இறால் தொக்கு மிகவும் சுவையான உணவு. கடல் உணவு வகைகள் வேக மிகக் குறைந்த நேரமே போதுமானது. கடல் உணவுகள் எங்கள் வீட்டில் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இறால் தொக்கு செய்யும்போது நான் சாதம், மிளகு ரசம் மட்டும் செய்வேன். தேவாமிர்தமாக இருக்கும். தொக்கை சாதத்தோட பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். அலுவலகம் செல்லும் என் பிள்ளைகளுக்கு இறால் பிரியாணி, இறால் வறுவல் செய்து கொடுப்பேன்.

என் சிநேகிதி வீட்டிற்கு சென்று இருந்த சமயம் அவர்களுக்கு மீன் கொடுப்பவர் மீன் எடுத்து வந்திருந்தார். கூடையில் இறாலை பார்த்ததும் பிள்ளைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள் என்று வாங்கினேன். வீட்டிற்கு வந்து சமைத்து, உங்களுக்காக குறிப்புகளும் எழுதியுள்ளேன்.

தேவையான பொருட்கள் :

இறால் – 1/2 கிலோ
வெங்காயம் – 2 பெரியது
தக்காளி – 2 நடுத்தரமானது
இஞ்சி அரைத்து -1/2தேக்கரண்டி
பூண்டு அரைத்தது 1 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
சோம்பு தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
மல்லித்தூள் -2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை சிறிதளவு
வெந்தயம் – 5
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி

செய்முறை :

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும். அது சூடானவுடன் சோம்பு வெந்தயம் போடவும். லேசாக நிறம் மாறியதும் வெங்காயம் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போடவும். நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு கலவையை போடவும் பச்சை வாசனை போக வதங்கியதும் தக்காளியை போடவும்.

தக்காளி போட்டதும் உடன் உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் அதில் இறாலை போடவும் பத்து நிமிடம் வதக்கினால் போதும். இறக்கும்போது மிளகுத்தூள் சோம்புத்தூள் போட்டு கிளறி விடவும். சுவையான இறால் தொக்கு ரெடி.

1 கருத்து

ஒரு பதிலை விடவும்