சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என நசிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் ஓரணியில் திரண்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

தமிழகத்தில் காவிரி பிரச்சினைக்காக மக்கள் தன்னெழுச்சியாக போராடிவரும் இந்த சூழலில், இளைஞர்களைத் திசை திருப்பும் விதமாக ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், திரைப்படக் கலைஞர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டன. இதனையடுத்து, சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போட்டி நடத்தப்பட்டது.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக சென்னை அண்ணா சாலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், எஸ்டிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர், மே17 இயக்கம், இயக்குநர் பாரதிராஜா தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன.

சேப்பாக்கம் மைதானம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றவர்களை, திருவல்லிக்கேணி டி-1 காவல்நிலையம் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதனிடையே நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் போலீசாரைத் தாக்கினர். அதேபோன்று போட்டி நடந்துகொண்டிருந்தபோது மைதானத்தில் காலணிகளை வீசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களைப் போலீசார் கைது செய்தனர்.

rajini

இந்நிலையில், இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ”வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: ’அமித் ஷா கூறுவது பொய்’