இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310ஆக உயர்வு

0
237

இலங்கை தற்கொலைகுண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில், 310 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500 பேர் காயமடைந்துள்ளனர் என போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

38 பேர் கைது

இந்நிலையில் இலங்கை வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 26 பேர் குற்றப்புலனாய்வுத் துறையாலும், 3 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினாலும், 9 பேர் போலீசாராலும் கைது செய்யப்பட்டவர்கள்.

இவர்களில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 9 பேர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மே 6 வரை விலக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 9 பேரும் வெல்லம்பட்டி என்ற இடத்தில் உள்ள ஒரே தொழிற்சாலையில் வேலை செய்துவந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவம் அறியவில்லை

இலங்கையில் தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் இலங்கை இராணுவம் அறிந்திருக்கவில்லை என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆயர் இல்லத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ள போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இராணுவத்தினால் தனித்து செயற்பட முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நபர்களை பரிசோதிக்கின்றமை, கைது செய்கின்றமை மற்றும் வீதி தடைகளை ஏற்படுத்துகின்றமை போன்ற செயற்பாடுகளுக்கான அதிகாரத்தை இராணுவத்திற்கு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் புலனாய்வு தகவல்களின் தெளிவின்மை காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ள இராணுவ தளபதி, இராணுவம் தெளிவுட்டப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இராணுவத்திற்கு புலனாய்வு தகவல்கள் பகிரப்பட்டாலும், செயற்படுவதற்கான அதிகாரம் கிடையாது எனவும், அந்த அதிகாரத்தை வேறொரு தரப்பிற்கு வழங்குகின்றமை பிரச்சினைக்குரிய விடயம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் வேறு தரப்பினர் மீது விரல் நீட்டுவதை தவிர்த்து, எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய துக்க தினம்

இலங்கையில் இன்று தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, அனைத்து அரசாங்க நிறுவனங்கள், திணைக்களங்களில் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்க விட்டு துக்க தினத்தை அனுஷ்டிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், அலுவலக நேர ஆரம்பத்தின் போது, 3 நிமிட மௌன அஞ்சலியையும் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here