அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி

0
210

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் அத்திவரதர் சயன(படுத்த நிலையில்) கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார். அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக சென்னை மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் நாளுக்கு நாள் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் வெள்ளத்தில் காஞ்சீபுரம் திக்குமுக்காடி வருகிறது.

31-வது நாளான நேற்று அத்திவரதர், மஞ்சள் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுமார் 3 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர். அத்திவரதர், பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சி அளிப்பது நேற்றுடன் நிறைவடைந்தது. அத்திவரதரை சயன கோலத்தில் இதுவரை 48 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 

இந்நிலையில் இன்று முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். சயன கோலத்தில் இருக்கும் அத்திவரதரை நின்ற கோலத்தில் மாற்றுவதற்கு வசதியாக நேற்று மாலை 5 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. தரிசனம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இன்று முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளதால் இதுவரை தரிசனம் செய்யாத பக்தர்கள் மட்டுமின்றி, ஏற்கனவே சயன கோலத்தில் தரிசனம் செய்த பக்தர்களும் நின்ற கோணத்தில் அத்திவரதரை காண்பதற்காக வருவார்கள். இதனால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.