”இரண்டு நாளா வீட்டுல சாப்பாடுகூட செய்யல”: லோல்படும் கூலி வேலையாட்கள்

0
578

(நவம்பர் 28,2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

“பாலு, வண்டி வந்திடுச்சி ஓடு ஓடு.”
“நீ போடா, அடுத்த வண்டிக்கு நான் வரேன்.”
“இன்னா ஆச்சி இவனுக்கு, அவன் அவன் வண்டி வரலென்னு கிடக்குறான். இப்ப போய் ஒதுங்குறன்னு” சொல்லி, என்னக் கட்டாயப்படுத்தி இட்டுகுனு போனான் மதன். வேற எங்கேயும் இல்லைங்க, மார்க்கெட்ல காய்கறி மூட்ட தூக்கத்தான். இப்ப நான் மூட்ட தூக்குற ஆர்வமே இல்லாம அந்த வேலை செய்யப்போறேன்.

இன்னாடா இவன் சோம்பேறி போல, ஒழைக்க மனசு வராம இருக்குறானோன்னு நெனச்சிடாதிங்க. கஷ்டப்பட்டு உழைச்சி சம்பாதிக்கணும் என்கிற ஆர்வத்தோடதான் தூத்துக்குடியில இருந்து சென்னைக்கு வந்திருக்குறேன். ஆனா இந்தக் கூலிக்கு நான் தொடர்ந்து வேலை செஞ்சிகிட்டு இருந்தா என்னோட அப்பா, அம்மாவ என்னால காப்பாத்த முடியாது. இன்னு சொல்லப் போனா என்னையே நான் பாத்துக்க முடியாது. அப்ப எவ்ளோதான் இவனுக்குச் சம்பளம் இருக்குன்னு நீங்க நினைக்கலாம்?

மார்க்கெட்டுக்கு வர வண்டியில இருந்து காய்கறி மூட்டையத் தூக்கிட்டுப் போய் கடை கடையா போடணும். மூட்டையோட எடையப் பொறுத்து கட ஓனருங்க பச்ச, சிகப்பு கலர் டோக்கன் கொடுப்பாங்க. பச்ச டோக்கனுக்கு அஞ்சு ரூபாய் கூலி; சிகப்பு டோக்கனுக்கு பத்து ரூபா.

நாள் முழுக்க மூட்ட தூக்கினாலும் முன்னூறு ரூபா சம்பாதிக்கிறது கஷ்டம். கிடைக்கிற காச வைச்சிகிட்டு சாப்பாடு, டீ செலவு, தங்கறதுக்கும் பாத்துக்கணும். இந்த தி.நகர் காய்கறி மார்க்கெட்டுல நான் இரண்டு மாசம் வேலை செய்திருக்கேன். இது மூணாவது மாசம். கடைசி இரண்டு மாசத்த நான் எப்படியோ ஓட்டிடேன். மெட்ராசுக்கு வேலைக்குப் போன புள்ள வேல செஞ்சி பணம் அனுப்புவான், வீடு கட்டணும், தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணணும் என்கிற கனவோட ஊர்ல காத்திருக்காங்க. நான் இங்க அஞ்சு ரூபா, பத்து ரூபா கூலிக்கு வேல செஞ்சிகிட்டு இருந்தா என் குடும்பத்தோட நெலம என்ன ஆவறது? கடைசி பத்து, பதினைஞ்சு நாளா இந்த வேலை கிடைக்கிறதும் கஷ்டமா போயிடுச்சி. ஐநூறு ரூபா, ஆயிரம் ரூபா செல்லாதுன்னு பிரதமர் மோடி அறிவிச்சதுக்குப் பிறகு மார்க்கெட்டுக்கு வர காய்கறி வண்டிங்களோட எண்ணிக்க குறைஞ்சிடுச்சு. தெனமும் பத்து காய்கறி வண்டிங்க வந்துகிட்டு இருந்த மார்கெட்டுக்கு இப்ப நாலு வண்டிங்கதான் வருது.

