தெற்கு மும்பை நாடாளுமன்ற தொகுதியில், சில இளம் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீடு வீடாக சென்று, தங்கள் கட்சியில் மக்களை சேரும்படி அழைத்துக் கொண்டிருந்தனர். பாஜக அரசின் தோல்வியை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதே அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலையாகும்.

கையில் காங்கிரஸ் கொடியும், தலையில் காந்தி தொப்பியும் அணிந்திருந்த பப்லு குப்தா, “பாஜகவின் பொய் வாக்குறுதிகளை வீடு வீடாக சென்று வெளிச்சம் போட்டு காட்டவேண்டும் என்று எங்களுக்கு கூறப்பட்டுள்ளது” என்றார்.

அந்தக்குழுவின் தலைவரான சந்தீப் கண்ட்கே, “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-இல் இருக்கும் பணியாளர்கள் காசுக்காக வேலை பார்க்கிறவர்கள். அவர்களின் சமூக ஊடக பிரிவில் இருப்பவர்கள் காசு கொடுத்து ட்வீட் செய்கிறவர்கள். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நாங்கள் வீடு வீடாக சென்று உள்ளூர்வாசிகளிடம் இருந்து பணம் சேகரிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கம் பாஜகவை வீழ்த்துவதே என்று கூறுகிறார் சந்தீப். “ஒவ்வொருவரின் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போன்ற பாஜகவின் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு நினைவுப்படுத்தி வருகிறோம். பாஜகவுக்கு வாக்களித்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். இந்த முறை வாக்காளர்கள் தவறு செய்ய மாட்டார்கள்” என்றார்.

ஒரு காலத்தில் தெற்கு மும்பை காங்கிரஸின் கோட்டையாக இருந்தது. ஆனால், 2014 தேர்தலில் நரேந்திர மோதி அலையால் அது காணாமல் போனது.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று நரேந்திர மோதி வலியுறுத்தியிருந்தார். 135 ஆண்டுகால பழமையான கட்சி 44 இடங்கள் மட்டுமே பெற்று கடும் தோல்வி அடைந்தது.

குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றவில்லை. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசத்தில் வெறும் 2 இடங்கள் மட்டுமே வென்றது. இது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

தற்போது ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தில் மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைத்தது. மீண்டும் அக்கட்சி உயர்ந்து எழுகிறதாக அதன் தலைவர்கள் கூறுகிறார்கள்.

காங்கிரஸ் மீண்டும் இந்தியாவில் ஆட்சி அமைக்குமா? வரும் தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் போட்டி அளிக்குமா என்ற கேள்விகளோடு, கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களை காண பல்வேறு இடங்களுக்கு பயணித்தோம்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்திடவில்லை. அதேபோல, 1967 சட்டமன்ற தேர்தலுக்கு பின், தமிழ்நாட்டிலும் எந்த தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. அம்மாநிலங்களுக்கு சென்று அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்தோம்.

2 வாரப்பயணத்தில், சில முக்கிய விஷயங்கள் தெரியவந்தது.

•சில மாநிலங்களில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது, கட்சிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. வெற்றிக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த தலைவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

•3 மாநிலங்களில் வெற்றி பெற்றதையடுத்து, ராகுல் காந்தி மீதான மரியாதை பெரிதும் உயர்ந்துள்ளது.

•இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் பெண்களை கவர்வது இக்கட்சியின் முதல் முக்கியத்துவமாகும். இதற்காக அதிக பணிகள் நடைபெற்று வருகிறது.

•சமூக ஊடகங்களிலும், பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

•உள்கட்சி அமைப்பு பலப்படுத்தப்பட்டு, உள்கட்சி தொடர்புகளும் மேலிருந்து கீழ்வரை நிறுவப்பட்டுள்ளது.

•பல மாநிலங்களில், காங்கிரஸ் கட்சி என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறது.

