அடித்தளச் சமூகங்கள் வலுவான பண்பாட்டுப் பிணைப்புகளுடன் இயங்குபவை; பெரும் நெருக்கடிகளிலிருந்து மீண்டெழும் நெகிழ்தன்மை கொண்டவை. எனினும், பேறுகாலம் ஒரு வீராங்கனையைப் பலவீனப் படுத்துவது போல, பேரிடர்க் காலம் சமூகக் கட்டுமானத்தின் ஆணிவேரை உலுக்கிவிடுகிறது. ஆபத்பாந்தவான்களின் அரிதாரத்துடன் அழையா விருந்தாளிகளாக பல புதிய பங்காளிகள் நுழைந்து புரளும் களமாக அந்தச் சமூகம் மாறிவிடுகிறது. அதன் சுயசார்புப் பொருளாதாரத்தைப் பல ஆண்டுகளுக்குப் பின்தள்ளிவிடுகிறது. இதுபோன்ற சூழலில் குடிமைச் சமூகத்தின் தார்மிகக் கடமை என்ன?

ஓர் அடித்தளச் சமூகம் இயற்கைப் பேரிடரில் சிக்குண்டு அபயக்குரல் எழுப்பும்போது ‘உடுக்கை இழந்தவன் கைபோல்’ ஓடிச்சென்று கைதூக்கிவிடுவதுதான் மானுட அறம். கடல் பழங்குடிகள் முன்னெப்போதும் சந்தித்திராத நடுக்கத்தை ஒக்கிப் பேரிடரின்போது எதிர்கொண்டன. பல்லாயிரம் பேரை சில நிமிடங்களில் ஜலசமாதியாக்கிய சுனாமிப் பேரிடர்கூட கடலின் மீது இத்தனைப் பெரிய பீதியை ஏற்படுத்தியதில்லை. ஒக்கிப் பேரிடர் பீதி, கடல் விளைவித்ததல்ல, கரை திட்டமிட்டு நிகழ்த்திய ஓன்று. அபாயமணி ஒலிக்கவேண்டிய அரசு அவர்களைக் கைவிட்டது; மீட்க வரவேண்டிய படைகள் சடலங்களை சேகரிக்கக் கூட வரவில்லை.

ஒக்கிப் பேரிடருக்குப்பின் ஒரு சமூகச் செயல்பாட்டாளராக சில நடவடிக்கைகளில் இறங்கியிருந்தேன். சுனாமிக்குப் பிந்தைய காலத்தில் நிகழ்த்தியது போல இம்முறை ஆவணப் பதிவுகளில் கவனம் குவித்ததுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான உளநல இடையீட்டிலும் என்னை இணைத்துக் கொண்டிருந்தேன். வாழ்வின் பற்றுக்கோடாய் நம்பியிருந்த ஒரே நபரையும் வாழ்வாதார முதலீட்டையும் ஒருசேர இழப்பதன் துயரை, அதிர்ச்சியைக் கடல் அபலைகளின் கண்களில் கண்டேன். கல்லும் கனிந்துருகும் அந்த வேளையில் மனித மனங்களைக் கல்லாக்கிய காரணிதான் என்ன?

மத்திய அமைச்சரான கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதி எம்பி களத்துக்கு வரவே இல்லை. பிரதமரும் சரி, மக்களின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வருகை தந்த முதல்வரும் சரி- பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை. ஆழ்கடலில் சிதறுண்டு கிடந்த மீனவர்களைத் தேடி மீட்பதில் அரசுகள் நேர்மை பேணவில்லை என்பதை ‘பெருங்கடல் வேட்டத்து’ உள்ளிட்ட பல்வேறு ஆவணப் பதிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன. ஓய்வு பெற்ற நீதியரசர் கோல்சே பாட்டீல் தலைமையில் டிசம்பர் 2017இல் கன்னியாகுமரி, கேரளாவில் முகாமிட்டிருந்த உண்மை கண்டறியும் குழு அதன் அறிக்கைக்கு ‘ஒக்கிப் பேரிடரில் இன ஒதுக்கல்கள்’ என்று பொருத்தமாகத் தலைப்பிட்டிருந்தது. மனித மனத்தில் உறங்கிக் கிடக்கும் பேரினவாத விலங்கு, நரவேட்டை நிகழ்த்த ஏதுவான நெருக்கடிக் காலங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. வடஅமெரிக்காவில் கத்ரீனா புயலின்போது கறுப்பர் குடியிருப்புகளில் வேட்டை நிகழ்த்திய அதே விலங்கு. மறுபுறம் மானுடநேயம் உச்சம்பெறும் காட்சிகளையும் பேரிடர் வேளைகளில் காணமுடிவதுண்டு. 2017 ஒக்கிப் புயல், 2018 கேரள பெருவெள்ளத்தின்போது நமது மீனவ சகோதரர்கள் நிகழ்த்திய சாகச மீட்புப்பணி ஓர் எடுத்துக்காட்டு.

