இப்போது தாக்கம்: சுனாமியால் பாதிக்கப்பட்ட சண்முகவேலுவுக்கு வீடு கட்ட நிலம் வழங்கியது தமிழக அரசு

0
444
சுனாமியால் மணலில் புதைக்கப்பட்டு பின்னர் உயிர் பிழைத்த சண்முகவேலு.

ஆழிப்பேரலையால் மணலுக்குள் புதையுண்டு உயிர் பிழைத்தவர் சண்முகவேலு; சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கானத்தூர் ரெட்டிக்குப்பத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த இவரை 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதியன்று ஆழிப்பேரலை தாக்கியது; மீன்பிடிப் படகுகளில் உதவியாளராக செல்லும் இவர் அந்தக் காலையில் கடற்கரையிலிருந்தார்; சுனாமி பேரலை இவரைக் கடல் மணலுக்குள் புதைத்துவிட்டுச் சென்றது; இறந்தவர் என்று கருதப்பட்ட இவரது உடலில் உயிர் ஒட்டிக்கொண்டிருப்பதை சிலர் கவனித்தார்கள்; சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோமா மயக்கத்திலிருந்து மீண்டு மூன்று மாதங்களுக்குப் பின் உலகைப் பார்த்தார் இவர்; அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெங்கடேசனும் இவருக்கு வீடு கட்ட நிலம் வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டார்கள். 12 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத இந்த ஆணை இப்போது டாட் காமின் தொடர் செய்தி அழுத்தத்தால் நிறைவேறியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி திங்கள் கிழமையன்று (டிசம்பர் 26, 2016) சண்முகவேலுவை அழைத்து இரண்டரை சென்ட் வீட்டுமனைக்கான பட்டாவை வழங்கியுள்ளார். திருப்போரூருக்கும் செங்கல்பட்டுக்கும் நடுவே முள்ளிப்பாக்கம் கிராமத்தில் வீடு கட்டுவதற்கான நிலம் வழங்கப்பட்டதில் சண்முகவேலு பூரித்துப் போயிருக்கிறார்; ”இப்போது டாட் காம் முதலிய ஊடகங்களின் தொடர் ஆதரவினால் இது நடந்தது; ஊடகங்களுக்கு எனது குடும்பத்தார் சார்பாக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என்று அவர் கூறினார்.

இதையும் பாருங்கள்: ஆழிப்பேரலை: 12 ஆண்டுகளாகியும் தீராத சோகம்

இதையும் படியுங்கள்: சுனாமியால் பாதிக்கப்பட்டவரின் கதை

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்