இலங்கை பொருளாதார நெருக்கடி: கைக்குழந்தையோடு தனுஷ்கோடி வந்த தமிழ்க் குடும்பம் சொல்வது என்ன?

0
196

Courtesy: bbc 

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் இருந்து நான்கு குடும்பத்தை சேர்ந்த 16 தமிழர்கள் கடந்த மாதம் தமிழகத்திற்கு அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று ஏப்ரல் 8-ம் தேதி அதிகாலை இரண்டரை வயது சிறுவனுடன் ஒரு குடும்பத்தை சேர்ந்த மேலும் நான்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கை தமிழர்கள் இறுதிக்கட்ட போரின்போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழ்நாட்டுக்குள் வந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர்.

இதே போல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வரக்கூடும் என்பதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கடலோர பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.0/140

இந்நிலையில் (ஏப்-07) நேற்று இரவு மன்னார் மாவட்டம் முத்தரிப்புத்துறை பகுதியை சேர்ந்த கிஷாந்தன் (34), ரஞ்சிதா (29), ஜெனீஸ்டிக்கா (10), கிஷாந்தன் – ரஞ்சிதாவின் இரண்டரை வயது மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஒரு பைபர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் வந்து இறங்கினர்.

இலங்கை தமிழர்களை மீட்ட மரைன் போலீஸ்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மெரைன் போலீசார் இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை ஏற்றம் மற்றும் மண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு அகதிகளாக வந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு பின் நான்கு இலங்கை தமிழர்களும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்க படுவார்கள் என மெரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பட்டினிச்சாவு ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதியாக வந்த மன்னார் மாவட்டத்தை சேர்ந்த கிஷாந்தன் பிபிசி தமிழிடம் பேசுகையில், நான் இலங்கை மன்னார் மாவட்டம் சிலாவத்துறை கடற்கரை பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வந்தேன்.

முந்தைய காலங்களில் இலங்கையில் நடந்த யுத்தத்தில் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது உணவு பொருட்களின் விலை ஏற்றத்தால் பட்டினிச்சாவு ஏற்படும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இனி மக்கள் வாழ முடியாது என்பதால் தான் என் குடும்பத்துடன் நான் தமிழகத்துக்கு அகதியாக வந்துள்ளேன்.

இலங்கையில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் பால் மா, அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடலில் மீன்களை பிடித்து சாப்பிட்டு வாழ்ந்து விடலாம் என முயற்சி செய்தாலும் டீசல் தட்டுப்பாட்டால் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியவில்லை.

என் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கையில் தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளோம். கொரோனாவை காரணம் காட்டி குழந்தைகளின் படிப்பை பாதிக்கப்பட்டிருந்தது, தற்போது இலங்கை அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டது குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் கிஷாந்தன்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வாய்ப்பில்லை

தொடர்ந்து பேசிய கிஷாந்தன், “கடந்த 2006 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின் போது இலங்கையில் இருந்து நான் அகதியாக இந்திய வந்து தங்கியிருந்தேன். மீண்டும் இலங்கையில் சமாதானம் திரும்பிய பின் 2010 ஆண்டு இலங்கைக்கு விமானம் மூலம் சென்றேன். தற்போது உணவு தட்டுபாட்டால் மீண்டும் இரண்டாவது முறையாக நான் இந்தியாவுக்கு அகதியாக வந்துள்ளேன்.

இனி மீண்டும் இலங்கைக்கு திரும்பி செல்ல நான் விரும்பவில்லை. இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை.

அரிச்சல்முனை
அரிச்சல்முனை

இந்திய அரசை நம்பி நாங்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளோம். எங்களை இந்திய அரசு எப்போது திருப்பி அனுப்புமோ அதுவரை இங்கிருந்து நாங்கள் போக மாட்டோம்,” என்றார் கிஷாந்தன்.

நல்ல மதிப்பெண் எடுக்கும் மகளின் கல்வி பாதிப்பு

தமிழகத்திற்கு அகதியாக வந்துள்ள ரஞ்சிதா பிபிசி தமிழிடம் பேசுகையில், “எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் பள்ளியில் படிக்கிறாள். இந்த முறை ஐந்தாம் ஆண்டில் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளார். நல்லா படிக்க கூடிய பிள்ளை.

ஆனால் தற்போது இலங்கை உள்ள சூழ்நிலையில் தொடர்ந்து என் மகளுக்கு கல்வியை கொடுக்க முடியாது. நான் என் குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மீண்டும் இந்தியாவிற்கு வந்துள்ளேன்.

இலங்கையில் உள்ள தற்போதைய சூழ்நிலையில் கடல் தொழிலுக்குச் செல்ல மண்ணெண்ணெய் இல்லை, கட்டுமான வேலைக்கு செல்ல சிமெண்ட் இல்லை, தச்சு வேலைக்கு செல்ல மின்சாரம் இல்லை. இப்படி இருந்தால் எப்படி மக்கள் வாழ்கையை நடத்த முடியும்?

இலங்கையில் உழைப்புக்கு வாய்ப்பே இல்லை. ஆனால் அனைத்து பொருட்களின் விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது. எங்களால் இனி இலங்கையில் வாழ முடியாது என்பதால் இந்தியாவுக்கு பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி வந்து சேர்ந்தோம்.

ஒரு பக்கம் உணவு பொருட்கள் இல்லை மற்றொரு பக்கம் மக்களிடம் பணம் இல்லை. குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வோம் என்று குழப்பமான மனநிலையில் இருக்கின்றனர். இலங்கையில் எப்போது என்ன நடக்குமோ என்று பதற்றமான சூழ்நிலையில் இருந்து வருகிறது,” என்கிறார் ரஞ்சிதா.

ஏராளமான இலங்கை தமிழர்கள் இந்தியா வர காத்திருப்பு

தொடர்ந்து பேசிய ரஞ்சிதா, “தற்போது உள்ள சூழலில் இலங்கையிலிருந்து பெரும்பாலான இலங்கைத் தமிழர்கள் தமிழகம் புறப்பட்டு வர தயாராக உள்ளனர். நிச்சயம் அதிகமானோர் விரைவில் அகதிகளாக தமிழகத்திற்கு வருவார்கள்.

ஏற்கனவே நாங்கள் இலங்கையில் உயிர் வாழ முடியாமல் நொந்துபோய் இந்தியா வந்துள்ளோம். எனது இரண்டு பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்று கடலில் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இந்தியாவை நம்பி வந்துள்ளோம். எங்களை இந்திய அரசு காப்பாற்று வேண்டும்,” என்றார் ரஞ்சிதா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here