(ஆகஸ்ட் 15, 2015இல் வெளியான தலையங்கம் மறுபிரசுரமாகிறது.)

”அநேக பத்திரிகைகள் நமது நாட்டிடை இருந்தாலும் அவைகள் தங்கள் மனசாட்சிக்கு உண்மையென்று பட்டதைத் தெரிவிக்க அஞ்சுகின்றன. அதனால்தான் இப்பத்திரிகையை (குடி அரசு) ஆரம்பிக்கிறேன். மற்ற பத்திரிகையைப்போல் இல்லாமல் மனதில் பட்டதைத் தைரியமாய் பொதுஜனங்களுக்கு உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டும் என்பது எனது அபிப்ராயம்.” – இது குடி அரசு பத்திரிகை ஆரம்பித்த காரணத்தை விளக்கி பெரியார் ஈ.வெ.ராமசாமி சொன்னது.
குடி அரசு பத்திரிகையில் தலையங்கத்திற்கு மேல் இந்தவொரு பாடலையும் பெரியார் இடம்பெறச் செய்திருந்தார்:

அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி
அரும்பசி யெவர்க்கு மாற்றி
மனத்துள்ளே பேதா பேதம்
வஞ்சகம் பொய் களவு சூது
சினத்தையும் தவிர்ப்பாயாகில்
செய்தவம் வேறொன் றுண்டோ?
உனக்கிது உறுதியான
உபதேசம் ஆகுந்தானே!

காலந்தோறும் தமிழ் ஊடகவியலில் வெற்றிடங்கள் உண்டாவதும் அது சிலரால் இட்டு நிரப்பப்படுவதும் நிகழ்ந்து வருகிறது. உங்களது கையடக்கக் கருவிகளில் தரமான தமிழ் ஊடகவியலை முன்னிறுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது; அங்குதான் “இப்போது” தனது பங்களிப்பை முன்வைக்கிறது. உலகம் முழுவதும் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு இன்றைக்கு ஊடகம் கைகளில் செல்பேசி வடிவத்தில் வந்திருக்கிறது. உங்கள் செல்பேசித் திரைகளில் ippodhu.com என்று டைப் செய்து Add to Home Screen கொடுத்தால் “இப்போது” செய்திப்புறா எப்போதும் உங்களுடன் பயணம் செய்யும்; ஆப்பிள் கருவிகளில் Open in Safari கொடுத்து Add to Home Screen செய்துகொள்ளலாம். இப்போது டாட் காம் உங்களுக்குப் புதிய, தனித்துவமான செய்தி அனுபவத்தைத் தரும்; கூகுள் ப்ளே ஸ்டோரிலும் ஆப்பிள் ஸ்டோரிலும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும் IPPODHU செயலி, எல்லா மக்களும் சுதந்திரமாக தாங்கள் விரும்பியதை உலகிற்குச் சொல்ல உதவுகிறது; தகவல்களை நடவடிக்கைக்கு உட்படுத்தவும் வழிகாட்டுகிறது; ஆதரவு வழங்குகிறவர்களையும் ஆதரவு தேவைப்படுகிறவர்களையும் இணைக்கிறது. https://play.google.com/store/apps/details?id=com.ippodhu, https://itunes.apple.com/us/app/ippodhu/id979193464?Is=1&mt=8

மக்கள் பங்கேற்பு ஊடகவியலைச் சமூக வலைத்தளங்கள் சாத்தியமாக்கியுள்ள நேரம் இது. தமிழ்ச் சமூகத்தின் அரசியலில், அறவியலில், வாழ்வியலில் பன்முகப் பார்வைக்கும் பன்மைப் பண்பாட்டுக்கும் என்றைக்கும் இடம் இருந்திருக்கிறது. ”யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்று பாடிய கணியன் பூங்குன்றனார் “மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்று முடிக்கும் புறநானூற்றுப் பாடல் (192) உலக ஊடகவியலுக்கு வழிகாட்டத்தக்க ஊக்கமான வரிகள்; அதனை அடிநாதமாகக் கொண்டு உலகெங்கும் பரவி வாழும் தமிழ் மக்களை நோக்கி ஆதரவு கேட்டு எங்கள் பயணத்தைத் தொடங்குகிறோம்; ”எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே” என்று பாடிய அவ்வையாரின் உலகப் பார்வையோடு உங்கள் கைகளுக்குக் குடி வருகிறோம்.

ippodhu logo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here