ஒக்கி ஆழ்கடலில், கண்ணுக்குப் புலப்படாத பெருந்தொலைவில் நேர்ந்த பேரிடர் என்பதால் அதன் தாக்கத்தை அரசுகள் புரிந்து கொள்ளவில்லை என்று ஒரு கட்டத்தில் என்னை நானே ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தேன். சில மாதங்களுக்குப் பிறகு, ஒக்கி அபலையர் மறுவாழ்வை முன்னிட்டு சில நண்பர்கள் வழியாக ஓரிரு பெருந்தொழில் நிறுவனங்களை அணுக முயன்றோம். பெருநிறுவனங்கள் தம் இலாபத்தில் ஒரு பகுதியை ஆண்டுதோறும் சமூக வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு ஒதுக்கவேண்டும் என அரசு விதித்துள்ள நிலையில், பேரிடர் அபலைகளுக்காக ஓரிரு ஆண்டுகளுக்கு ஒரு நிதியை ஒதுக்க முடியும். திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்த கட்டுப்பாடும் பன்னாட்டு அனுபவமும் கொண்ட தொண்டு நிறுவனம் ஒன்றை அடையாளம் காட்டவும் செய்தோம். எந்தப் பிரதிவினையும் இல்லை. இந்தப் புதிரின் குரூரமான முடிச்சு 2018 கேரளப் பெருவெள்ளத்தின்போது அவிழ்ந்தது. தேசியம், கூட்டாட்சி, குடியாட்சி மதிப்பீடுகளெல்லாம் நொடிப்பொழுதில் பொசுங்கி வீழ்ந்த தருணம் அது.

‘பட்டேல் சிலை நிறுவ மத்திய அரசு செலவிட்டது 3000 கோடி; சிவாஜி சிலை நிறுவ 4000 கோடி; 334 பேரை உயிர்ப்பலி வாங்கிய கேரள பெருவெள்ள நிவாரணமாக வழங்கியதோ வெறும் 600 கோடி’ என்கிறது ஒரு சமூக ஊடகப் பதிவு. வெள்ள நிவாரண நிதி கொடுத்த மாநிலங்களின் ஒப்பீட்டை மற்றொரு பதிவு முன்வைக்கிறது; நிதி வழங்காத மாநிலங்களில் ஆட்சியில் இருப்பது மத்தியில் ஆளும் அதே கட்சி என்கிற துணைக்குறிப்பும் அதனுடன் சேர்ந்துகொள்கிறது. இதற்கெல்லாம் உச்சமாக, ஒரு வளைகுடா நாடு கேரளாவுக்கு வழங்க முன்வந்த 700 கோடி ரூபாய் நிவாரணத்தை ஏற்க மத்திய அரசு தடை விதித்ததாக ஒரு செய்தி வருகிறது.

2004இல் கடல் நிகழ்த்திய சுனாமியைத் தொடர்ந்து நிலத்திலிருந்து கடற்கரையை நோக்கி மனித நேயச் சுனாமி எழுந்தது என்றால் மிகையில்லை. சுனாமிக்குப்பின் 400க்கு மேற்பட்ட தொண்டு முகமைகள் தமிழ்நாட்டுக்கு கடற்கரையில் முகாமிட்டிருந்தன; பன்னாட்டு நிதியங்களிலிருந்து பல கோடிகளைத் திரட்டி மறுவாழ்வு, மறுகட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தன. சுனாமி தமிழ்நாட்டுக் கடற்கரை தழுவிய பாரிய இழப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது உண்மைதான். ஆனால் ஒக்கி கன்னியாகுமரி மாவட்டத்தையே புரட்டிப்போட்ட பேரிடர்; கடல் மரணங்கள் மட்டும் 230ஐத் தாண்டும். இந்தச்சூழலில் எந்தவொரு தொண்டு நிறுவனமும் இங்கு களமிறங்கியதாக காணமுடியவில்லை.