மார்க்கெட்டு உள்ள ஒரு காய்கறி வண்டி வந்துட்டா போதும்; உடனே நாப்பது பேராவது மூட்டய தூக்க முந்தி அடிச்சிக்கிட்டு போய் நிப்பாங்க. அந்தக் கூட்டத்துக்கு உள்ள புகுந்து இரண்டு மூட்டதான் நாம தூக்கிட்டுப் போய் கடையில போட்டு இருப்போம். மூணாவது மூட்டய தூக்க வரும்போதெல்லாம் வண்டியில காய்கறி மூட்டைங்க தீந்துடும். மீண்டும் அடுத்த வண்டிக்காக நாம காத்திருக்கணும். இந்தக் குறைஞ்ச கூலிய வச்சி நான் இன்னா பண்றது? அதனால காலையில நாலு அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்குப் போய் மூட்ட தூக்குவேன்.

labourpix

அங்க கொஞ்சம் காசு கெடைக்கும். இந்த ஐநூறு ரூபா, ஆயிரம் ரூபா நோட்டு பிரச்சன வந்த பிறகு அங்கேயும் வியாபாரம் கம்மியாயிடுச்சி. மார்க்கெட்டுக்கு வர வண்டிங்களோட எண்ணிக்க குறைஞ்சதால மூட்ட தூக்க போட்டி அதிகம். மக்கள் கையில காசு நடமாட்டம் இருந்தாதானே மார்க்கெட்டுக்கு வந்து பொருள் வாங்குவாங்க. எல்லாரும் பேங்கு முன்னாடி போய் நின்னா மார்க்கெட்டுல வியாபாரம் எப்பிடி நடக்கும்.

அதனாலதான் நான் வேற வேலைய தேட வேண்டிய கட்டாயத்துல இருக்குறேன். இந்த மாசக் கடைசியில உறவினர் வீட்டுத் திருமணத்துக்காக நான் ஊருக்குப் போகணும். சம்பாதிச்ச காசு எங்கடான்னு வீட்ல கேட்டா நான் இன்னா சொல்றது? சேமிச்சி ஊருக்கு எடுத்துக்கிட்டு போற அளவுக்கு நிலம இங்க இல்ல. இத நான் எப்பிடி சொல்லி புரிய வைப்பேன்னு எனக்குத் தெரியல. ஊர்ல வேல இல்லன்னு சொல்லிதான் தலைநகர் சென்னைக்கு வந்தோம். இங்கேயும் வேலையில்லன்னா நாங்க எங்க போறது என்று நம்மிடம் கேள்வி எழுப்பினார் பால்ராஜ் என்ற அந்த இளைஞர்.

அடுத்து தங்கசாலை என்று அழைக்கப்படும் மின்ட்டு வீதிக்குச் சென்றோம். வட சென்னையில உள்ள குடிசைப்பகுதிகளைச் சார்ந்த பெரும்பாலான இளைஞர்கள் பிழைப்பு தேடி இந்த தங்க சாலைக்குத்தான் வருவார்கள். இங்கே வணிக நிறுவனங்கள் அதிகமாக இருப்பதே அதற்கு முக்கிய காரணம். அதே நேரத்தில் சென்னையினுள் நடைபெறும் கட்டடப்பணிகளுக்குக் கூலி ஆட்கள் தேவைப்படுவோர் தங்க சாலைக்கு வந்தால் நிச்சயம் கூலித் தொழிலாளர்கள் கிடைப்பார்கள்….

டேய், பத்து ரூபா இருந்தா குடுடா. பஸ் பேருக்கு காசு இல்ல. எங்கிட்ட ஏது பச்சையம்மா உனக்குத் தெரியாதா? இதோ உன் பக்கத்திலேயே உக்காந்துகினு இருக்கிறானே ராஜா இவன்கூட வண்டியில ஜோடியா போயிடு. ஏன் இன்னம் கொஞ்சம் நேரம் இருந்து பாத்திட்டுதான் போயேன். மணி இன்னாடா ஆவுது, பதினோரு மணிக்கு மேல எவன் வந்து வேலைக்குக் கூப்பிட போறான் என்று வெறுத்து போய் பேசிக் கொண்டிருந்தார் அந்தப் பெண் கூலித் தொழிலாளி பச்சையம்மா. இந்த வெறுமை பேச்சுக்கான காரணம் என்ன என்று அந்தப் பெண்ணிடம் பேச்சு கொடுத்தேன்.

