இரு படங்கள்: ஒரு கதை

The two documentary films on Cyclone Ockhi have exposed the criminal negligence of the state machinery.

0
2177

இருநூறுக்கும் மேலான உயிர்களை இழந்த எனது சமூகத்தின் அழுகை ஐந்து கிலோமீட்டர் தூரத்துக்குக்கூட போய்ச் சேரவில்லை என்று சொன்னது அருள் எழிலனின் “பெருங்கடல் வேட்டத்து” ஆவணப்படம்; ஒரு யதார்த்தக் கதைசொல்லியாக பத்திரிகையாளர் அருள் எழிலன் கடலோடிகளின் எழுச்சிக்காக தன்னியல்பான, சுதந்திரமான சிந்தனைகளை முன்வைத்தார். திவ்யபாரதியின் “ஒருத்தரும் வரேல” இந்தக் கதையைச் சொல்லிவிட்டு மக்கள் சக்தியால் இந்த நிலைமை மாறும் என்று உணர்வெழுச்சி மிக்க ஒரு பாட்டைப் பாடி முடிகிறது. அருள் எழிலனின் அணுகுமுறையில் ஓர் இதழாளனின், மானுடவியலாளனின் தரிசனம் இருக்கிறது. திவ்யபாரதியின் அணுகுமுறையில் ஓர் அரசியல் செயல்பாட்டாளரின் ஈடுபாடு தெரிகிறது.

ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மக்களின் அறிவை மத்திய அரசாங்கம் மதிக்கவில்லை என்பதை இரண்டு படங்களும் மிகவும் வலிமையாக நிறுவுகின்றன; மக்கள் திரும்பத் திரும்பச் சொன்னதை மத்திய அரசாங்கம் உதாசீனம் செய்தது; இந்த உதாசீனம் எப்படி குழித்துறை ரயில் மறியலுக்குக் காரணமானது என்பதை அருள் எழிலனின் படம் படிப்படியாக நிறுவுகிறது. இந்தக் கடலோரத்திலிருந்து மக்களை அகற்றுவதுதான் மத்திய அரசின் திட்டம் என்று அருள் எழிலன் படத்தின் கடைசியில் வசனமாக சொல்லுவார். கடலோர மக்களை அவர்களது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து அகற்றுவதை மத்திய அரசு எப்படித் திட்டமிடுகிறது என்பதைப் படிப்படியாக நிறுவுகிறது திவ்யபாரதியின் “ஒருத்தரும் வரேல” ஆவணப்படம். கடலோர மக்களின் வாழ்வைச் சுற்றிய ஓர் இடதுசாரி அரசியல் சொல்லாடலைக் கட்டமைக்கும் திவ்யபாரதி ஒக்கி பேரிடரின்போது பொய்மையில் ஊறிக்கிடந்த வலதுசாரிகளின் பேச்சுகளைப் படிப்படியாக அம்மணமாக்குகிறார்.

ஒக்கி பேரிடரில் அரசு எந்திரத்தின் பொய்மையைக் கட்டவிழ்ப்பது ஒரு பத்திரிகையாளனாக அருள் எழிலனுக்கும் முக்கியமானதாக இருக்கிறது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனின் “பொறுப்பற்ற” பேச்சுகளை எழிலன் காட்சிகள் வழியாகவும் மக்களின் வாக்குமூலங்கள் வழியாகவும் கட்டுடைக்கிறார்; அதே உத்தியை திவ்யபாரதியும் மேற்கொள்கிறார். இருநூறுக்கும் மேலான ஆண்களை இழந்த பின்னர் பெண்கள் எப்படி ஒவ்வொரு தினத்தையும் எதிர்கொள்கிறார்கள் என்பதை அருள் எழிலனின் படம் புரிந்துகொள்ள எத்தனிக்கிறது; நவம்பர் 29-30, 2017இல் தாக்கிய ஒக்கி புயலின் தீவிரத்தைப் புயலில் சிக்கி மீண்டு வந்த மக்களின் வாக்குமூலங்களாக ஆவணப்படுத்துகிறது “ஒருத்தரும் வரேல”. வானிலை முன்னறிவிப்பின் தோல்வியையும் பேரிடர் மேலாண்மையின் தோல்வியையும் இரண்டு படங்களும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளன. அரசின் அலட்சியத்துக்குப் பின்னால் இருப்பது அறியாமையா அல்லது நமது படைகளின் இயலாமையா என்கிற கேள்வியை இரண்டு படங்களும் எழுப்புகின்றன. ஆனால் அலட்சியத்தையும் தாண்டி ஒக்கி பேரிடரில் சிக்கிய மீனவ உயிர்களைச் சக உயிர்களாக பார்க்க தயாராக இல்லாத அரச மனநிலை இந்தப் படங்களின் மூலம் அம்பலப்பட்டு நிற்கிறது.

சாதாரண மக்களை உதாசீனம் செய்யும் மத்திய அரசின் தன்மை இரு ஆவணப்படங்களாலும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நிறுவப்படுகிறது. தமிழ்நாட்டு எல்லைக்குள்ளிருந்து அருள் எழிலன் சொன்ன கதையை ஒக்கியால் பாதிப்புக்குள்ளான கேரள எல்லைக்கும் விரிவுபடுத்தியுள்ளார் திவ்யபாரதி. எழிலனின் படத்தில் பேசும் மீனவத் தாய் ஒருத்தி, ஒரு அடைக்கண்டத்தைப் (மரத்துண்டு) பிடித்துக் கொண்டு ஒரு வாரம் கடலில் மிதக்கத் தெரிந்த எங்கள் பிள்ளைகளை அரசாங்கம் அம்போவென்று கைவிட்டு விட்டது என்பார். வானியல் அறிவையும் கடல் அறிவையும் இணைத்துப் பார்க்கிற புதிய ஆழத்தை வள்ளவிளையின் ஆல்பர்ட் இரு படங்களிலும் பேசிச் செல்கிறார். கடல் எல்லைகளைப் பாதுகாக்கும் மக்கள் நாங்கள் என்கிற பெருமிதம் இரண்டு படங்களினூடாகவும் தெறிக்கிறது. ஒக்கி பேரிடரைப் பற்றி தனது எழுத்துகளின் மூலமாக கவனத்தை ஈர்த்த பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின், “இது கண் காணா மக்களுக்கு நடந்த கண் காணாப் பேரிடர்” என்று சொன்னார். இந்த அறைகூவலின் பின்னணியில் இந்த இரண்டு ஆவணப் படங்களும் மாபெரும் கரிசனத்தின் சாட்சியங்களாக பெரும் உரையாடல்களின் தொடக்கங்களாக அமைந்திருக்கின்றன. பேருந்துகளில் “அந்த மீன் சருவத்தை அப்பாலே வை” என்று எரிச்சலோடு கத்துகிற நடத்துநரின் இன ஒதுக்கலிலிருந்து அரசின் இன ஒதுக்கல் நீள்கிறது. ஆனால் நம்பிக்கை தரும் புதிய உரையாடல்கள் வரலாற்றை மக்களுக்கு ஆதரவானதாக திருப்பும்.

The flawed policy of the Indian state cost over 300 lives

கண் காணா மக்களுக்கு நடந்த கண் காணாப் பேரிடர்

‘ஹிந்து’வின் கதை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here