தொண்டு நிறுவனங்களின் மௌனம் பன்னாட்டு நிதியங்களின் மௌனம். இந்நிதியங்கள் அவ்வப்போது தீர்மானிக்கும் இலக்குகளுக்கு உட்பட்டு மட்டுமே நிதி வழங்கப்படுகிறது என்பது தெரிந்த செய்திதான். ‘தென்னிந்திய சமூகங்கள் தன்னிறைவு பெற்றுவிட்டன, அதனால் இனிமேல் வடஇந்தியப் பகுதிகளுக்கு மட்டுமே உதவி வழங்குவோம்’ என்று பன்னாட்டு நிதியங்கள் அறிவித்திருந்த நிலையில், இங்குள்ள பெரும்பான்மையான தொண்டு நிறுவனங்கள் கடையை மூடத் தொடங்கியிருந்தன. இந்த வேளையில்தான் 2004 சுனாமிப் பேரிடர் இந்தியக் கடற்கரைகளைத் தாக்கியது. மறுகட்டுமானப் பணியைப் பங்குபோட்டுக் கொள்வதில் தொண்டு நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி ஏற்படும் அளவுக்கு மிகை எண்ணிக்கையில் முகமைகள் நேரடியாய்க் களமிறங்கியிருந்த அன்றைய சூழலோடு ஒக்கி, கேரள பெருவெள்ளச் சூழல்களை ஒப்பிடத் தோன்றுகிறது.

2018 கேரளப் பெருவெள்ளம் 324 உயிர்களைப் பலிவாங்கியது தவிர, 20,000 கோடி ரூபாய் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பின்னடைவிலிருந்து அம்மாநிலம் மீண்டெழ பொருளாதார 20 ஆண்டுகள் பிடிக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். பெருவெள்ளம் பாதித்த இடுக்கிப் பகுதியில் மறுவாழ்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு தொண்டு நிறுவனச் செயல்பாட்டாளருடன் அண்மையில் உரையாட நேர்ந்தது. அந்தப் பகுதி மக்கள் விவசாயம் செய்பவர்கள். பெருவெள்ளம் வழிந்தோடிய, தேங்கிநின்ற நிலம், அதன் வளமான மேல்மண் அடுக்கையும் கனிம உயிர்ச் சத்துகளையும் இழந்துவிட்டது. அந்த நிலத்தை மீண்டும் விவாசாயத்துக்குத் தகுதிப்படுத்துவது பகீரதப் பாடு. அது சாத்தியப்படும் வரை பாதிக்கப்பட்ட விவசாயக் குடிகளின் தற்காலிக வாழ்வாதாரம் உறுதிசெய்யப்பட வேண்டும். இந்தச் சிக்கலான கட்டத்தில் தொண்டு நிறுவனங்களும் அரசும் களமிறங்கிச் செயல்பட்டிருக்க வேண்டும். இரண்டு தரப்பும் முன்வரவில்லை.

கேரளப் பெருவெள்ளம் கடலில் ஓடிச்சேர்ந்த கடற்கரைப் பகுதிகளில் குடியிருப்புகளுக்கு நேர்ந்த பெரும் சேதங்களை யாரும் ஏறிட்டுப் பார்க்கவில்லை. மீட்புப் பணிக்கு மீனவர்கள் எடுத்துச் சென்ற இயந்திரப் படகுகளுக்கு நேர்ந்த சேதாரங்களுக்கு இழப்பீடும் இதுவரை வழங்கப்படவில்லை. இந்தப் புறக்கணிப்புகளுடன் அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் அடிப்படைவாதப் பரப்புரைகளை நாம் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. அடித்தள மக்களுக்கு எதிராக இயங்கிவரும் நிறுவன வெறுப்பரசியலானது, சமூக செயல்பாட்டாளர்கள், ஊடகர்கள், அறிவுத்துறையினர் எல்லோரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

