வடகொரியாவிடம் இருந்து அமெரிக்காவுக்கு அணுசக்தி அச்சுறுத்தல் இனி இருக்காது. நிம்மதியாக இருங்கள் என்று கிம் ஜாங் உன் உடனான சந்திப்புக்கு பின்னர் நாடு திரும்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவீட் செய்துள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, அமெரிக்கா – வடகொரியா இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை உள்பட பெரும்பாலான உலக நாடுகளும் வரவேற்று தமது மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளன.

வரலாற்றில் எழுதக்கூடிய இந்த சந்திப்புக்கு உலக நாடுகள் அனைத்தும் வரவேற்பை தெரிவித்தன. ஈரான் உள்ளிட்ட அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் மட்டும் வடகொரியா இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விமர்சித்தன. நேற்று, சந்திப்பு முடிந்ததும் டிரம்ப் அமெரிக்காவுக்கு திரும்பினார்.

இன்று மாலை வாஷிங்டனில் தரையிறங்கிய டிரம்ப், தனத் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-

ஒரு நீண்ட பயணத்திற்கு பின்னர் சற்று நேரத்திற்கு முன்னதாக தரையிறங்கினேன். ஆனால், நான் பதவியேற்ற நாளை விட தற்போது அனைவரும் பாதுகாப்பாக உணர்வார்கள். இனி வடகொரியாவிடம் இருந்து எந்த அணுசக்தி அச்சுறுத்தல் இருக்காது. நிம்மதியாக இருங்கள். கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு சிறந்த அனுபவமாக இருந்தது. வடகொரியாவுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்