‘இரு குஜராத்தி குண்டர்கள் 5 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றுகிறார்கள்’ – பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட செய்தி தொடர்பாளர்

0
388

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவை, உத்தர பிரதேசத்தை ஏமாற்றும் இரு குஜராத்திகள் என்று பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட ஐ.பி.சிங் கூறியுள்ளார். 

உத்தர பிரதேசத்தில் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் ஐ.பி.சிங். இவர் திங்கள்கிழமை இரண்டாவது முறையாக பாஜகவில் இருந்து ஆறு வருடங்களுக்கு நீக்கப்பட்டுள்ளார்.  பாஜக மீது  அதிருப்தி அடைந்த ஐ.பி.சிங், ஆசம்கர் தொகுதியில் போட்டியிடும் அகிலேஷ் சிங் யாதவின் முடிவை வரவேற்றும்  தனது ஆசம்கர் வீட்டில் தேர்தல் அலுவலகத்தையும் தொடங்கலாம் எனவும் டிவீட் செய்திருந்தார்.  

இது குறித்து உத்தர பிரதேச  மாநில பாஜகவின் பொதுச் செயலாளரான வித்யாசாகர் சோன்கர் கூறும்போது, ‘எங்கள் மாநிலத் தலைவர் மஹேந்திர நாத் பாண்டே உத்தரவின் பேரில் ஐ.பி.சிங் கட்சியில் இருந்து ஆறு வருடங்களுக்கு நீக்கப்படுகிறார். இவர் கட்சிக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டார் ” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், ஐபி சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் நான் கொள்கை பிடிப்புக் கொண்ட ஷத்ரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். இரண்டு குஜராத்தி குண்டர்கள் பிரதமர் மோடியும் , அமித் ஷாவும் கடந்த 5 ஆண்டுகளாக அமைதியாக இருந்து வரும் இந்தி பேசும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்று வெள்ளிக்கிழமை டீவீட் செய்திருந்தார்.   

எங்கள் உத்தரபிரதேசம் குஜராத்தைவிட 6 மடங்கு பெரியது. குஜராத்தின் ஆண்டு செலவிற்கான ஒதுக்கீடு ரூ.1.15 லட்சம் கோடி. ஆனால், உத்தர பிரதேசத்துக்கு  வெறும் ஐந்து லட்சம் கோடி ரூபாய்’ இதில் அவர்கள் என்ன உண்பார்கள் என்ன வளர்ச்சியைக் காட்டிட முடியும் என்று பதிவிட்டிருக்கும் ஐபி.சிங் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில் அவர், ‘உங்கள் லக்னோ தொகுதிக்காக நீங்கள் எதையும் செய்யவில்லை. நீங்கள் பிறந்த சந்தவுலியின் கிராமத்திற்கு கூட உங்களால் ஒரு வளர்ச்சியும் செய்ய முடியவில்லை. உங்கள் அனைவரையும் பற்றி உத்தர பிரதேசத்தினர் அறிவர்’ எனக் குறிப்பிட்டுள்ளார் ஐ.பி.சிங்.

மற்றுமொரு டிவீட்டில் நாம் தேர்ந்தெடுத்த  மோடி பிரதமரா அல்லது பிரச்சார மந்திரியா? , பிரதமர் டீ சர்ட்டுகளையும், டீ கப் களையும் விற்று கொண்டிருக்கிறார். இது சரியா?  

ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆடை அணிபவர் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தத் திட்டமிடுகிறார். இந்த ஒவ்வொரு கூட்டத்தின் செலவும் ரூ.100 கோடி எனும் நிலையில் தன்னை அவர் ஏழை என்கிறார்’என டிவீட் செய்துள்ளார்.

பாஜக அதன் கொள்கைகளில் மக்கள் மனதில் நின்றிருந்தது . மிஸ்டு கால் மற்றும் டீ சர்ட் மூலமாக கட்சி தொண்டர்களை உருவாக்குவது முடியாது.  

அகிலேஷ் யாதவ் பூர்வாஞ்சலில் போட்டியிடுவதை உத்தர பிரதேச இளைஞர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள். இது ஜாதி, மதம் கடந்த அரசியலாக இருக்கும் என்றும் நான் 6 வருடத்துக்கு பாஜகவில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறேன் என்பதை மீடியா நண்பர்கள் மூலம் தெரிந்துக் கொண்டேன் என்றும் டிவீட் செய்திருக்கிறார்.   

நான் எனது 30 வருடங்களை கட்சிக்காக செலவழித்துவிட்டேன் . உண்மையை பேசுவதே குற்றமாக பார்க்கப்படுகிறது , கட்சியில் ஜனநாயகம் கெட்டுவிட்டது என்றும் டிவீட்டில் பதிவிட்டுள்ளார். 

மோடிஜி அவர்களே  என்னை மன்னித்து விடுங்கள், கண்ணைக் கட்டிக் கொண்டு  நான் உங்கள் காவலாளியாக வேலை செய்யமுடியாது என்றும்  பதிவிட்டுள்ளார்.   இதற்கு முன் ஐபி.சிங்கை 2012-ல் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த உபேந்திர குஷ்வாஹாவை பாஜகவில் சேர்த்த போது ஐபி.சிங் கடுமையாக எதிர்த்தார்.

தேசிய சுகாதாரத் திட்டத்தில் ஊழல் செய்த குஷ்வாஹாவை கட்சியில் சேர்ப்பது தவறு என விமர்சனம் செய்தற்காக ஐபி.சிங் நீக்கப்பட்டிருந்தார். பிறகு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here