இப்படை வெல்லும் – விமர்சனம்

0
319
Manjima Mohan and Udhayanidhi Stalin

உதயநிதி நடிப்பில் கடைசியாகப் பார்த்த படம், பொதுவாக எம்மனசு தங்கம். அந்த அனுபவத்தை நினைத்து பயந்து கொண்டே போனால்…

நமது கமெண்டை கடைசியில் பார்ப்போம் முதலில் கதை.

ஊர் ஊராக குண்டு வைக்கிற வில்லன். அம்மாவும், காதலியுமே உலகம் என்று குடும்பச் சட்டிக்குள் உழலும் ஹீரோ. எதிர்பாராத விபத்தில் வில்லனுக்கு ஹீரோ உதவிச் செய்ய, ஹீரோவை வில்லனின் கூட்டாளியாக்குகிறது போலீஸ். ஷுட்டிங் ஆர்டருடன் துரத்தும் போலீஸிடமிருந்து ஹீரோ எப்படி தப்பிக்கிறான் என்பது கதை.

த்ரில்லர்தான் படத்தின் மெயின் ஜானர். காமெடி இல்லை என்று கோவிச்சுவாங்களோ என்று அவ்வப்போது காமெடியையும் நுழைத்திருக்கிறார் இயக்குனர். காதலியை திருமணம் செய்யவரும் நாளில் உதயநிதிக்கு ஏற்படும் தடங்கல்கள், அதைத் தொடர்ந்து அவர் தீவிரவாதியின் கூட்டாளி என்ற சந்தேக வட்டத்துக்குள் வருவது என முதல்பாதி கொஞ்சம் விறுவிறுப்புடனே செல்கிறது. உதயநிதி கதைக்கு இணையாக வரும் சூரியின் கதையும், அவரது நடிப்பும் படத்தின் ஆரம்பத்துக்கு அழுத்தம் தருகிறது. வில்லனை உதயநிதி நெருங்கும்விதமும், குண்டு வைப்பவர்களை ஒரே இடத்தில் மாட்ட வைப்பதும் ரசனையான உத்தி. படத்தின் பலவீனம்?

உதயநிதிக்கு அவரது அம்மாதான் உலகம். அதை காட்டுவதற்காக வாலன்டைன்ஸ் டே அன்று அம்மாவுக்கு கார்டு தந்து ஐ லவ் யூ சொல்கிறார். அம்மாவை புகழ்ந்து பாட்டு வைத்திருப்பது சரி. அதற்காக அம்மாவை காட்பாதர் கண்மணியே என்று பாடும்போது பார்க்கிற நமக்கு புரையேறுகிறதா இல்லையா. நினைப்பு சரி, அதை செயல்படுத்தியவிதம்தான் மொத்த படத்தின் பலவீனம். ஆமாம், இந்தப் படத்தில் ராதிகா பஸ் ஓட்டுவது எந்தவகையில் கதைக்கு உதவுகிறது?

முதல் படத்தில் பார்த்த நடிப்பையும் திறமையையும் அப்படியே தக்க வைத்திருக்கிறார் உதயநிதி. இன்னும் நாலு படம் பார்த்தால் நமக்கே பிடித்துப் போகலாம். சூரிக்கு குணச்சித்திரமும் காமெடியும் கலந்த வேடம். போலீஸ் கஸ்டடியில் அவர் போடும் பாம் – க்கு சுற்றி நிற்பவர்கள் மூக்கைப் பிடிக்க நாம் சிரிப்பில் வயிற்றைப் பிடிக்கிறேnம்.

உதயநிதியின் காதலியாக வரும் மஞ்சிமா மோகனுக்கு அதிக வேலையில்லை. என்னதான் மக்கு ஹீரோயினாக இருந்தாலும் காதலன் தீவிரவாதி என்றால் உடனே நம்பிவிடுவதா? மஞ்சிமாவின் அசிஸ்டெண்ட் கமிஷனர் அண்ணனாக ஆர்.கே.சுரேஷ். ஹாஸ்பிடலில் உதயநிதியை என்கவுண்டர் பண்ணச் சொல்லும் அவரது திட்டம் அமெச்சூர்த்தனம். மெயின் வில்லன் டேனியல் பாலாஜி. இந்தியாவையே திணறடிக்கும் குண்டுவெடிப்புகளுக்கு காரணகர்த்தா. ஹீரோவையும், போலீஸையும் திணறவிட வேண்டாமா? தேமே என்று மெயில் அனுப்புவதும், மெர்சலாவதுமாக அபார்ட்மெண்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார். படத்தின் இறுதியில் வரும் அந்த பேருந்து காட்சியை ட்ரையேட்டர் ஆங்கிலப்படத்திலிருந்து சுட்டிருக்கிறார்கள். வில்லனும், அவனுடன் உள்ள பெண்ணும் எங்கு செல்கிறார்கள் என்பதை உதயநிதி கண்டுபிடிப்பது அப்படியே தனி ஒருவன்.

இமானின் பின்னணி இசை படத்துக்கு ஆப்டாக பொருந்துகிறது. த்ரில்லர் படங்களுக்கு பாடல்கள் தேவையா என்ற கேள்வியை இந்தப் படம் ஏற்படுத்துகிறது. எடிட்டிங்கில் இன்னும் படத்தை ஷார்ப்பாக்கியிருக்கலாம்.

வில்லன் எதற்காக இந்தியா முழுக்க குண்டுகள் வைக்கிறான்? அவன் முஸ்லீம் இல்லை என்று படத்தின் ஆரம்பத்தில் விஜய் சேதுபதியின் வாய்ஸில் சொல்கிறார்கள். சென்னையில் குண்டு வைக்கும் நால்வருக்கும் இந்து பெயர்கள். ஆனால், டிசம்பர் 6 குண்டுகளை வெடிக்க வைப்பதுதான் அவர்களின் முதல் பிளான். எனில், டிசம்பர் 6 குண்டு வைத்து முஸ்லீம்கள் மீது பழியைப் போட நினைக்கும் இந்து தீவிரவாதிகளா அவர்கள்? எதற்காக வில்லன் குண்டு வைக்கிறான் என்ற அடிப்படை கேள்விக்கு படத்தில் பதிலில்லாதது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

தனியாகப் பார்த்தால் சுமார். இந்த வருடம் வெளியான உதயநிதியின் இரு படங்களுடன் ஒப்பிட்டால் சூப்பர்.

இதையும் படியுங்கள்: கெஜ்ரிவால், பினராயி விஜயனைத் தொடர்ந்து மம்தாவைச் சந்தித்த கமல்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்