திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள்,சுமார் 150 தலைக்கவசங்களை வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக வழங்கினர்.

  சென்னையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது பேனர் விழுந்து, கோர விபத்து ஏற்பட்டதை அடுத்து, பேனர், கட் அவுட்களை வைக்க வேண்டாம் என நடிகர்கள் பலர் ரசிகர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, ரசிகர்கள் எந்த இடத்திலும் தனது கட் அவுட், பேனர்களை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியதோடு, அந்த பணத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும்படி கூறினார்.

தற்போது நடிகர் சூர்யா நடித்த ‘காப்பான்’ திரைப்படம் தமிழகத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் திருத்தணியை சேர்ந்த அவரது ரசிகர்கள் சிலர், திருவள்ளூர் மாவட்ட தலைவர் L.T ராஜ்குமார் தலைமையில் சுமார் 150 தலைக்கவசங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர்.

இதில் காவலர் ஒருவரும் பங்கேற்று, வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசத்தை அணிவித்தார். 

நடிகர் சூர்யாவின் என்ஜிகே படம் வெளியானபோது, சுமார் 14 லட்சம் ரூபாய் செலவில் 215 அடி கட் அவுட் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரசிகர்களின் தலைக்கவசம் வழங்கும் முயற்சிக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here