தொண்டு நிறுவனங்கள் பணிசெய்யக் களத்துக்கு வரவில்லை என்னும் உண்மைக்குப் பின்னால் ஆட்சியாளர்களின் கை இருக்கக்கூடும். பெருவணிக நிறுவனங்களின் புறக்கணிப்புக்கு பின்னால் மேட்டிமைச் சாதிகளும் மதவாதிகளும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். பெருநிறுவன சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility- CSR) என்னும் நடைமுறையின் அடிப்படையில் பெருநிறுவனங்கள் யார்யாருக்கு, என்னென்ன திட்டங்களுக்கு உதவவேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரம், செல்வாக்கு அதன் தலைமைகள், வழிகாட்டிகள், தணிக்கையாளர்களிடம் உள்ளது.
நிதி வழங்கும் பன்னாட்டு நிறுவனங்களும் தொண்டு நிறுவனங்களும் பன்னாட்டுப் பெருமுதலாளிய நிறுவனங்களின் பினாமிகளாகவே இயங்குகின்றன. இங்கு நிதிதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. நிதிகளின் பின்னால் நிபந்தனைகளின் தூண்டில்கள் இணைக்கப்பட்டுள்ளன. கடல் கடந்த மனிதநேய நடவடிக்கையாய்ப் பாவனை செய்யப்படும் பல நிதியளிப்புகளுக்குப் பின்னால் அழிவுத் திட்டங்கள் ஒளிந்திருக்கின்றன. இயற்கை வளங்களை, மண்ணின் உற்பத்தித் திறனை, மக்களின் சுயசார்பை அடியோடு அழித்துவிடும் திட்டங்கள் காலனியத்திலிருந்து விடுதலையடைந்த வளரும் நாடுகளில் சந்தடியின்றி அரங்கேற்றப்படுகின்றன. கொடையரசியலின் குரூரம் இதிலிருந்து தோற்றம் கொள்கிறது. சமய நிறுவனங்கள் இதில் விதிவிலக்கல்ல.

இந்தியாவில் 400 பேருக்கு ஒரு தொண்டு நிறுவனம் இருப்பதாக ஒரு 2013 புள்ளிவிவரம் சொல்கிறது. இதில் பெரும்பாலானவை எப்போதாவது கிடைக்கும் பெருநிதிகளை நம்பி மலைப்பாம்பு போலக் காத்துக் கிடப்பவை. பெருநிதியின் மடைகள் திறக்க வேண்டும் என்றால் அவ்வப்போது பேரிடர்கள் நிகழவேண்டும், பெருந்தொகை மரணம் போன்ற மானுடப் பேரவலங்கள் நேரவேண்டும். பெருநிதிகள் காலணி என்றால் மக்கள் கால்கள், தொண்டு நிறுவனங்களுக்குக் காலைவிட காலணிதான் முக்கியம். சிறு கூலியைப் பெற்றுக்கொண்டு பன்னாட்டு நிதியங்களை மகிழ்விக்கும் திட்ட அறிக்கைகளைத் தயாரித்தளிக்கும் பெட்டிக்கடை விற்பன்னர்கள் நகரத்தின் சந்துகளில் நிறையப்பேர் இருக்கிறார்கள். தென்னிந்தியா தன்னிறைவு பெற்றதான தோற்றத்தை ஏற்படுத்தியவர்கள் இந்த விற்பன்னர்கள்தான். தென் தமிழகத்தில் பிழைப்பற்றுக் கிடந்த பலரை 2004 சுனாமி கல்வி வள்ளல்களாக்கிய கதையை ஒரு காப்பியமாய் வடித்துவிடலாம். அவர்களில் பலர் உயர்தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலாளிகளாகிவிட்டனர். அவர்களைப் பொறுத்தவரை இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் அவர்கள் நுழைந்த அடித்தளச் சமூகங்கள் இனிமேல் இழப்பதற்கு ஒன்றுமில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன.

