ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் ஆட்டங்களில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களை மாதந்தோறும் கெளரவித்து விருது வழங்கவுள்ளது ஐசிசி.

சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து விதத்திலும் சிறப்பாகச் செயல்படும் வீரர், வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. தங்களுக்கு விருப்பமான வீரர், வீராங்கனைகளுக்கு அந்த விருது கிடைக்கச் செய்யும் வகையில் ரசிகர்கள் ஆன்லைன் மூலமாக வாக்குகளை செலுத்தலாம்.

முன்னாள் வீரா்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் அடங்கிய ஐசிசியின் வாக்கு செலுத்துதல் அகாடமியும் ரசிகர்களுடன் இதில் இணைந்து செயல்படும். விருதுக்கு தகுதியான நபர்கள், களத்தில் செயல்பட்டது, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் வெளிப்படுத்திய ஆட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஐசிசியின் விருதுகள் பரிந்துரை குழுவால் தீா்மானிக்கப்படுவார்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது. வெற்றியாளா்கள் ஒவ்வொரு மாதத்திலும் அதன் 2-ஆவது திங்கள்கிழமை அறிவிக்கப்படவுள்ளனர்.

மாதத்தின் சிறந்த வீரா் விருது முதல் முறையாக வழங்கப்படவுள்ள நிலையில், அந்த விருதுக்காக இந்திய வீரா்களான ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ், நடராஜன் ஆகியோரின் பெயா்கள் பரிசீலனையில் உள்ளன. சமீபத்தில் நிறைவடைந்த ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதன் அடிப்படையில் அவா்கள் பெயா்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

இது தவிர, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஆஸ்திரேலிய வீரா் ஸ்டீவன் ஸ்மித், ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குா்பாஸ், தென் ஆப்பிரிக்க வீரா்கள் மாரிஸானே காப், நாடினே டி கிளொக் ஆகியோரின் பெயரும் பரிசீலனையில் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here