கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் கொழும்பு நகரில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கொடூர தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஒரு பெண் உள்பட 9 பயங்கரவாதிகள் நடத்திய உலகையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. ஆனால் இலங்கை அரசோ இலங்கையைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை குற்றம் சாட்டியது. எனவே அந்த அமைப்பை தடை செய்து, ஏராளமானோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளால் இலங்கையின் பல பகுதிகளில் இரு பிரிவினர் இடையே ஒருவித பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எனவே இரு தரப்பும் அமைதி காக்குமாறு அதிபர் சிறிசேனா அறிவுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் இலங்கையின் மேற்கு கடற்கரை நகரான சிலாவில் இருபிரிவினர் இடையே திடீரென வெடித்த மோதல்களால் கடந்த சில நாட்களாக அங்கு பதற்றம் நிலவி வந்தது. இதில் அங்குள்ள வழிபாட்டுதலம், சில கடைகள் தாக்குதலுக்கு உள்ளாயின. இதனால் சிலாவ் நகர் முழுவதும் பெரும் பதற்றம் அதிகரித்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அங்கு அசம்பாவிதங்களை தவிர்க்க இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. தற்போது,அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வன்முறைகள் பரவாமல் தடுக்க இலங்கையில்,  பேஸ்புக் , வட்ஸ் அப் , வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் குறுகிய காலத்திற்காக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல் துறை தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here