இந்திய ரிசர்வ் வங்கிதொழில் நுட்பக் காரணங்களால் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க முடியாதபோது அதனை இலவச பரிவர்த்தனைக்கான எண்ணிக்கையில் சேர்க்கக் கூடாது என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம்-களில் கட்டணமில்லாமல் மாதந்தோறும் 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்-களில் மூன்று முறையும் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த வரம்பைத் தாண்டி பணம் எடுக்கப்படும்போது, அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பண இருப்பை பார்ப்பது, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லாததால் பணம் எடுக்க முடியாதது போன்றவையும் பரிவர்த்தனையாக சேர்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரிசர்வ்வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஹார்டுவேர், மென்பொருள் பிரச்சினைகளால் பணம் எடுக்க முடியாதபோது, அதனை பரிவர்த்தனையாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லாதது போன்ற காரணங்களால் பரிவர்த்தனை தடை பட்டால், அதை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இருப்பை பார்ப்பது, காசோலை புத்தகம் வழங்கக் கோருவது, வரிசெலுத்துவது, பணபரிமாற்றம் போன்ற ரொக்க மற்ற பரிவர்த்தனைகளை இலவசமாக பரிவர்த்தனை வரம்பில் சேர்க்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.