இம்சை அரசன் 24 ஆம் புலிகேசியில் நடிக்க முடியாது – வடிவேலு கடிதம்

0
83
Vadivelu

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகமான இம்வை அரசன் 24 ஆம் புலிகேசியில் நடிக்க முடியாது என்று வடிவேலு தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

2006 இல் வெளியான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி வெற்றிப்படமாக அமைந்தது. வடிவேலு நாயகனாக நடித்த முதல் படம் அது. ஷங்கர் தயாரிக்க, சிம்புதேவன் படத்தை இயக்கினார்.

அதன் இரண்டாம் பாகம், இம்சை அரசன் 24 ஆம் புலிகேசியை தயாரிக்க ஷங்கரும், லைகாவும் முன்வந்தனர். சிம்புதேவனே இரண்டாம் பாகத்தை இயக்குவது என முடிவானது. வடிவேலு நாயகன். சில தினங்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட வடிவேலு அதன் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. பல்வேறு பிரச்சனைகள். ஷங்கர் இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தார். விளக்கம் கேட்டு வடிவேலுக்கு இருமுறை கடிதம் அனுப்பினர். தென்னிந்திய நடிகர் சங்கமும் கடிதம் அனுப்பியிருந்த நிலையில், தற்போது வடிவேலு விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளார்.

“இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் நடிக்க 1-6-2016 இல் ஒப்புக் கொண்டேன். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் படத்தை முடித்துவிடுவதாகவும், அதுவரை வேறெந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டாம் என்றும் என்னிடம் உறுதி அளித்ததால், வேறு படங்களில் நடிப்பதை நான் தவிர்த்தேன்.

ஆனால், டிசம்பர் 2016 வரை படத்தைத் தொடங்காமலே காலம் தாழ்த்தினர். இருந்தாலும், தயாரிப்பாளர் மற்றும் சினிமா தொழிலின் நலன் கருதி, அதன்பிறகும் பல்வேறு தேதிகளில் அந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தேன். இந்நிலையில், என்னுடைய பிரத்யேக ஆடை வடிவமைப்பாளரை எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் நீக்கியது.

அத்துடன், கெட்ட நோக்கத்தோடு எனது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தைக் கொடுத்து, ஏதோ எனக்கு இந்த ஒரு படத்தின் மூலம்தான் சினிமா உலகில் புகழ் ஏற்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

நான் நடித்துத் தர மறுத்திருந்தால், பட நிறுவனம் டிசம்பர் 2016 க்குள் ஏன் புகார் தரவில்லை? ஒப்பந்த காலம் முடிந்து ஒரு வருடத்திற்குப் பிறகு கெட்ட நோக்கோடு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு, 2016 – 2017 ஆண்டு காலங்களில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தேன். இதனால் எனக்கு பொருளாதார இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டது.

இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் என்னை வற்புறுத்துவதற்கு முன்பு, என்னை அழைத்து கருத்து கேட்காதது விதிகளுக்கு முரணானது. இந்தப் படத்தில் நாசர் நடிப்பதால், நடிகர் சங்க நலனுக்காக அவரால் செயல்பட முடியாத நிலைமை உள்ளது. இதில் தொடர்ந்து நடித்தால், நான் ஒப்பந்தமாகி உள்ள வேறு படங்கள் பாதிக்கப்படும்.

பொருளாதார, குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால், இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் மேற்கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என அக்கடித்தத்தில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஸ்ரீரெட்டியின் செக்ஸ் புகார் – சிக்கிய பிரபல இயக்குனர்

இதையும் படியுங்கள்: #NoIPLinChennai: சோறா, ஸ்கோரா? தெறிக்கவிட்ட தமிழ் மக்கள்

இதையும் படியுங்கள்: அசிஃபாவை கொன்றது சரியே” – சமூக ஊடகத்தில் பதிவிட்டவரை பணி நீக்கம் செய்த கோடக் மஹிந்திரா வங்கி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்