இரும்புத்திரை திரைப்படம் சைபர் க்ரைம் குற்றங்களின் பின்னணியில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் எடுக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. அவற்றிலிருந்து மாறுபட்ட விமர்சனம் ஒன்றை கவிஞர், பதிப்பாளர், திமுக உறுப்பினர் மனுஷ்யபுத்திரன் வைத்துள்ளார். தனது பேஸ்புக்கில் பக்கத்தில் அவர் எழுதியுள்ள அந்த விளாசல் விமர்சனம்…

இரும்புத்திரை : கலைக்கும் உண்மைக்கும்

பொதுவாக தமிழில் ஒரு சமூகப்பிரச்சினையைவிட அந்தப்பிரச்சினையைப்பற்றி எடுக்கப்படும் படங்கள் கொடூரமாக இருக்கின்றன. என்னால் ஒரு பெரிய லிஸ்டே தரமுடியும். அந்த வரிசையில் இரும்புத்திரை.

அந்தரங்க திருட்டு தொடர்பாக ஏற்கனவே ‘லென்ஸ்’ என்ற ஒரு படம் வந்திருக்கிறது. இரும்புத்திரை தகவல் திருட்டு, அதன் அடிப்படையிலான வங்கி மோசடிகள் பற்றி பேசுகிறது. ஆம் பேசிக்கொண்டே இருக்கிறது. ரஜினியிடம் தலித்தியத்தையும் விஜய்யிடம் கம்யூனிஸத்தையும் கண்டு மகிழ்பவர்கள் விஷாலிடம் சைபர் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தைக் கண்டு இன்புறலாம். ஆனால் இது எல்லாமே தனிநபர் சாகச மசாலாக்களுக்கானா கச்சா பொருளே தவிர அவை அந்தப்பிரச்சினையின் அசலான பரிமாணங்களை தொடுவதில்லை. எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இன்றுவரை இந்த ஃபார்முலாவில் ஒரு துளி மாற்றமில்லை.

நவீன வாழ்க்கை முறையில் தொழில்நுட்பம் ஏற்படுத்தும் அக புற சிக்கல்களை தமிழ்சினிமா தனது பத்தாம்பசலித்தனமான பார்வையிலேயே கையாள்கிறது என்பதற்கு இப்படமும் ஒரு உதாரணம். சைபர் குற்றங்கள் தொடர்பான ஆயிரம் ஆயிரம் சுவாரசியமான உண்மைக் கதைகள் இருக்கின்றன. இந்தப்படம் இதற்கெல்லாம் சம்பந்தமில்லாமல் ஒரு கதையை கஷ்டப்பட்டு சொல்கிறது.

தகவல் திரட்டு, அந்தரங்க திருட்டு தொடர்பாக இன்று ஏராளமான தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் கொட்டிக்கிடக்கின்றன. போனவாரம் அவுட்லுக்கில் கூட வாட்ஸப் எந்த அளவு பாதுகாப்பற்றது என்று ஒரு கவர் ஸ்டோரியே எழுதியிருந்தார்கள். ஸ்மார்ட் போன் பாதுகாப்பற்றது என்ற ‘அரிய’ உண்மையை வைத்துக்கொண்டு ஒரு மூன்று மணி நேர சொதப்பலான திரைக்கதை.

வங்கிக்கணக்கு மோசடிகளுக்கு ஆளாகிறவர்கள் எல்லாம் வங்கியை போலி ஆவணம் கொடுத்து ஏமாற்ற முயல்பவர்கள்தான் என்று ஒரு அபத்தமான தியரியை படம் முன் வைக்கிறது. தகவல் திருடி, கணக்கில் பணம் திருடுகிற ஹாக்கர்களால் யார்மீது வேண்டுமானாலும் கைவைக்க முடியும். இன்னொன்று சைபர் கிரைம் என்பது எளிதில் தொடமுடியாத கண்ணுக்கு தெரியாத சாத்தான். தொழில் நுட்பம் தெரிந்த மிக சாதாரணமான, ஸ்கூல் பையன்கள் கூட ஒரு ராணுவத்தின் கோட்டையிலேயே ஓட்டை போட்டுவிடுவார்கள். ஆனால் இதற்கு அர்ஜுன் மாதிரி ஒரு டானை உருவாக்கி விஷால் மாதிரி ஒரு ஆக்‌ஷன் ஹீரோ அவனை தேடிச்செல்வதும் வில்லனின் ஆட்களை ஒத்தையாய் தூக்கிபோட்டு மிதித்து பிடிப்பதும் தலையை சுக்கு நூறாக வெடிக்கச் செய்கிறது. ஹாக்கர்கள் படத்தை பார்த்துவிட்டு “இவனுங்க என்ன லூசுங்களா?” என்று சிரிக்க மாட்டார்களா? இதில் ரிச்சி ஸ்ட்ரீட் டில்தான் இதெல்லாம் நடக்கிறது என்ற கண்டுபிடிப்பு வேறு. அம்பேத்கரியம், கம்யூனிஸம் போலவே இணையக் குற்றம் என்ற பிரமாண்டமான விஷயத்தையும் உங்கள் சினிமா பொதுப்புத்திக்கு ஏற்ப கீழே கொண்டுவந்தால் எப்படி?