இது தொடர்பாக இன்னொரு செய்தியை இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டும். 2014 நவம்பரில் குஜராத் பேரிடர் மேலாண்மை ஆணையஇது தொடர்பாக இன்னொரு செய்தியை இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டும். 2014 நவம்பரில் குஜராத் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அழைப்பின்பேரில் 2001 பூஜ் நிலநடுக்க மறுகட்டுமானத்தை பார்வையிடச் சென்றிருந்தேன். தமிழ்நாடு சுனாமி மறுகட்டுமானத்தின் வீழ்ச்சி குறித்து காந்திநகரில் நான் உரை நிகழ்த்தியபோது தொண்டு நிறுவன பிரதிநிதிகள் இருவர் கலந்து கொண்டிருந்தனர். தொண்டு நிறுவன இடையீடுகளை முன்முடிவோடு நான் அணுகுவதாய் அதிலொருவர் கடுமையாக ஆட்சேபித்தார். குஜராத்தில் அப்படியில்லை என்றார். நான் சொன்னேன்-

“உங்கள் கூற்று சரிதான். 2001 பூஜ் மறுகட்டுமானத்தின் வெற்றி, 2004 தமிழ்நாடு சுனாமி மறுகட்டுமானத்தின் பெருந்தோல்வி- இரண்டுக்கும் காரணி ஒன்றுதான்: பூஜ் மறுகட்டுமானம் முழுக்க முழுக்க மக்களால் தீர்மானிக்கப்பட்டது, சுனாமி மறுகட்டுமானம் தொண்டு நிறுவனங்களால் திணிக்கப்பட்டது. அது மட்டுமல்ல, சுனாமி மறுவாழ்வுக்காக உலக வங்கியிலிருந்து பெறப்பட்ட 2000 கோடி கடன் பணம் மடை மாற்றம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டுக் கடற்கரைக்கு நேர்ந்த அவலத்தை நீங்களே நேரில் பார்க்கலாம், உங்களைக் கடற்கரைக்கு நானே அழைத்துச் செல்கிறேன்.”

சுனாமி மறுகட்டுமானத் திட்டங்களை முன்வைத்து தொண்டு நிறுவனங்கள் மீனவர்கள்மீது நிகழ்த்திச் சென்ற மிகப்பெரிய தாக்குதல், அவர்களின் சமூகப் பிணைப்பை, பொருளாதாரத் தற்சார்பை, எதிர்ப்புத் திறனை அழித்தது; மெல்ல மெல்ல வளர்ந்துவந்த மக்கள் இயக்கங்களை மண்ணைக் கவ்வ வைத்தது. நிறுவன சமயங்களும் தொண்டு முகமைகளும் மக்களின் உணர்வெழுச்சியின் தணிப்பான்களாகச் செயல்பட்டன, மறுகாலனியத்தின் மாறுபட்ட கைகளாக ஒரே வேலையை மாறுபட்ட உத்திகளுடன் அவை எப்படி மேற்கொள்ளுகின்றன என்பது வெகு நுட்பமான கலை!

300 பேரைப் பலிகொண்ட ஓக்கியோ, 334 பேரைப் பலிவாங்கிய கேரள வெள்ளப் பெருக்கோ தேசியப் பேரிடராக அறிவிக்கப்படவில்லை என்பது அரசவன்மத்தின் சூட்சுமமாகவே தெரிகிறது. ஒக்கிப் பேரிடர்ச் சூழலில் வேணாட்டுக் கடற்கரை மக்கள் “எங்களைப் பழையபடி கேரளாவோடு இணைத்துவிடுங்கள்’ என்று கதறினர். ‘அது ஆட்சியாளர்களிடம் நம்பிக்கையற்றுப்போன கையறுநிலை” என்று தென்னெல்லைப் போராட்ட தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். இயற்கைப் பேரிடர்களை அடித்தள மக்கள் மீதான உளவியல் போராக முன்னெடுக்கும் குரூர மனநிலை, அரசவன்மம் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்டுவிட்டால் அடித்தள மக்களுக்குப் போக்கிடமேது? குடியாட்சியின் பெறுமதிதான் என்ன?

