இலங்கையில் சிங்களர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே ஏற்பட்ட திடீர் வன்முறை காரணமாக சமூக வலைதளங்கள் இன்று (திங்கள்கிழமை) முடக்கப்பட்டுள்ளன. 

நீர்கொழும்பு, போருதொட்டை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் இந்த திடீர் வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் (ஏப்.21) தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 257 பேர் வரை உயிரிழந்தனர். இதையடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்ட இடங்களில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு  இன்று  (திங்கள்கிழமை,மே 06) திரும்பப்பெறப்பட்டது. 

இந்நிலையில், தேவாலய குண்டுவெடிப்பு நடந்த நீர்கொழும்பு (நிகம்போ) எனுமிடத்தில் சிங்களர்கள், முஸ்லிம்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை திடீரென வன்முறை ஏற்பட்டது.  எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலால் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிட்டனர்.

மேலும் அப்பகுதியில் போலீஸ் விசேட அதிரடி பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

போருதொட்டைஎங்கிலும் வன்முறையாளர்கள் சூழ்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நீர்கொழும்பில் சிங்களர்கள், முஸ்லிம்கள் இடையில்அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்குமாறு அனைத்து போலீஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், வைபர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக, 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதி கண்டியில் இதேபோன்று சிங்களர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே வன்முறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here