நான் கொருக்குப்பேட்டையில இருந்து வரேன். எனக்குக் கல்யாணமாகி இரண்டு பெண் பிள்ளைங்க இருக்குது. கட்டட வேலைக்கு சித்தாளா போறதுதான் என் வேல. தினமும் காலையில இங்க வந்தா மேஸ்திரிங்க, வீடு கட்றவங்க வந்து கூட்டிகினு போவாங்க. நான் பெண் சித்தாளுங்கிறதால எனக்கு நானூறு ரூபாய் கூலி கொடுப்பாங்க. ஆண் சித்தாளுக்கு ஐநூறு ரூபா. வாரத்துல குறைஞ்சது நாலு நாளாவது எங்களுக்கு வேல கிடச்சிடும். அதக்கொண்டுதான் வீட்டு வாடக, சாப்பாடு, பசங்களுக்கான படிப்புச் செலவு, எல்லாத்தையும் பாத்துப்போம். ஆனா இந்தப் பதினைஞ்சு நாளா வேல இல்லாம இருக்குறோம். சொன்னா நம்ப மாட்டீங்க. உண்மையிலேயே இரண்டு நாளா வீட்ல சாப்பாடுகூட செய்யல, இங்க வந்து உக்காந்துகினு இருந்துட்டு, சும்மானா வீட்டுக்குப் போறோம்.
இங்க இருந்து வீட்டுக்குப் போறதுக்குக்கூட எனக்கு இப்ப காசு இல்ல. வீட்டு வாடக கொடுக்கணும். பசங்களுக்குப் பால் வாங்கி கொடுக்கணும். வேல இல்லனா இதையெல்லாம் எப்பிடி செய்யுறது சொல்லுங்க? திடீர்ன்னு இப்பிடி ஏம்மா வேல கிடைக்கல? இந்த ஐநூறு ரூபா, ஆயிரம் ரூபா நோட்டு செல்லாதுன்னு அறிவிச்சாங்களே, அதுக்கு அப்புறம் வேல இல்லங்க.

நானும் எல்லா மேஸ்திரிக்கும் போன் போட்டு கேட்டுப் பாத்துட்டேன். கட்டட வேலை தொடங்கினா உனக்குச் சொல்றமான்னு வச்சிடுறாங்க. அப்பிடியே சிலர் வந்து கூப்பிட்டாலும் பழைய ஐநூறு ரூபா நோட்டுதான் இருக்குது, வேணும்ன்னா வேல செய்யுங்கனு சொல்றாங்க. மொதெல்லாம் வேல செஞ்சி முடிச்ச பிறகு ஐநூறு ரூபா நோட்ட கூலி கொடுக்குறதுக்கு பாத்து பாத்துக் கொடுப்பாங்க. இப்போ இன்னாடான்னா இந்தா இந்தான்னு சொல்லிக் கூப்பிடுறாங்க. வேல இல்லாம கிடக்குறோமேன்னு ஒரு நாள் வேல செஞ்சிட்டு அந்தப் பழைய ஐநூறு ரூபாய் நோட்ட வாங்கிக்கினு வந்தேன். அதக் கொண்டு போய் மளிகக் கடையில கொடுத்தா நூறு ரூபா கமிஷனா புடிச்சிகினு கொடுக்குறாங்க.

யாரோ மோடியோ மோடி அவரு பண்ண வேலதான் இது. அவருக்கு இன்னா கிடக்குது. லட்ச லட்சமா சேத்து வச்சியிருப்பாரு. கூலி வேலக்கு போறவங்கதான் லோல்பட்டுகினு கிடக்குறாங்க என்றார். இந்த மாச வாடகைய எப்பிடி கொடுக்க போறனோ என்று ஏக்கம் பிடித்து போய்க் குமுறினார் அந்தப் பெண்.
இந்த வறுமைச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு ஒருவர் அந்தப் பெண்ணைப் பாலியல் தொழிலுக்கு அழைக்க முற்பட்டார். ”நீ எவ்ளோ ரூபா கொடுத்தாலும் அந்த மானங்கெட்ட புழப்புக்கு நான் வரமாட்டேன்” என்று நெத்தியடியாக பதில் கொடுத்தார் பச்சையம்மா. தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கும்போது, குறிப்பாக பெண் தொழிலாளர்கள் மீது இத்தகைய பாலியல் சீண்டல்கள் நடைபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளதை நேரடியாக பார்க்க முடிந்தது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்