13 வருடங்களுக்குப் பிறகு தனுஷுடன் இணையும் சினேகா

தனுஷ், சினேகா புதுப்பேட்டை படத்தில் இணைந்து நடித்தனர். இப்போது 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இவர்கள் இணையும் படத்தை துரை செந்தில்குமார் இயக்க, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. தொடரி படத்தின் தோல்வியை சமன் செய்ய இந்தப் படத்தில் தனுஷ் (சம்பளம் வாங்கி) நடிக்கிறார். தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக்கை நேற்று வெளியிட்டனர். படத்துக்கு பட்டாஸ் என பெயர் வைத்துள்ளனர். இதுதவிர வெற்றிமாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் அசுரன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அடுத்த மாதம் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் படம் லண்டனில் தொடங்குகிறது. அத்துடன் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஹிர்த்திக் ரோஷனுடன் ஒரு இந்திப் படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார்.

சிவகார்த்திகேயனின் ஹீரோ… ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்புத்திரை பி.எஸ்.மித்ரன் ஹீரோ என்ற படத்தை இயக்கி வருகிறார். கேஎஸ்ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் இசை. இந்தப் படம் டிசம்பர் 20 ஆம் தேதி தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் என சிவகார்த்திகேயனின் சமீபத்திய படங்கள் சுமாராகப் போன நிலையில் ஹீரோ படம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடம் இந்தியாவில் அதிகம் வசூலித்த மூன்று ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்களின் பெரும் சந்தையாக இந்தியா மாறி வருகிறது. இந்த வருடம் வெளியான ஹாலிவுட் படங்களில் டாப் 3 இல் இடம்பிடித்த படங்களைப் பார்க்கலாம். மூன்றாவது இடத்தில் கேப்டன் மார்வெல் உள்ளது. இந்தப் படம் இந்தியாவில் 85.50 கோடிகளை வசூலித்தது. தி லயன் கிங் இரண்டாவது இடம். இதுவரை சுமார் 100 கோடிகளை வசூலித்து இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படங்கள் எதுவும் எட்ட முடியாத உயரத்தில் அவெஞ்சர்ஸ் – என்ட்கேம் உள்ளது. இந்தப் படம் இந்தியாவில் 367 கோடிகளை வசூலித்துள்ளது. இது தி ஜங்கிள் புக் படத்தைவிட அதிகம். பாஸ்ட் அண்ட் பியூரியஸின் ஒன்பதாவது பாகம் உள்பட பல முக்கிய படங்கள் இந்த வருடம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் படத்தில் நடிக்கும் பார்த்திபன்

மணிரத்னம் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கிறார். விக்ரம், நயன்தாரா, ஐஸ்வர்யா ராய் இதில் நடிப்பதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் பார்த்திபனும் நடிக்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.