இளைஞர்கள் காரணமின்றி கைது ;சாத்தான் மோடி; திறந்தவெளி சிறைச்சாலை – காஷ்மீரில் உண்மை கண்டறியும் குழு

0
607

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு காஷ்மீரில் என்ன நடக்கிறது என்று தெரிந்துக் கொள்வதற்காக சிபிஐ யின் கவிதா கிருஷ்ணன், பொருளாதார நிபுணர் ஜீன் டிரீஸ்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அமைப்பின் தலைவர் (AIDWA) மைமூனா மொல்லா ,  சமூக ஆர்வலர் விமல் பாய் ஆகியோர் அடங்கிய உண்மை அறியும் குழு சென்றிருந்தது. 

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஜம்மு காஷ்மீரில் 12 நாட்களாக இண்டெர்நெட்டையும், தொலைத் தொடர்பு வசதிகளை துண்டித்துள்ளது. காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்தபிறகு நடக்கும் மக்களின் போராட்டங்களையும், எதிர்ப்பலைகளையும் பற்றிய செய்திகளை அரசு வெளியிடாமல் வைத்திருக்கிறது. 

தொலைத் தொடர்பு வசதிகள் துண்டிப்பு குறித்து 2 விதமான செய்திகள் வெளிவந்தது. 

மோடி அரசும், பெரும்பாலான இந்திய ஊடகங்களும் காஷ்மீர் அமைதியாக இருக்கிறது என்றும் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றும்  கூறியது . 

சில இந்திய ஊடகங்களும், வெளிநாட்டு ஊடகங்களும் காஷ்மீரில் மக்கள் போராடுகின்றனர் என்று செய்தி வெளியிட்டனர். 

ஶ்ரீநகரில் சௌராவில் பெரிய மக்கள் போராட்டம் நடந்தது என்று சில இந்திய ஊடகங்களும், வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டதை முதலில் மறுத்த இந்திய அரசு பின்பு போராட்டம் நடந்ததாக ஒப்புக் கொண்டது . 

காஷ்மீரில் நிலைமை மிகவும் கடுமையாக இருக்கிறது . ஆக்கிரமிக்கப்பட்ட ஈராக், பாலஸ்தீனைப் போன்று காஷ்மீர் காட்சியளிக்கிறது என்றும் நாங்கள் சென்ற கிராமங்களில் இருக்கும் இளைஞர்கள் காரணமின்றி கைது செய்ய்ப்பட்டிருந்தனர் என்றும்  கவிதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.  

பெண்கள் உரிமை ஆர்வலர் கவிதா கிருஷ்ணன் ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை உண்மை அறியும் குழுவுடன் ஶ்ரீநகர், சோபூர், பண்டிபோரா, அனந்த்நாக், ஷோபியன், பாம்போர் ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தார். 

இந்த உண்மையறியும் குழு டெல்லியில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தியது . அப்போது அவர்கள் கூறியதாவது மத்திய அரசின் செயல் காஷ்மீர் மக்களை கோபத்துக்கும், வேதனைக்கும் ஆளாக்கியுள்ளது. மக்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள் .  ஏற்கெனவே காயம்பட்டுள்ள காஷ்மீர் மக்களை அவமானப்படுத்துவதுபோல தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.  

பொருளாதார நிபுணர் டிரீஸ் கூறுகையில் காஷ்மீரில் ராணுவமும், துணை ராணுவமும் குவிக்கப்பட்டிருக்கிறது.   எங்களுடைய கணக்குப்படி 10 காஷ்மீர் மக்களுக்கு ஒரு ராணுவ வீரர் என்றக் கணக்கில் நிறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் போரட்டங்களில் இறங்கிவிடக் கூடாது என்பதற்காகவே அவ்வாறு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்றார்.  

அரசு தரப்பில் என்னகூறப்பட்டாலும் காஷ்மீரில் எல்லா இடங்களிலும் தடை பிறபிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள்,கடைகள் மூடப்பட்டிருக்கிறது; சில ஏடிஎம்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கின்றன. 

