தமிழக பொறுப்பு ஆளுநர் இரண்டு நாட்களில் முடிவு எடுப்பார் என்றும், அவ்வாறு இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராக இருப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் ஒன்றாக இணைந்ததை அடுத்து, சென்னை வானகரத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுச்செயலாளர் சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்தும், அதிமுகவில் இனி கட்சிப் பொதுச்செயலாளர் பதவியே கிடையாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் ஒருங்கிணைப்புத் தலைவராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும், அதிமுக பொதுச்செயலாளருக்கு உள்ள அதிகாரம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இருப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், சென்னையில் கூடியது பொதுக்குழு கூட்டமல்ல என்றும், வெறும் கூட்டம்தான் என்றார். மேலும் அவர், தற்போது நடப்பது ஜெயலலிதா ஆட்சி இல்லை என்றும், துரோகமும் துரோகமும் இணைந்து தமிழகத்தில் ஆட்சி செய்வதாகவும் தெரிவித்தார். தேர்தலில் நிற்க சில அமைச்சர்களுக்கு பயம் என்றும், அவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட்கூட வாங்க முடியாது என்றார்.

தேர்தல் களத்தில் திமுகவுக்கும் தங்களுக்கும்தான் போட்டி என்றும், இரு தரப்பும் தேர்தலில் நின்று வெற்றிபெறும்போதுதான் யார் உண்மையான அதிமுக என்பது தெரிய வரும் என்றும் தெரிவித்தார். அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி, வீரமணி, பெஞ்சமின் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அறிவிக்கும்போது எதிர்ப்பு தெரிவித்தவர்கள் என்றும் தெரிவித்தார். தங்கள் அணியில் 21 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை இல்லையென்றும் தெரிவித்தார். பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட ஆளுநர் தயங்குவதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையும் படியுங்கள்: “நீட்டுக்கு எதிராக போராடும் மாணவர்களை தமிழக அரசு மிரட்டுகிறது”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்