சட்டப்பேரவைச் செயாலாளர் சீனிவாசனின் நியமனத்தை ரத்துசெய்ய வேண்டும் என திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை

இதுவரை எந்த ஆட்சியிலும் நடந்திராத வகையில் பணிமூப்பு, கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகிய அனைத்து நெறிமுறைகளையும் மீறி, தமிழக சட்டப்பேரவைச் செயலாளராக திரு.சீனிவாசன் என்பவரை நியமித்திருப்பதற்கு, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். விதிமீறல்களின் மொத்த நேர்வாக இருக்கும் இந்த நியமனத்தை தமிழக ஆளுநர் அவர்கள் எவ்வாறு அனுமதித்து ஒப்புதல் அளித்தார் என்பது வியப்பாக இருக்கிறது.

சட்டப்பேரவைச் செயலாளர் பதவி என்பது ஜனநாயகத்தின் குறிப்பாக, மக்களாட்சி மாண்பின் சின்னமாகக் கருதப்படும் தமிழக சட்டமன்றத்தில் மிக முக்கியமானது மட்டுமல்ல, முதன்மையான பதவியும்கூட. இந்தப் பதவியில் சட்டப்பேரவை விதிகளுக்கு எதிராகவும், பேரவைப் பணியாளர்களில் பதவி உயர்வு பெற வேண்டியவர்களைப் புறக்கணித்தும், ஒரு செயலாளர் நியமனத்தை செய்திருப்பது, ஒட்டுமொத்த தமிழக சட்டப்பேரவை ஊழியர்களையும் அதிகாரிகளையும் கடுமையான மன உளைச்சலுக்கும், அழுத்தத்திற்கும் உள்ளாக்கி, சட்டப்பேரவை செயலகப் பணிகளில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

ஏற்கனவே, ஓய்வுபெற்ற சட்டப்பேரவைச் செயலாளர் ஏ.பி.ஜமாலுதீனுக்கு ஐந்து ஆண்டுகள் பணி நீட்டிப்பு அளித்து, பணிமூப்பு அடிப்படையில் செயலாளர் பதவிக்கு வர வேண்டியவர்களின் வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்பட்டன. இப்போது, அவசர அவசரமான ஒரு பதவி உருவாக்கப்பட்டு, அந்தப் பதவியிலிருந்து 4 மாதங்களுக்குள் சிறப்பு செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, சட்டப்பேரவைக்கு இப்போது செயலாளர் நியமிக்கப்பட்டு விட்டார் என்பது, சட்டப்படியான ஆட்சி (Rule of Law) நடைபெறவில்லை என்பதை உணர்த்துகிறது. இப்போது செயலாளராக நியமிக்கப்பட்டு இருப்பவருக்காக, பூபதி என்பவரை செயலாளர் பதவியில் உடனே நியமிக்காமல், கூடுதல் பொறுப்பு மட்டுமே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவைச் செயலகத்தில் உள்ள பொது நிர்வாகப்பிரிவில் சீனிவாசன் பணியாற்றி இருந்தால், துணைச் செயலாளராக மட்டுமே பதவி உயர்வு பெற்றிருக்க முடியும் என்றநிலையில், அவருக்கு பேரவைத் தலைவரின் சிறப்புச் செயலாளர் பதவியளித்து, தற்போது சட்டப்பேரவையின் செயலாளர் பதவியே கொடுத்து ஒருதலைப்பட்சமாக, பல படிநிலை உயர்வு, பதவி உயர்வு வழங்கியிருப்பது அலுவலக நடைமுறைக்கும், இயற்கை நீதிக்கும் முற்றிலும் மாறானது.

சட்டப்பேரவைத் தலைவருக்கு மிகவும் வேண்டியவர் என்பதால் அவர் விரும்புகிறார் என்பதற்காக, விதிகளின் முதுகெலும்பை நிச்சயம் உடைக்க முடியாது. சட்டப்பேரவை அலுவலகம் ஒன்றும் தனியாருக்குச் சொந்தமான அலுவலகம் கிடையாது. பொது அலுவலகம் (Public Office). பேரவைத் தலைவரிடம் பணியாற்றுகிறார் என்பதற்காக, பேரவைச் செயலகத்தில் செயலாளர் பதவிக்கு, தகுதி உள்ளவர்களையெல்லாம் புறக்கணித்து, ஒரு நியமனத்தை செய்துவிட முடியாது. இதுபோன்ற விதிகளை அப்பட்டமாக மீறிய சட்டத்திற்குப் புறம்பான நியமனம் சட்டப்பேரவைச் செயலகத்தின் நிர்வாகத்தை முடக்கி, அதன்மீது கறைபடியச் செய்துவிடும்.

ஆகவே, மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் தாமாக முன்வந்து, தமிழக சட்டப்பேரவைக்கு விதிகளை மீறி தனியொருவருக்குச் சலுகை காட்டும் வகையில், பாரபட்சமாக நியமிக்கப்பட்டுள்ள செயலாளர் திரு. சீனிவாசனின் நியமனத்தை ரத்துசெய்து, சட்டப்பேரவைச் செயலகத்தில் பணியாற்றும் பணிமூப்பு அடிப்படையில், தகுதியான ஒருவரை பேரவைச் செயலாளராக நியமித்து நிர்வாகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் கேட்டுக் கொள்கிறேன்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here