5 நாட்களில் சந்தித்த நூற்றுக்கணக்கான மக்களில் ஒரே ஒருவர் மட்டுமே காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்தார். அவர் யாரென்றால் பாஜக செய்தி தொடர்பாளர். அவருடனான எங்களுடைய உரையாடல் நட்புடன் ஆரம்பித்தது ஆனால் கடைசியில் அவர் எங்களை மிரட்டினார். தேசவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் எங்களைக் கேட்டுக் கொண்டார் என்று பொருளாதார நிபுணர் டிரீஸ் கூறினார்.  

மக்கள் மிகுந்த கோபத்துடன் இருக்கிறார்கள் . இந்திய ஊடகங்கள் ஶ்ரீநகரில் இருந்து இயல்பு நிலையில் இருப்பதாக  செய்திகள் தந்துக் கொண்டிருக்கிறார்கள் . ஆனால் காஷ்மீர் முழுவதும்  சென்று பார்த்தால் நிலைமையே வேறு என்கிறார் கவிதா கிருஷ்ணன் . 

இந்தச் செய்தியாளர் சந்திப்புக்கும் பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா எங்களுக்கு அனுமதி தரவில்லை. அரசின் கண்காணிப்பில் பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா இருக்கிறது என்றும் காஷ்மீர் பற்றிய செய்திகளை வெளியிட தடை இருக்கிறது என்றும் பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் எங்களுக்கு கூறினர்.   

 ஈத் பெருநாளில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர் என்று அரசு கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. அம்மக்களால் அங்குள்ள மசூதிகளுக்கே செல்ல முடியாமல் தவித்ததுள்ளனர் என்று கூறினார் மொல்லா   

காஷ்மீரின் பொருளாதாரம் முடங்கியுள்ளது. வணிக ஸ்தலங்கள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. தினமும் வேலைக்கு செல்பவர்கள் செல்ல முடியவில்லை. காஷ்மீர் மக்களிடையே ஒரு வித பயம் நிலவுகிறது.  

எங்களிடம் பேசிய மக்கள் பயத்தின் காரணமாக தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் பேசுவதை மட்டும் ரிகார்ட் செய்ய அனுமதித்தனர்.  நாங்கள் சென்ற இடத்தில் எல்லாம் ஒடுக்குமுறை, துரோகம், துப்பாக்கி முனையில் அமைதி என்ற வார்த்தைகளை கேட்க முடிந்தது என்றார் கவிதா கிருஷ்ணன் . 

ஏறக்குறைய 100 அரசியல் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது. ஒரு பார்க் அருகில்  நாங்கள் சென்ற போது அங்கிருந்தவர்கள்  ‘சாத்தான் மோடி’ என பேசிக்கொண்டனர் எனவும் கவிதா கிருஷ்ணன் கூறினார்.

நாங்கள் செல்லும் இடமெல்லாம், இந்திய மக்கள் எங்களுக்கு எதிரிகள் இல்லை, தங்களுடைய போராட்டம் இந்திய அரசை எதிர்த்துதான் என பலர் தெரிவித்தனர். பிரிவு 370 நீக்கப்பட்டிருப்பது காஷ்மீரின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தின் மீது விழுந்த அடியாகவே அவர்கள் பார்க்கிறார்கள். இங்குள்ள முஸ்லிம்களைப் போலவே, இந்துக்களையும் அது பாதிக்கும் என அவர்கள் தெரிவித்தனர் என்றார் உண்மையறியும் குழுவைச் சேர்ந்த விமல் பாய்.

பொருளாதார நிபுணர் டிரீஸ் கூறுகையில் இந்தக் கணத்தில் காஷ்மீர், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திறந்தவெளி சிறை. மோடி அரசின் முடிவு அறமற்றது, அரசியலமைப்புக்கு எதிரானது; சட்ட விரோதமானது.  உடனடியாக பிரிவு 370 மற்றும் 35 ஏ மீண்டும் ஜம்மு காஷ்மீரில் அமலாக்கப்பட வேண்டும் . தகவல் தொடர்பு துண்டிப்பும் உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

http://thewire.in , BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here