‘தகவல் திருட்டிலிருந்து தப்பிக்க ஸ்மார்ட்போன்களுக்கு பதில் அப்பா உபயோகப்படுத்தும் சாதாரண போனை பயன்படுத்துவதே நல்லது’ என்ற வசனத்தை கேட்டபோது ஒரு டிஜிட்டல் நம்மாழ்வாரை கண்டதுபோல புல்லரித்துவிட்டது.

சமந்தா என்னதான் பார்க்க நன்றாக இருக்கிறார் என்றபோதும் அவர் கொடுக்கும் கவுன்சிலிங், பேசும் வாழ்க்கை தத்துவங்கள் எல்லாம் வெயில் காலத்தில் காணக் கூடாத காட்சிகள்

தகவல் திருட்டு என்பது வெறுமனே வங்கி மோசடிக்கானதல்ல, அது மக்களின் மனங்களை கட்டுப்படுத்தும் அரசியல் ஆயுதம். திருடப்பட்ட ஃபேஸ்புக் தகவல்கள் அமெரிக்க தேர்தலை நிர்ணயித்தது தொடர்பாக மார்க் குற்றவாளிக் கூண்டில் நின்று பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆதார் என்பது கார்பரேட்டுகளுக்காக வேலை செய்கிற ஒரு பாசிச அரசாங்கம் மக்களின் கலாச்சார பொருளாதார வாழ்வின் மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கான கருவி. அந்த வகையில் அரசாங்கம் தகவல்களை பாதுகாக்கிறதா என்ற பேச்சுக்கே இடமில்லை. தகவல் திருடும் முதல் திருடனே அரசுதான். அந்த வகையில் ஆதார் என்பது மிகப்பெரிய அரசியல் பிரச்சினை. ஃபேஸ்புக் சர்வதேச அரசியல் பிரச்சினை. ஆதார், தகவல் திருட்டு என்பதெல்லாம் டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க 56 இஞ்ச் மார்புடன் ராப்பகலாய் உழைப்பவர்களின் தொலைநோக்கு சதிகளுடன் தொடர்புடையவை. இதையெல்லாம் பேசினால்தான் அது ஆதாரைப்பற்றிய படம். அதன் அரசியலைப்பற்றிய படம். அப்படி பேசினால் விஷால் வீட்டிற்கு ரெய்டு வரும். அல்லது படமே தியேட்டருக்கு வராது.

ஆதாரைப்பற்றி ஒரு படம் எடுப்பது மிகவும் எளிது. கணக்கு திருடப்பட்டு பணமிழக்கிற ஒரு குடும்பம் எத்தனை நெருக்கடிகளை சந்திக்கிறது என்பதை எதார்த்தமாக எடுத்தாலே போதும். மக்கள் அதில் தம் வாழ்வை இனம் கண்டுகொள்வார்கள். எவ்வளவு பெரிய சிக்கலான பிரச்சினையையும் ஒரு எளிய மனிதனின் வாழ்வினூடே கலையாக்க முடியும். ஆனால் இரும்புத்திரை போன்ற படங்கள் அந்தப் பிரச்சினைக்கும் நியாயம் செய்வதில்லை. சினிமா என்ற கலைக்கும் நியாயம் செய்வதில்லை.

விஷாலுக்கு அரசியல் தேவை கருதி உடனடியாக ஒரு சமூக போராளி கதாநாயக பிம்பம் தேவைப்படுவதால் இந்தப்படத்தை தயாரித்திருக்கிறார். அர்ஜுன் சம்பத்தும் ஹெச் ராஜாவும் இந்தப் படத்திற்கு எதிராக களத்திற்கு வரமாட்டார்களா என்று ஆவலுடன் அவர் காத்திருக்கக் கூடும்

படம் முடிந்து பார்வையாளர்கள் ஒரு கணம் தங்கள் ஸ்மார்ட் போனை பீதியுடன் உற்றுப்பார்த்துவிட்டு “ஹெலோ இதோ வந்துட்டே இருக்கேம்மா” என யாரிடமோ சொல்லிக்கொண்டே இறங்கிச் சென்றார்கள்.

– மனுஷ்ய புத்திரன்

இதையும் படியுங்கள்: சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here