இலங்கை குண்டு வெடிப்பு; அரசியலாக்கிய இந்திய ஊடகங்கள், அரசியல்வாதிகள்; விளாசிய இலங்கைவாழ் மக்கள்

0
227

இந்தியா மீடியாக்களும், பிரதமர் மோடியும் ஈஸ்டர் அன்று இலங்கையில் நடந்தக் கொடூரத்தாக்குதலை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்று டிவிட்டரில் இருக்கும் இலங்கை வாழ் மக்கள் குற்றம்  சாட்டியுள்ளனர். 

இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் ஞாயிறு காலை ஈஸ்டர் தினம் அன்று  ஒரே சமயத்தில் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த கோடூரக் குண்டு வெடிப்பில் 350க்கும் மேலானோர் உயிரிழந்திருப்பதாக கொழும்பு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தக் குண்டு வெடிப்பில் 5 இந்தியர்களும் உயிரிழந்தனர். 

 பிரதமர் மோடி , இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததற்கு ஊடகங்களில் வருத்தம் தெரிவித்துவிட்டு தீவிரவாதம் குறித்து உடனடியாக கூறியவை – ” நீங்கள் வாக்களிக்கும்போது, தாமரை சின்னத்தில் அழுத்துங்கள்.  நீங்கள் அழுத்தும்போது தீவிரவாதத்தை அகற்றுகிறீர்கள் என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் விரல்களுக்கு ஆற்றல் இருக்கிறது. தாமரை சின்னத்தில் வாக்களிக்கும்போது தீவிரவாதத்துக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் என்னுடைய உறுதிமொழிக்கு வலு சேர்க்கிறீர்கள் என்றார்” 

இத்தனை விரைவில், இலங்கையின் துயரம் இந்தியத் தேர்தலுக்குத் தீனியாகிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. நம் நாடு துக்கத்தில் இருக்கிறது. அவர்களுடைய ஊடகங்களும் பாஜக அரசியல்வாதிகளும் உதவிக்கு வரவில்லை என பதிவு செய்துள்ளார் இண்டி சமரஜிவா.

இந்திய ஊடகங்களும் சில இந்திய அரசியல்வாதிகளும் இலங்கையின் துயரத்தை தங்களுடைய சொந்த அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துவது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார் அருணி.

1980-களுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறோமா? பலவீனமான பிளவுபட்ட அரசியல் , சர்வாதிகாரமான ஆனால் பலவீனமான அரசு, பிளவுபட்ட சமூகம், உள்நாட்டு பிரச்சினைகளில் சர்வதேசத் தலையீடு, இடைவிடாத இந்திய குறுக்கீடு? என பதிவிட்டுள்ளார் டாக்டர் அசங்கா வெலிகாலா.

இலங்கையில் நடந்தக் கொடூரக் குண்டு வெடிப்புக்குபின் யார் இந்த மாதிரியான அராஜகத்தை நிகழ்த்தினார்கள் என்று இலங்கை அரசு உட்பட பலரும் புலனாய்வு செய்துக் கொண்டிருந்த வேளையில் சில இந்திய ஊடகங்களும் , அரசியல் தலைவர்கள் சுப்பிரமணிய சாமி போன்றோர்  எந்தவொரு நம்பகமான ஆதாரமும் இன்றி இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தினர். 

 பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் , “இலங்கையில் நடந்த தீவிரவாத நடவடிக்கை காரணமாக இப்போது  இந்தியாவில் பாஜக அரசுதான் வரவேண்டும். ஏனெனில் காங்கிரஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவானது. விரைவில் திக்விஜய் கொழும்பில் நடந்த தாக்குதலுக்கு இந்து தீவிரவாதமே காரணம் என அறிவிப்பார்” என பதிவிட்டிருந்தார் 

அதற்கு இலங்கையைச் சேர்ந்த உமாசங்கர் பிரசாந்த், ‘நாயே எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாத, என் கண்ணில பட்டியெண்டா கல்லாலையே அடிப்பன் என்று பதிவிட்டுள்ளார். 

சுப்பிரமணிய சாமியின் பதிவுக்கு ,  இலங்கை விசயத்திலிருந்து தள்ளியிருங்கள்.. அருவருப்பாக உள்ளது” என  நிலாங்கா பதிவிட்டுள்ளார். 

அரசியல் தரகர் தன்னுடைய வேலையை ஆரம்பித்துவிட்டார். மக்களுடைய துன்பங்களை முதலாக்கி அவருடைய தலைவர்களுக்கு காணிக்கையாக விரும்புகிறார் என கிருஷ்ணகுமார் பதிவிட்டார். 

 அனிஸ் அகமது என்பவர் , “ஸ்ரீலங்கா என கூகுள் செய்யுங்கள்.. இந்திய ஊடகங்களின் செய்திகளையும் சர்வதேச ஊடகங்களின் செய்திகளையும் ஒப்பிடுங்கள் . இலங்கை அரசு இன்னமும் புலனாய்வு செய்துகொண்டிருக்கிறது. ஆனால், இந்திய ஊடகங்கள் குண்டுவெடிப்பை முஸ்லிம் அமைப்புகளோடு தொடர்புபடுத்தி எழுதுகின்றன என பதிவிட்டிருந்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here