நாட்டின் பெருந்தொழில் நிறுவனங்களிடம் காந்தி ‘அறங்காவலர்’ கருதுகோளை முன்வைத்ததன் பின்னாலிருந்த தார்மிகக் கருத்தியல்- ‘சமூகம் தனக்கு அளித்ததில் ஒரு பகுதியையேனும் சமூகத்துக்குத் திருப்பியளிப்பது’ என்பது. உதவி பெறத் தகுதியானவர்களுக்கு அவ்வுதவி தேவையுறும் தருணத்தில் கொடுப்பதே ஈகை அறம்; கறட்டுச் சித்தாந்தங்களைச் சொல்லி அதைத் தராமல் தவிர்ப்பதோ, தடுப்பதோ அல்ல. அண்மைக் காலப் பேரிடர்களின்போது உதவ முனைந்தவர்களை இடைமறித்த கொடுமை பேரிடரைவிடப் பெருத்த அவலம்! துடைக்க முடியாத வரலாற்றுக்கு கறை!
பட்டேல் சிலை நிறுவுவதற்கு 2225 கோடிப்பணம் வழங்கியது இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், எண்ணெய்- இயற்கை எரிவாய்வு ஆணையம் உள்ளிட்ட ஒன்பது பொதுத்துறை பெருநிறுவனங்கள். மய்ய அரசின் வரிவிலக்களிக்கப்பட்ட பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து இந்தத்தொகை அளிக்கப்பட்டுள்ளது என்பது அதைவிட வருத்தமளிக்கும் செய்தி. இந்நிறுவனங்களில் ஒன்றுகூட ஒக்கி, கேரளப் பெருவெள்ளம் போன்ற பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வரவில்லை.

“கடந்த ஐந்தாண்டுகளில் பிரிட்டன் மக்களின் வரிப்பணமான 9000 கோடி ரூபாயை இந்தியா வாங்கியுள்ளது. பெண்ணுரிமை பிரச்சினைகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள், மத சகிப்புத்தன்மை உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களுக்காக நிதி பெற்றுக்கொள்ளும் இந்திய அரசு 3000 கோடியைச் சிலைக்காகச் செலவிட்டிருப்பது கேலிக்கூத்து. இனிமேல் பிரிட்டன் இந்தியாவுக்கு நிதி வழங்கக்கூடாது” என்று பிரிட்டன் எம்பி பீட்டர் போன் அண்மையில் குறிப்பிட்டுள்ளார்.

உயிர் ஈகம் செய்த செயல்பாட்டாளர்கள் கவுரி லங்கேஷ், கல்புர்கி போலவே திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் சமூகத்தின் மனசாட்சியாக நின்று பொதுவெளியில் இதுபோன்ற கூர்மையான கேள்விகளை எழுப்புகிறார். ‘வேளாண் நெருக்கடியும் வறுமையும் நாட்டுமக்களைப் பீடித்துக் கொண்டிருக்கும் வேளையில் நம் வரிப்பணம் 30௦௦ கோடியை ஒரு சிலைக்காகச் செலவிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை’ என்னும் அவரது கருத்து மக்கள் உணர்வின் பிரதிபலிப்பே.

நம் குடியாட்சிச் சூழலில் வரலாறு கண்டிராத பீதி விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது பேரினவாதத்தில் நிலைகொள்கிறது. பேரினவாதம் நாடுகளைத் துண்டாடவே வழிகோலியுள்ளது. காற்றை விதைத்தவனின் கதை நினைவுக்கு வருகிறது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பது வரலாறு. மனித நேயத்தை விஞ்சிய ஆன்மிகம் ஏது? தொழில் நிமித்தமாக மரணத்தை அன்றாடம் எதிர்கொள்ளும் கடல் பழங்குடிச் சமூகம் மனித உயிரின் மதிப்பை நன்கறியும். அந்தச் சமூகம் பாரம்பரியமாக நீரோடு உறவு பேணுவதும்கூட. அதன் காரணமாகவே தன்னுயிரைச் சற்றும் பொருட்படுத்தாது பேரிடரில் சிக்கியிருந்தோரை மீட்டுக் கரைசேர்க்க அவர்களால் முடிந்தது. 1992 குழித்துறையாறு வெள்ளப்பெருக்கு, 2015 சென்னை வெள்ளம், 2016 நீலம் புயல் கப்பல் பணியாளர் மீட்பு தொடங்கி 2018 ஆகஸ்ட் கேரளப் பெருவெள்ளம் வரை கடல் பழங்குடிகள் மானுட அறத்தை மீண்டும் மீண்டும் நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றனர். அறிவு மேட்டிமையைக் கடந்து இம்மனித நேயத்தை மீனவ சகோதரர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். 
கட்டுரையாளர் பேராசிரியர், கடல் சூழலியல், வள அரசியல் ஆய்வாளர்.

மோகன் பகவத் பேசியதன் பொருள் என்ன?

தூத்துக்குடி படுகொலைகள்: அற வீழ்ச்சியின் அதல பாதாளம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here