பிரியங்கா காந்தியை பொதுச் செயலாளராக நியமித்தது, காங்கிரஸ் கட்சி இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக கவனம் அளிக்கிறது என்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

“2014 தேர்தலில், இளைஞர்கள் நரேந்திர மோதி பக்கம் இருந்தார்கள். முதல் தலைமுறை வாக்காளர்களும் அவருக்கே வாக்களித்தனர். இளைஞர்களையும், முதல் தலைமுறை வாக்காளர்களையும் எங்கள் பக்கம் கொண்டு வருவது, எங்களுக்குள்ள முக்கிய சவால். இதற்கும் நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம்” என்கிறார் மகாராஷ்டிரா இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்யஜித் தம்டே.

நரேந்திர மோதி அரசாங்கத்தின் மீது இளைஞர்கள் வருத்தத்தில் உள்ளதாகவும், அதனால் அவர்கள் காங்கிரஸில் வந்து பெருமளவில் சேருகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

“காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஊக்கப்படுத்துகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்காக ராகுல் காந்தி நிறைய விஷயங்களை செய்துள்ளார்” என 2008ல் இக்கட்சியில் சேர்ந்து மும்பையில் வளர்ந்து வரும் தலைவரான பவ்னா ஜெயின் கூறுகிறார்.

இக்கட்சியை விட்டுச் சென்றவர்களும், சமீபத்திய வெற்றிகளை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ளனர்.

அதோடு, மற்ற கட்சித் தலைவர்களும், காங்கிரஸில் சேர ஆரம்பித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்த நசிமுதீன் சித்திக் தற்போது காங்கிரஸில் இருக்கிறார். “காங்கிரஸ் நம் முன்னோர்களின் கட்சி. பாஜகவின் வகுப்புவாத அரசியலுக்கு இக்கட்சியால் மட்டுமே சவால் விடுக்க முடியும் என்பதால் இதில் சேர்ந்தேன்” என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் ஆளுமையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்கிறார் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் பிருத்விராஜ் சௌஹான். “அவரின் நம்பிக்கை மிகவும் உயர்ந்துள்ளது. ராகுல் காந்தி இயற்கையாக மென்மையான அணுகுமுறை கொண்டவர். ஆனால், ரஃபேல் குறித்து பாஜக பொய் சொல்லும்போது, கோபம் வருவது இயல்பானதே” என்றார்.

2014 தேர்தலில் தோற்ற விதம் காங்கிரஸிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இது போன்ற தோல்விகளை கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி சந்திக்காமல் இல்லை. பல தசாப்தங்களாக, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, ஒடிஷா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றதில்லை.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் வீரேந்திரநாத் பட் கூறுகையில்,”நேருவின் மரணத்துக்கு பிறகு காங்கிரஸ் கட்சி வீழ ஆரம்பித்துவிட்டது. ஆனால் உண்மையான வீழ்ச்சி, மண்டல் கமிஷனின் அறிக்கையை விபி சிங் அரசாங்கம் அமல்படுத்தியபோதுதான் தொடங்கியது.”

அதே நேரத்தில்தான் பாஜக வளர்ந்து 1986ஆம் ஆண்டு பாபர் மசூதி விவகாரத்தை கையில் எடுத்தது. மண்டல் கமிஷன், தலித் எழுச்சி மற்றும் வகுப்புவாத அரசியல் அனைத்தையும் காங்கிரஸால் சமாளிக்க முடியவில்லை.

அந்த நேரத்தில் பல மக்களும் கட்சியை விட்டுச்சென்றனர்.

“அமைப்பு, தொழில்முறை மற்றும் பொறுப்புணர்வு என்று எதுவும் கட்சியில் இருக்கவில்லை. அடிப்படை திட்டமிடுதலும் இல்லை. பாரபட்சம் காண்பிப்பதும், தேவையானவர்களுக்கு மட்டுமே பதவி கொடுப்பதும் இருந்தது” என்கிறார் காங்கிரஸில் இருந்து விலகி தற்போது லக்னோவின் பாஜக எம்எல்ஏ-வான ராஜேஷ் கவுதம்.

