தமிழ் மரபில் வீர வழிபாடு முக்கியமானது. ஒவ்வொரு சமூகத்துக்காகவும் அர்ப்பணிப்புடன் தங்களை ஒப்படைத்த ஆளுமைகளின் அடக்கத்தலங்களில் நடுகல் நட்டு வீர வணக்கம் செலுத்துகிற பண்பாடு அது. அதன் ஒரு வடிவம்தான் தமிழ் மக்களுக்கு இஸ்லாமிய இறையியலை எடுத்தியம்பிய இறைநேசச் செல்வர்களுக்கும் செல்வியர்களுக்கும் உருவான அடக்கத்தலங்கள். இவை தர்காக்கள் என்றும் வழங்கப்படுகின்றன. இவை புதையிடங்கள் மட்டுமல்ல. நமது வீரர்களின் உறைவிடங்கள். போராளிகளின் வாழ்விடங்கள். இறைநேசர்களின் இலக்கியங்களே இந்த மொழிக்குச் செழுமை சேர்த்தன. இந்த நினைவுகளை மீட்டெடுப்பது என்பது இந்தப் பண்பாட்டின் பூர்வகுடிகளாக நம்மை மீட்டெடுப்பதாகும். இறைநேசர்களின் இலக்கியங்களைப் பாடுவதும் அவற்றில் லயித்துப் போவதும் இலக்கியப் பரப்பிலும் நம்மை மீட்டெடுக்கும் ஆயுதமாக இருக்கும். நம்மை இந்த மண்ணின் முதல் தரக் குடிமக்களாக மீட்டுருவாக்கம் செய்வதற்கு இதுதான் தொடக்கப் புள்ளியாக இருக்கும். சென்னைப் புதுக்கல்லூரியில் நடந்த “தமிழ் இலக்கிய வரலாறு: விடுபடல்களும் தேடல்களும்” என்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் (செவ்வாய்க் கிழமை, பிப்ரவரி 18, 2020) பேசிய காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் நஜ்மாவின் உரையின் சுருக்கம் இது.

கவிஞர் ஈழவாணி இலங்கையிலுள்ள தமிழ் முஸ்லிம் படைப்பாளிகளின் செயல்பாடுகளைப் பற்றி எடுத்துரைத்தார். இலங்கையில் தொடர் வண்டிகளிலும் பேருந்துகளிலும் பயணித்த முஸ்லிம் பெண்கள் பர்தாக்கள் விலக்கப்பட்டுப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். “போடச் சொல்லும்போது போடுவதற்கும் கழட்டச் சொல்லும்போது கழட்டுவதற்கும் நாங்கள் உங்களுக்கு என்னவாக இருக்கிறோம்?” என்கிற எதிர்க் கேள்வியை அந்தப் பெண்கள் எழுப்பினார்கள். இலங்கையில் தமிழர்-முஸ்லிம் ஒற்றுமையை உடைப்பதற்கு பேரினவாதச் சக்திகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் மொழியின் பிணைப்பால், பண்பாட்டு உரையாடல்களால் மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்தலாம் என்கிற நம்பிக்கையை ஈழவாணி வெளியிட்டார். இலக்கியம் படைத்தாலோ, அயல் மனிதர்களுடன் பேசினாலோ நடத்தை கெட்டவள் என்று பழிக்கப்படும் பண்பாட்டுச் சூழலிலிருந்து ஷர்மிளா ஸெய்யித், மஜீதா, ஷியாமளா ஷெரீஃப், அனார், ஃபஹீமா ஜஹான் முதலானோர் தொடர்ந்து காத்திரமான இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபடுவதைச் சிலாகித்துப் பேசினார். ஒரே இரவில் வெறும் ஆடைகளோடு தங்கள் வீடுகளை, காணிகளைத் துறந்து வடக்கு இலங்கையிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களின் வலி நினைவுகளாக, துன்பியல் இலக்கியமாக பதிவாகியிருக்கிறது. மீன் பாடும் தேன் நாடான கிழக்கு இலங்கையில் பெரும்பாலானோராக வாழும் முஸ்லிம்களின் மொழி இனியது. அந்த மொழி நாட்டார் பாடல்களில் வளமையுடன் வெளிப்படுகிறது.

தமிழ் இலக்கிய வரலாற்றின் விடுபடல்களைப் பற்றி சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் டேவிட் பிரபாகர் விளக்கமாகப் பேசினார். ”கடந்த காலத்தை நீ துப்பாக்கியால் சுடுவாயானால், எதிர்காலம் உன்னைப் பீரங்கியால் சுடும்,” என்கிற கவிஞர் அபுதாலிப்பின் வரிகளை மேற்கோள் காட்டினார். காரைக்கால் அம்மையாரின் பதிகத்தை முதல் திருமுறையாக்கி திருமூலரின் திருமந்திரத்தை இரண்டாம் திருமுறையாக்கி காலக்கிரமப் பகுப்பைச் செய்யாமல் போனது ஏன் என்று இலக்கியத் தொகுப்பாளர்களைப் பார்த்து மிகச் சரியான கேள்விகளை எழுப்ப வேண்டும். எத்தனை அவ்வையார்கள் இருந்தார்கள், எத்தனை அகத்தியர்கள் இருந்தார்கள் என்பதைச் சரிவர ஆராய்ந்து கண்டுணரவேண்டும். தான் வேறு, தமிழ் வேறு அல்ல என்று வாழ்ந்த உமறுப்புலவரை தமிழரென அடையாளப்படுத்த ராமசாமிப் புலவர் ஏன் தயங்கினார் என்று வினா தொடுக்க வேண்டும். கால்டுவெல்லுக்கு முன்பு இந்தியவியல் என்பது சமஸ்கிருதவியலாகவே இருந்தது. தமிழியலை இந்தியவியலின் பிரிக்கவியலாத பகுதியாக்கியவர் கால்டுவெல்.

தமிழறிஞர் ஹாமீம் முஸ்தபா உரையாடும்போது குணங்குடி மஸ்தான் என்கிற தமிழ்ப் பண்பாட்டு ஆளுமையைக் கோமணத்தாண்டி என்று மதத்தின் பெயரால் பரிகாசம் செய்த கும்பல் அரசியலைப் பந்தாடிப் பேசினார். இறைஞான இலக்கியங்களின் இறையியலை, மொழி வளமையை வாசிப்பு வட்டங்களின் மூலமாக செழுமைப்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். புதுக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் அப்துல் ரசாக் பேசும்போது வரலாற்றுத் தேவதையின் மீது வால்டர் பெஞ்சமின் கொண்டிருந்த நம்பிக்கையை மேற்கோள் காட்டினார். “ஆபத்துக் காலத்தில் மின்னி மறைகிற நம்பிக்கையைப் பற்றிக் கொள்ள உதவும் கருவி வரலாறு.” ஆதிக்கத்துக்கு ஒருபோதும் அடிபணியாத, நிலைகுலையாத உறுதியுடன் மக்கள் சமூகம் ஆபத்துக் காலத்தை வென்று காட்டும் என்கிற நம்பிக்கையுடன் கருத்தரங்கை நிறைவு செய்தார்.

சுபாஷினி: தமிழ் மரபின் விடுகதை

செய்யிது ஆசியா உம்மா: ஜக்காத்

நாட்டின் முதல் கப்பலோட்டி இந்தப் பெண்தான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here