மறைந்த முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப்பை காட்டிலும், பிரதமர் நரேந்திர மோடி கொடூரமானவர் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது .

1975 ஆம் ஆண்டு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது தொடர்பாக, காங்கிரஸ் மீதும், இந்திரா காந்தி குடும்பத்தினர் மீதும் பிரதமர் மோடி தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சி இவ்வாறு கூறியுள்ளது.

மோடியின் குற்றச்சாட்டுக் குறித்து டில்லியில் அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் –

சர்வாதிகாரி மோடி டில்லி சுல்தான் ஒளரங்கசீப்பைக் காட்டிலும் கொடூரமானவர். அவர் தற்போது, 43 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை குறித்து, நாட்டுக்கு பாடம் நடத்துகிறார். 49 மாதங்களாக , அதாவது நான்காண்டுகள், ஒரு மாதம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை அடிமைப்படுத்தி வைத்துள்ளார்.

மோடியின் தோல்விகளையும், மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்களுக்குக் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை மூடிமறைப்பதற்காக, காங்கிரஸ் மீது அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

பாஜகவின் கருத்துக்களை எதிர்ப்பவர்களை தேச துரோகி என்று பாஜக அரசு கூறுகிறது.மோடி ஆட்சியில் நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை இருக்கிறது. டெல்லி சுல்தான் மோடி, ஒளரங்கசீப்பைக் காட்டிலும் கொடூரமானவர். அவர் தற்போது, 43 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை குறித்து, நாட்டுக்கு பாடம் நடத்துகிறார். இவ்வாறு காங்கிரஸ் மீது தன் கோபத்தைக் காட்டுவதால் , மோடியின் பொய்களுக்கு மூடி போட்டுவிட முடியுமா?

இந்த கால ஒளரங்கசீப்பான மோடி தனது சொந்தக் கட்சியான பாஜகவிலும் ஜனநாயகத்தை அடிமைப்படுத்தி விட்டார். அவர் வரலாறை பேசி தன் பொய்களுக்கு மூடி போட நினைக்கிறார், ஆனால் அவரே வரலாறாக மாற போகிறார் என்பதை மறந்துவிட்டார்.

ஜனநாயகம் குறித்து தனக்கு காங்கிரஸ் பாடம் சொல்லி கொடுக்கத் தேவையில்லை என மோடி தெரிவித்துள்ளார். ஒளரங்கசீப் யாரிடம் இருந்தும் ஒருபோதும் பாடம் கற்றதில்லை. சர்வாதிகாரிகள் யாரிடமும் பாடங்களை கற்றுக் கொள்ள மாட்டார்கள்.அவர்களுக்கு வரலாறுதான், தக்க பாடங்களை கற்பிக்கும். மோடிக்கும் இதேநிலைதான் ஏற்படும்.

மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும், இல்லையெனில் நிதி ஒதுக்கப்பட மாட்டாது என்று மாநிலங்களை பிரதமர் மோடி மிரட்டுகிறார். எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்காக, நாட்டில் ஒருவித அச்சமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த 49 மாதங்களாக அறிவிக்கப்படாத அவசர நிலை இருக்கிறது . பாஜகவின் கருத்துக்களை எதிர்ப்பவர்களுக்கு கொலை மற்றும் பாலியல் மிரட்டல்கள் விடுக்கிறார்கள் . அவர்களை பிரதமர் மோடியும், அவரது அமைச்சர்களும் கண்டு கொள்வதேயில்லை, அவர்களை பின்பற்றுகிறார்கள். கடந்த 49 மாதங்களில், பிரதமர் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்கள் என்பது தெரிய வந்துவிட்டன.

வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம், நாட்டுக்கு திருப்பி கொண்டு வரப்படவில்லை. மோடி அரசின் ஆட்சியின்கீழ் ஜனநாயகம் செத்து கொண்டிருக்கிறது.

43 ஆண்டுகளுக்கு முன்பு, நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டதற்கு ஜனதா கட்சியே காரணம் . அக்கட்சியானது, வசதிப்படைத்தவர்களுக்கு ஆதரவாகவும், ஜமீன்தார்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டது. எனவே, ஏழைகள், தலித்துகள், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள் ஆகியோரின் நலன்களை பாதுகாக்கவே, அப்போது நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது.

மோடியின் வசதிப்படைத்தவர்களுக்கு ஆதரவான அரசும், பெருமுதலாளிகளை பாதுகாக்கிறது.1975ஆம் ஆண்டில் இந்திரா காந்தி அரசு, வறுமைக்கு எதிரான போரை நடத்தியது. வங்கிகளை நலிவடைந்த மக்களும் பயன்படுத்தும் உரிமையை பெற்றுத் தந்தது.

மோடி காங்கிரஸைக் குறைக் கூறுவதால் 2 கோடி இளைஞர்களுக்கு ஆண்டு தோறும் வேலை என்ற அவரின் வாக்குறுதி நிறைவேறிடுமா? அல்லது வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை , நாட்டுக்கு திருப்பி கொண்டு வந்து விடுவாரா? அல்லது பெண்களுக்கு மற்றும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து விடுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

Courtesy : Economic Times

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here