கட்சி பலவீனம் அடைந்ததற்கு வேறு சில காரணங்களும் இருந்தன. இந்திரா காந்தி பாதுகாப்பற்று உணர்ந்ததாக கூறப்படுவதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

சென்னையில் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.வி.ரமணி இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இருந்து கட்சியில் இருக்கிறார். அவருடன் நெருங்கி பணிபுரிந்தும் இருக்கிறார்.

“சக்தி வாய்ந்த மாநில தலைவர்கள் குறித்து இந்திரா காந்தி மேடத்திற்கு பிரச்சனை இருந்தது. மாநிலத்தலைவர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தால், கட்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்று அவர் நினைத்தார். அதுவே காங்கிரஸிற்கு இங்கு பிரச்சனையை ஏற்படுத்தியது” என்று அவர் தெரிவித்தார்.

முரண்பாடுகள் மற்றும் பிரிவினைவாதமும் பல இடங்களில் கட்சியை பலவீனமாக்கியது.

“தமிழகத்தின் இளைஞர்களிடம் திராவிடக் கட்சிகளின் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால், காங்கிரஸ் அவர்களை கவர்வதில் தோல்வி அடைந்ததும் இங்கு கட்சியை பலவீனப்படுத்தியது” என்கிறார் ஃப்ரண்ட்லைன் இதழின் ஆசிரியர் விஜய் சங்கர்.

எனினும், தற்போது தங்களது தவறை உணர்ந்துள்ள இக்கட்சி, அவற்றை திருத்த முயற்சி செய்து வருகிறது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீது அதிக கவனம் செலுத்துவது போல தெரிகிறது.

இளைஞர்கள் மற்றும் பெண்களை கட்சியுடன் தொடர்பு கொள்ள வைக்க ‘சக்தி’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெரும் தலைவர்கள் மற்றும் அடிமட்ட தொண்டர்களுக்கு இடையே நல்ல தொடர்பு இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எப்படி இருந்தாலும் பல இளைஞர்களை ராகுல் காந்தி கவர்ந்து வருகிறார்.

“ராகுல் காந்தி எங்களுக்கு ஒரு மேடை அளித்துள்ளார். நான் இளைஞர் காங்கிரஸில் இருக்கிறேன். எனக்கு ராகுலை பிடிக்கும்” என்கிறார்

மாநில கட்சிகளின் எழுச்சியால், காங்கிரஸ் கட்சி வீழ்ந்ததாக சிலர் கருதுகின்றனர். மாநிலத்தில் பல சிறு சிறு கட்சிகள் உண்டாகின. 1951ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், வெறும் 53 கட்சிகள் மட்டுமே போட்டியிட்டன. 2014ல் 465 கட்சிகளாக இது உயர்ந்தது. இன்று இந்தியாவில் சுமார் 1900 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கின்றன.

தற்போதைய சூழலில் காங்கிரஸால் தனியாக வெற்றி பெற முடியாது என அக்கட்சித் தலைவர்கள் நினைக்கின்றனர். கூட்டணி கட்சிகள் தேவைப்படுகின்றன. “ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி சேர வேண்டும்” என்று மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் பிருத்விராஜ் சௌஹான் தெரிவித்தார்.

இதுவரை ஆறு பொதுத்தேர்தலில் தனியாகவும், நான்கு தேர்தல்களில் கூட்டணி அமைத்தும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. 16வது மக்களவைத் தேர்தலில் என்ன நடக்கும் என்பதை சொல்வது மிகவும் கடினமானது. ஆனால், கடந்த பொதுத்தேர்தலில் 44 இடங்கள் மட்டுமே பெற்ற காங்கிரஸ், அதனைவிட மிக சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Courtesy : bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here