் கொட்டகையிலேயே வைத்து பால் கறப்பது இல்லை. அங்கு பால் கறப்பதற்கு என தனி பகுதிகள் அமைத்து இருக்கிறார்கள். நாள்தோறும் காலையும், மாலையும் பசுக்களை அங்கு ஓட்டு வந்து பால் கறந்த பின் அவை தங்கும் கொட்டகைக்கே அனுப்பி விடுகின்றனர். பால் கறக்கும் கருவிகள் கொண்டு பால் கறக்கப்படுகிறது.

குறைந்த நிலப்பரப்பும், தண்ணீர் பற்றாக் குறையும் உள்ள அந்நாட்டில் அவர்களால் தீவனப் பயிர்களை அதிகம் பயிரிட இயலவில்லை. பருத்தி. ஆரஞ்சு, மற்றும் பேரிக்காய்களையே அதிகம் பயிரிடுகின்றனர். அங்கு எந்த கால்நடைகளுக்கும் பசும் புல்லையோ அல்லது வேறு பசுந்தீவனங்களையோ தனித் தீவனமாக கொடுப்பது இல்லை. அவர்கள் உணவாகக் கொடுப்பது அடர் தீவனம் மட்டுமே. அதை டிஎம்ஆர் என்று குறிப்பிடுகிறார்கள். டிஎம்ஆர் என்பது பசுக்கள் உண்ணும் எல்லா உணவுப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து கொடுப்பது ஆகும். எந்த ஒரு தனி தீவனப் பொருளையும் தனி உணவாகத் தருவது இல்லை.

இந்த அடர் தீவனம் தயார் செய்ய, வழக்கமான நார் தீவனங்களான உலர் புல், பதனப் பசுந்தீவனங்களை மிக குறைவாகவும், அத்துடன் ஆரஞ்ச் தோல்கள், காய்கறிக் கழிவுகள், உலர்ந்த கடலைக் கொடிகள், பீர் ஆலைகளில் கிடைக்கும் தானியப் புண்ணாக்குகள், கோழி எரு, பருத்திச் செடி தண்டுகள் என்று விவசாயக் கழிவுகளைக் கொண்டு தீவனம் தயாரிப்பதால் செலவும் குறைகிறது. இவை கூட தகுந்த ஆராய்ச்சி மற்றும் சோதனைகள் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

ஒரு பால் பண்ணையின் மொத்த செலவில் 65% தீவன செலவு ஆகும்.வேளாண்மையில் கணினியைப் பயன்படுத்துவது போலவே, பால் பண்ணைத் தொழிலிலும் எல்லா நிலயிலும் எல்லா செயல்பாடுகளையும் கணினி மூலம் ஒருங்கிணைத்து உள்ளார்கள். பால் கறக்கும் கருவிகளுடன், கணினியால் இயக்கப்படும் பால் அளக்கும் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. பால் கறந்து முடிந்த உடன் அந்த பசு எவ்வளவு பால் கறந்தது என்ற செய்தி கணினியில் பதிவாகி விடுகிறது.

இஸ்ரேலில் பாலின் கொள்முதல் விலை, அந்த நாட்டில் உள்ள விவசாயிகள் ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய எவ்வளவு செலவழிக்க வேண்டி உள்ளது என கணக்கிட்டு, அதன் அடிப்படையிலேயே கொள்முதல் விலை ஆண்டுதோறும் அறிவிக்கப்படுகிறது.பாலைப் பதப்படுத்தி விற்கும் தொழிற்சாலைகள் என்ன விலைக்கு பாலை விற்க வேண்டும் என்றும் முடிவு செய்து அறிவிக்கபடுகிறது. நாட்டின் குடிமக்கள் வாங்கும் திறனும் கணக்கில் கொள்ளப்படுகின்றனது.

பாலையும், பால் பொருள்களையும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சந்தைப்படுத்த பல புதிய உத்திகளை பால் பண்ணையாளர் குழுமம் வகுக்கிறது. அவர்களை பாலை ஏற்றுமதி செய்யாமல், மதிப்பு கூட்டப்பட்ட சீஸ் எனப்படும் பாலாடைக் கட்டிகளையே ஏற்றுமதி செய்கிறார்கள். இதெல்லாம் சாத்தியப்பட இஸ்ரேலுக்கு சுமார் 70 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இந்த திட்டங்களை தமிழ்நாடு இப்போது உடனே செயல்படுத்தினால் இன்னும் 70 ஆண்டுகளுக்கு தண்ணீர் பஞ்சமே வராது என்று கணிக்கின்றனர் நீர்மேலாண்மை வல்லுநர்கள்… 

இஸ்ரேலை பின்பற்றினால் தமிழகம் வளரும் பசுமைக் குடில், மண் போர்வை, நிழல் வலை, சொட்டு நீர் பாசனம் போன்ற இஸ்ரேலிய தொழில்நுட்பங்களை தமிழகத்திலும் பின்பற்றினால் விவசாயத்தில் புதிய சாதனையை படைக்க முடியும்.

Courtesy: dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here